TN Election 2026 | ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை.. அதிமுக or காங்கிரஸ் or யாரை அழைக்கும் தவெக.?
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வரலாறு காணாத மும்முனை போட்டியில், விஜயின் தவெக 30% வாக்குகளுடன் 108 தொகுதிகளில் முன்னிலை பெற்று, திமுக-அதிமுக இல்லாமல் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படுவதால், தொங்கு சட்டசபை சூழலில் தவெக யாரிடம் ஆதரவு கோரப் போகிறது என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் தீவிரமாக எழுந்துள்ளது.
வரலாறு காணாதளவு ஒரு மும்முனை போட்டியை தமிழக அரசியல் களம் கண்டுள்ளது. திமுக, அதிமுக என்ற இருபெரும் திராவிட கட்சிகளே தமிழகத்தின் அரியணையில் மாறிமாறி அமர்ந்த நிலையில், இம்முறை இவ்விரண்டு கட்சிகளையும் ஓரங்கட்டிவிட்டு தனிம்பெருங் கட்சியாக விஜயின் தவெக வரலாறு படைத்துள்ளது.
முதல் தேர்தலிலேயே 30% வாக்குகளை பதிவுசெய்திருக்கும் தவெக 108 தொகுதிகளில் முன்னிலை பெற்று 1967-க்கு பிறகு திமுக, அதிமுக இரண்டில் ஒன்றில்லாமல் தனிபெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில் அதிக இடங்களில் தவெக முன்னிலை பெற்றிருந்தாலும், தனிபெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியமைக்க மற்ற கட்சிகளின் ஆதரவு தேவையாக இருக்கும் என்ற நிலையே இருந்துவருகிறது.
தொங்கு சட்டசபையே ஏற்படும் நிலையில், 118 தொகுதிகள் என்ற பெரும்பான்மையை நிரூபிக்க தவெக என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
தவெகவிற்கு இருக்கும் வழிகள் என்ன..?
தமிழக சட்டமன்ற தேர்தலில் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே மெஜாரிட்டி உடன் ஆட்சி அமைக்க முடியும்; ஆனால் தவெக வசம் தற்போது சுமார் 108 தொகுதிகள் மட்டுமே உள்ளது. மீதம் 10 தொகுதிகள் தேவையாக உள்ள நிலையில் எந்தக் கட்சியில் இருந்து தவெக ஆதரவை கோரப் போகிறது என்பது கேள்வியாக எழுந்துள்ளது.
திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் ஆதரவை கோருமா அல்லது நேரடியாக அதிமுகவிடம் ஆதரவு கோருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே அதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டு பின்பு அது தோல்வியடைந்தது. அதனால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேபோல காங்கிரஸ் தவெக உடன் கூட்டணிக்கு செல்லும் என்ற நிலையே இறுதிவரை நீடித்தது. தற்போது காங்கிரஸ் 5 தொகுதிகளில் வெற்றிபெறும் நிலையில் இருப்பதால், அக்கட்சி தவெகவுக்கு ஆதரவு அளிக்குமா என்ற சூழல் உருவாகியுள்ளது. எப்படி இருப்பினும் தவெகவிற்கு மற்ற கட்சிகளின் ஆதரவு தேவையாகவே உள்ளது.

