பீகார் | தங்கை பசிக்காக திருடிய சிறுவன்.. 2 நாட்கள் பாலியல் வன்கொடுமை! கஞ்சா போதை நபர் கைது!
பீகார் மாநிலம் நாளந்தாவில் நடந்த அதிர்ச்சிக்குரிய ச்ம்பவம் வெளிவந்துள்ளது. கடையில் திருடியதாக ஒரு கடைக்காரரும் அவரது மனைவியும், மைனர் சகோதரனையும் சகோதரியையும் இரண்டு நாட்கள் சிறைபிடித்து, சங்கிலியால் கட்டிவைத்து அடித்து, துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
கடையில் சுமார் 70ஆயிரம் ரூபாய் திருடியதாக கடைக்காரர் குற்றஞ்சாட்டியதன் பேரில் சிறுவர் சிறுமியர் அடித்து சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை உதவி எண்ணிற்கு ஊரில் உள்ள நபர் ஒருவர் தகவல் கொடுத்ததால் விசயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பீகார் மாநிலம் நாளந்தாவில் எட்வாரி பஜார் பகுதியில் உள்ள கடை ஒன்றில் வேலை கேட்டு மைனர் சகோதரனும், சகோதரியும் வந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது சகோதரி பசிக்கிறது என்று கேட்டதால் சிறுவன் திருடியதாக, அவருடைய சகோதரி போலீஸாரிடம் கூறியுள்ளார். சிறுவர்களுக்கு தந்தை இல்லை என்பதும், தாயும் வீட்டுவேலை பார்த்துவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் கடையில் 70ஆயிரம் திருடியதாக சிறுவர்களை வீட்டிற்கு அழைத்துச்சென்ற கடைஉரிமையாளர், சங்கிலியால் கட்டிப்போட்டு, அடித்து சித்ரவதை செய்துள்ளார். மேலும் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலும் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
சிறுவர்களை கொடுமைகளை அறிந்த ஊர் நபர் ஒருவர் 112 என்ற பொதுவான காவல்துறை உதவி எண்ணிற்கு தகவல் கொடுத்ததன் பேரில் விசயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடை உரிமையாளரும், அவருடைய மனைவியும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சிறுவர்களுக்கு பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் நடந்ததா என்ற கேள்விக்கு, தன்னுடைய கணவர் எப்போதும் கஞ்சா போதையில் இருப்பதால் எதுவும் நடந்திருக்கலாம் என மனைவி தெரிவித்ததாக காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது..

