சென்னை | இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கோயில் பூசாரி மீது வழக்குப் பதிவு
செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த 27 வயதான இளம் பெண் ஒருவர் அதே பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்றுள்ளார். அப்போது, கோயில் பூசாரி அசோக் பாரதி என்பவருக்கு இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இளம் பெண்ணிடம் தீய சக்திகளை அழிக்க ருத்ராட்ச மணிகளை தருவதாக கூறிய பூசாரி வடபழனியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாக வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம் பெண் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் பாலியல் வன்கொடுமை என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பூசாரி அசோக் பாரதி இளம் பெண்ணின் கணவர் தன்னை தாக்கி ரூபாய் 10 லட்சம் கேட்டு மிரட்டுவதாகவும் பூசாரி தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அவரது கணவருக்கு தெரியவந்ததை அடுத்து அவரது கணவர் பூசாரியை தாக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து பூசாரி முன்கூட்டியே வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தது தெரியவந்தது. இந்நிலையில், பூசாரி அசோக் பாரதி மீது பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து வடப்பழனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.