பெண் நிருபரைப் பார்த்து கண் சிமிட்டிய பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரி? யார் இவர்? #ViralVideo
பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர், அந்நாட்டு பெண் பத்திரிகையாளர் ஒருவரைப் பார்த்து கண் சிமிட்டிய விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி செயல்பட்டு வருகிறது. பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் உள்ளார். அதேநேரத்தில் திருத்தப்பட்ட விதிகளின்படி, நாட்டின் முதல் பாதுகாப்புப் படைகளின் தலைவராக (CDF) ஃபீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சக்திவாய்ந்த பொறுப்பு ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை என மூன்றையும் கட்டுப்படுத்த வழிவகுக்கிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர், அந்நாட்டு பெண் பத்திரிகையாளர் ஒருவரைப் பார்த்து கண் சிமிட்டிய விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளராக லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி உள்ளார். அவர் ஊடகச் சந்திப்பு ஒன்றில், பெண் பத்திரிகையாளர் ஒருவரைப் பார்த்து கண் சிமிட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விசாரணையில் அந்தப் பெண் பத்திரிகையாளரின் பெயர் அப்சா கோமல் எனக் கூறப்படுகிறது. அவர் சம்பவத்தன்று அகமது ஷெரீப்பிடம் இம்ரான் கான் குறித்து கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. அதற்கு அவர், ”இம்ரான் ஒரு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல். அரச விரோதி. டெல்லியின் கைகளில் செயல்படுகிறார். அவர் ஒரு மனநோயாளி" என்று கூறுகிறார். அப்படியே, அவர் சிரித்துக்கொண்டே கோமலைப் பார்த்து கண் சிமிட்டுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து அகமது ஷெரீப்பிற்கு இணையத்திற்கு விமர்சனப் பதிவுகள் கொட்டத் தொடங்கின. ’அவர் ஒரு தொழில்முறை சிப்பாய் அல்ல’, ’இது அவர்களின் இராணுவம் எவ்வளவு தொழில்முறையற்றது என்பதைக் காட்டுகிறது’, ’சீருடையில் இருக்கும் ஒருவர் எப்படி இப்படி பொதுவில் கண் சிமிட்ட முடியும்’, அவர் பாகிஸ்தான் ராணுவத்தின் ஜெனரல்... அவர்கள் இருக்கும் நிலைமை ஆச்சரியமல்ல’ எனப் பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர். அதேநேரத்தில், அவர் உண்மையில் பத்திரிகையாளரைப் பார்த்து கண்சிமிட்டினாரா அல்லது வேறெதுவும் பிரச்னையா என்பது குறித்து சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கவில்லை.
ஆனால், சமீபகாலமாக, பாகிஸ்தான் ராணுவத்தின் உயர்ந்த முகமாக அகமது ஷெரீப் இருக்கிறார். இந்தியாவுக்கு எதிரான வார்த்தைகள், இம்ரான் கானுக்கு எதிரான கருத்துகள் எனப் பேசி நற்பெயரை எடுப்பதன் மூலம் சமீபத்திய மாதங்களில் அவர் பாகிஸ்தானின் பளீச் முகமாக அறியப்படுகிறார். இன்னொரு புறம், அவருடைய பின்னணியும் பெரிதாகப் பேசப்படுகிறது. அவர் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட சுல்தான் பஷிருதீன் மஹ்மூத்தின் மகன் மற்றும் ஒசாமா பின்லேடனின் உதவியாளர் ஆவார்.

