வேளச்சேரி | வங்கியில் 1.25 கிலோ தங்கம் கண்டெடுப்பு; விட்டுச்சென்ற பெண்ணிடம் விசாரணை!
சென்னை, வேளச்சேரியில் உள்ள ஒரு HDFC வங்கியில், கடந்த டிசம்பர் 5ஆம் தேதி பர்தா அணிந்த ஒரு பெண்மணி ஒருவர் வந்து புதிய கணக்கு தொடங்க விரும்புவதாகக் கேட்டுள்ளார். தொடர்ந்து அந்தப் பெண் கணக்கு தொடங்கத் தேவையான ஆவணங்களைக் கொண்டு வருவதாகக் கூறி அங்கிருந்து புறப்பட்டபோது, அவர் கொண்டு வந்த பையை வங்கி வளாகத்தில் வேண்டுமென்றே விட்டுச் சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து, சந்தேகத்தின் பேரில் அந்தப் பையைச் சோதித்த வங்கி நிர்வாகம், அதற்குள் சுமார் 1 கிலோ 250 கிராம் எடையுள்ள தங்கத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தது. தொடர்ந்து, நான்கு நாட்களாகியும் யாரும் அந்தத் தங்கத்தை உரிமைக் கோர வராததால், நேற்று வங்கி நிர்வாகம் சார்பில் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வேளச்சேரி காவல்துறையினர், உடனடியாக விசாரணையைத் தொடங்கினர்.
அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பத்மப்ரியா கடந்த செப்டம்பர் மாதம் வங்கியில் பணியாற்றியபோது, லாக்கரிலிருந்து 250 கிராம் நகையைத் திருடிய வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மேலும், தற்போது கண்டெடுக்கப்பட்ட 1.25 கிலோ தங்கமும் மற்றொரு லாக்கரில் இருந்து எடுக்கப்பட்ட திருட்டுத் தங்கம் என்றும் அதை மீண்டும் வங்கியில் ஒப்படைக்கும் நோக்கத்தோடுதான் பத்மப்ரியா பர்தா அணிந்து சென்று தங்கத்தை வங்கியில் விட்டுச் சென்றார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், திருடுப் போன நகையைத் திருப்பி ஒப்படைக்க முயன்ற முன்னாள் வங்கி மேலாளர் பத்மப்ரியா மற்றும் வங்கி நிர்வாகத்தின் இந்நாள் மேலாளர் ஆகியோரிடம் வேளச்சேரி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

