வேளச்சேரி | மாணவியிடம் பாலியல் சீண்டல்.. ’CHANDRU LAW ACADEMY’ உரிமையாளர் கைது!
சென்னை வேளச்சேரி, அம்பிகா தெருவில் வழக்கறிஞர் சந்திரசேகர் (50), என்பவர் ‘சந்துரு லா அகாடமி (Chandru Law Academy)’ என்ற பெயரில், சட்ட பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறார். இது நிதீபதியாக செல்ல போட்டி தேர்வு எழுதுபவர்களுக்காக நடத்தப்படும் பயிற்சி மையம்.
இந்நிலையில் சந்துரு லா அகாடமி மையத்தில் படிக்கும், 23 வயதுள்ள மாணவி ஒருவர், மையத்தில் உரிமையாளர் சந்திரசேகர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அப்புகாரின் அடிப்படையில் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
உரிமையாளர் கைது..
மாணவி அளித்துள்ள புகாரில், சந்துரு லா அகாடமியின் உரிமையாளர் சந்திரசேகர், மாணவியை தனியாக அழைத்து தகாத வார்த்தையில் பேசி, கார் அனுப்புகிறேன் தனியாக இரவு அலுவலகம் வா என அழைத்துள்ளார். மறுத்ததால், எல்லோர் முன்னிலையிலும் மாணவியை ஒருமையில் பேசியுள்ளார். மையத்தில் இருந்து நின்று விடுகிறேன் பயிற்சி கட்டணத்தை திரும்ப தாருங்கள் என கேட்டபோது, வழக்கறிஞர் பதிவை ரத்துசெய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.
மேலும் பல மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அழைப்பு விடுத்து மிரட்டி வருவதாகவும், அவர் மீதும், அவருக்கு துணையாக இருக்கும் அலுவலக உதவியாளர் மாயா என்பவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவி அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ள வேளச்சேரி போலீஸார், சந்துரு லா அகாடமி (Chandru Law Academy) உரிமையாளர் சந்திரசேகர், மாயா (35) ஆகியோர் மீது, பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த இருவரையும் தேடி வந்த நிலையில் சந்துரு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நபர் மீது ஏற்கனவே மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார்கள் இருந்ததாக கூறப்படுகிறது.