2026 சட்டமன்ற தேர்தல்.. தேர்தல் பணிகளில் திமுக, அதிமுக தீவிரம்!
2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளை அரசியல்கட்சிகள் தொடங்கியுள்ள நிலையில், பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் அதி மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.
2026 தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திராவிட முன்னேற்ற கழகம் பல்வேறு கட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்களுடன் தனித்தனியாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை அறிவாலயத்தில் நடந்த ஒன் டூ ஒன் சந்திப்பில், பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகளை சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், வரும் 15ஆம் தேதி ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மக்களுக்கு அரசுத் துறை சார்ந்த திட்டங்கள் சென்று சேரும் வகையில் முகாம்கள் நடத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரம் காட்டும் இபிஎஸ்
மறுபுறம், 7ஆம் தேதி முதல் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ‘மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் மேற்கொள்ளப்படும் இப்பரப்புரைக்கான பாடல் மற்றும் லோகோவை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. அப்போது பேசிய பழனிசாமி, அதிமுக எப்போதும் மக்களின் குரலாகவே ஒலிக்கும் எனவும் உறுதிபடத் தெரிவித்தார்.
இதேபோன்று, இரண்டு பிரதான கட்சிகளுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி நிர்வாகிகளுடன் ஆலோசனையிலும் ஈடுபட்டு வருகின்றன.