திருவள்ளூர் | ’Please Uncle விட்ருங்க..’ 10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. தாய் கண்ணீர்!
தமிழகத்தில் நாளுக்கு நாள் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. அதிலும் சிறுசிறு குழந்தைகளுக்கு இதுபோன்ற குற்றங்கள் நடப்பது நெஞ்சத்தை நடுங்கச்செய்கின்றன.
10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..
திருவள்ளூரில் கடந்த சனிக்கிழமை 10 வயது சிறுமி பள்ளிமுடிந்து செல்லும் போது அடையாளம் தெரியாத நபரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
அரசு பள்ளியில் பயின்றுவரும் சிறுமி, அன்று மதியம் 3 மணிக்கு பள்ளி விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 12 மணிக்கு பள்ளி விடப்பட்டுள்ளது.
வழக்கமாக நாள்தோறும் தனது வீட்டில் இருந்து ரயில் மூலமாக பள்ளி இருக்கும் பகுதிக்கு வந்துவிட்டு மீண்டும் ரயில் மூலமாக வீட்டிற்கு செல்வது வழக்கம். ஆனால் அன்று சிறுமிக்கு மட்டும் முன்கூட்டியே பள்ளி விடப்பட்டதால் ரயிலில் வீட்டிற்கு செல்லவில்லை. தனது அக்கா இருவருக்கும் பள்ளி முடிந்த பிறகு தனது வீட்டிற்கு செல்லலாம், அதுவரை தனது பாட்டி வீட்டில் இருக்கலாம் என்று நினைத்து பாட்டி வீட்டிற்கு சிறுமி நடந்து சென்றுள்ளார். அப்பொழுது தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
தப்பிச் சென்றும் துரத்திதுரத்தி தாக்கிய கொடூரன்..
பாட்டி வீட்டுக்கு பஸ் வசதி இல்லாததால் தனது வீட்டிற்கு செல்லாமல் தனது பாட்டி வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.
சிறுமி தனியாக செல்வதை பார்த்த அடையாளம் தெரியாத நபர், சிறுமியை தூரமாக தூக்கிச்சென்று கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அரை மணி நேரத்திற்கும் மேலாக சிறுமிக்கு இக்கொடுமை சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அங்கிருந்து தப்பி ஓடுவதற்கு சிறுமி இரண்டு முறை முயற்சித்தும் திரும்பத் திரும்ப சிறுமியை துரத்தி பிடித்து தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
கண்ணீருடன் பேசிய தாய்..
காவல் நிலையத்தில் வழக்கு கொடுத்தும் குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று கதறிய தாய், குற்றவாளியை கண்டுபிடித்து சுட்டுக்கொல்ல வேண்டும் என்று கண்ணீருடன் பேசினார்.
மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து பேசிய தாய், “கடந்த சனிக்கிழமை மதியம் பள்ளி முடிந்து பாட்டி வீட்டுக்குச் சென்றபோது, என மகளை அடையாளம் தெரியாத நபர் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். எனது மகள் இப்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எனது மகளை வன்கொடுமை செய்த அந்த நபர் யார் என்று காவல்துறை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. உடடினயாக அந்த நபரை காவல்துறை கண்டுபிடிக்க வேண்டும். எனது மகளுக்கு ஏற்பட்டதுபோல வேறு யாருக்கும் நிகழக்கூடாது. அந்த நபரை சுட்டுக்கொல்ல வேண்டும்” என்று பேசினார்.
மேலும் மகளின் வலியை கண்ணீராய் உதிர்த்த தாய், “Please Uncle விட்ருங்க. Uncle.. என்னை விட்ருங்க Uncle. என்னை அடிக்காதீங்க.. என்னை கஷ்டப்படுத்தாதீங்கன்னு என் பொண்ணு அழுதுருக்கா. ஆனால் கத்தினால் கொலை பண்ணிடுவேன்னு அவன் மிரட்டி இருக்கான். என் பிள்ளைய அடிச்சு, வாய் எல்லாம் ரத்தம் வர வெச்சு பாலியல் வன்கொடுமை செய்திருக்கான்.
என் பொண்ணு அம்மா, அம்மானு கத்திட்டே வந்தாள். என்னம்மானு கேட்டேன். அம்மா.. இந்தமாதிரி ஒரு ஹிந்திக்கார பையன் என்னை Bad Touch பண்ணிட்டான்னு சொன்னாள். அதுக்கப்புறம் பார்த்தால் என் பாப்பா ஆடையெல்லாம் ரத்தம்.. முகமெல்லாம் ரத்தம்.. அவனை சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும், சுட்டுக்கொல்ல வேண்டும்” என கண்ணீருடன் பேசினார்.