17 வருடத்திற்கு பிறகு சிஎஸ்கேவை வீழ்த்துமா ஆர்சிபி? வரலாற்றை மாற்ற இந்த 3 வீரர்களால் முடியும்!
2025 ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய ரைவல்ரி போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் சேப்பாக்கத்தில் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன.
2024 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஆர்சிபி அணி கோப்பை வெல்லவேண்டும் என நினைத்த பல சிஎஸ்கே ரசிகர்கள் கூட, கடந்த ஐபிஎல்லில் மே 18-ம் தேதி நடந்த லீக் போட்டிக்கு பிறகு ஆர்சிபி அணியின் தோல்விக்காகவே ஒட்டுமொத்த மஞ்சள் படை ரசிகர்களும் காத்திருக்கின்றனர். அதற்கு சரியான இடம் என்றால் அது சென்னை சேப்பாக்கம் மைதானம் மட்டுமே.
இங்கு ஆர்சிபி அணி சென்னை அணிக்கு எதிராக வென்று 17 வருடங்கள் ஆகிறது. 9 முறை இவ்விரு அணிகளும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியிருக்கும் நிலையில், ஆர்சிபி அணி கடைசியாக 2008 ஐபிஎல்லில் நடந்த போட்டியில் மட்டுமே சிஎஸ்கே அணியை வீழ்த்தியுள்ளது.
அதற்குபிறகு ஒருமுறை கூட சேப்பாக்கத்தில் வைத்து ஆர்சிபி அணியால் வீழ்த்த முடியவில்லை. சிஎஸ்கே அணியின் கோட்டையாக சேப்பாக்கம் விளங்கிவரும் நிலையில், சென்னையை வீழ்த்தி வரலாறு படைக்க வேண்டுமானால் 3 ஆர்சிபி வீரர்களிடமிருந்து திறமையான ஆட்டம் வெளிப்பட வேண்டும்.
3 வீரர்களால் வரலாற்றை மாற்ற முடியும்..
சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து சிஎஸ்கே அணியை வீழ்த்துவது என்பது ஆஸ்திரேலியாவை இறுதிப்போட்டியில் வீழ்த்துவதை போல கடினமான ஒரு விசயமாகும். அப்படி வலுவான அணியாக விளங்கும் சிஎஸ்கே அணியை வீழ்த்த வேண்டுமானால், விராட் கோலி என்ற தலைசிறந்த வீரரிடமிருந்து மிகச்சிறந்த இன்னிங்ஸ் வரவேண்டும்.
சிஎஸ்கே அணிக்கு எதிராக 1000 ரன்கள் கடந்த இரண்டே வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் விராட் கோலி மட்டுமே நீடிக்கின்றனர். கடினமான ஒரு அணிக்கு எதிராக 1053 ரன்கள் அடித்திருக்கும் விராட் கோலியிடமிருந்து மிகச்சிறந்த ஆட்டம் வெளிப்பட்டால் சிஎஸ்கேவை ஆர்சிபியால் வீழ்த்த முடியும்.
கோலிக்கு பிறகான வீரராக கேப்டன் ரஜத் பட்டிதார் ஆட்டத்தை மாற்றும் வீரராக பார்க்கப்படுகிறார். ஸ்பின்னர்களுக்கு எதிரான நன்றாக ஸ்ட்ரைக் செய்யும் பேட்ஸ்மேனாக இருக்கும் பட்டிதார், ரவி அஸ்வின், ஜடேஜா, நூர் அகமது என மூன்று சிஎஸ்கே ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடினால் ஆர்சிபி அணியால் வெற்றியை பெற முடியும்.
மூன்றாவது கேம் சேஞ்சர் வீரராக வேகப்பந்துவீச்சாளர் ஹசல்வுட் மாற வாய்ப்பிருக்கிறது. எப்படி கலீல் அகமதுவிற்கு சேப்பாக்கம் மைதானத்தில் பந்து நின்று வருகிறதோ, அதேபோல ஹசல்வுட்டுக்கும் பந்து நின்றுவரவும், அதிகமான பவுன்சர் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. நல்ல ஃபார்மில் இருக்கும் ரச்சின் ரவீந்திரா மற்றும் கேப்டன் ருதுராஜ் இருவரையும் வீழ்த்த வேண்டுமானால் ஹசல்வுட் சிறப்பாக பந்துவீச வேண்டியது அவசியமான ஒன்று.
இவர்களை கடந்து கேம் சேஞ்சராக இடது கை ஸ்பின்னரான க்ருணால் பாண்டியாவும் சிறப்பாக செயல்பட வாய்ப்பு இருக்கிறது. அனைத்தையும் விட ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக சேப்பாக்கம் மைதானம் குறித்து முழுமையாக தெரிந்த லோக்கல் பாய் தினேஷ் கார்த்திக் இருப்பது ஆர்சிபிக்கு இந்தமுறை பெரிய பலமாக அமைய வாய்ப்பு உள்ளது. அவர் ஆர்சிபி அணியின் பேட்டிங் யூனிட்டை சென்னை ஆடுகளத்தில் வழிநடத்துவார் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது.