ஐபிஎல் 2025| சிஎஸ்கே அல்ல மும்பை தான் 6வது கோப்பை வெல்லும்! முன்னாள் ENG கேப்டன் கணிப்பு!
உலகின் பணக்கார கிரிக்கெட் லீக்காக இருந்துவரும் ஐபிஎல் தொடர் 2008 முதல் விளையாடப்பட்டு வருகிறது. 17 வெற்றிகரமான சீசன்களை கடந்து 18வது சீசானாக 2025 ஐபிஎல் தொடர் நடத்தப்பட உள்ளது.
இதில் மிகவும் வெற்றிகரமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் விளங்கிவருகிறது. தோனி தலைமையில் 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 17 சீசன்களில் 10 முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கும், 12 முறை பிளே ஆஃப் சுற்றுக்கும் தகுதிபெற்று வலுவான அணியாக விளங்குகிறது.
அதேபோல மும்பை இந்தியன்ஸ் அணியும் ஐந்து ஐபிஎல் பட்டங்களை வென்று சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளது. மும்பை அணி 6 முறை ஐபிஎல் ஃபைனலுக்கு சென்று 5 முறை கோப்பைகளை வென்று அசத்தியுள்ளது.
மற்ற அணிகளை பொறுத்தவரையில் 3 கோப்பைகளுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3வது இடத்தில் நீடிக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத், டெக்கான் சார்ஜர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் முதலிய அணிகள் தலா 1 முறை கோப்பை வென்று அசத்தியுள்ளன.
உலகின் சிறந்த டி20 கிரிக்கெட் லீக்காக பார்க்கப்படும் ஐபிஎல் தொடரின் 18வது சீசனில் எந்த அணி கோப்பை வெல்லப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்துவருகிறது.
இந்நிலையில் கோப்பை வெல்லப்போகும் அணி எது என்பதை கணித்துள்ளார் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன்.
மும்பை அணியே கோப்பை வெல்லும்..
2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடுகிறது. கொல்கத்தாவை அஜிங்கியா ரஹானேவும், ஆர்சிபியை ரஜத் பட்டிதாரும் வழிநடத்தவிருக்கின்றனர்.
இந்நிலையில் ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னதாக கோப்பை வெல்லப்போகும் அணி, அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தக்கூடிய வீரர்கள் குறித்து கணித்துள்ளார் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன்.
இதுகுறித்து அவர் பதிவிட்டிருக்கும் எக்ஸ் தள பதிவில், ”மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பை வெல்லும்; சுப்மன் கில் அதிக ரன்கள் அடிப்பார்; வருண் சக்கரவர்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார்” என தெரிவித்துள்ளார்.