CSK vs MI
CSK vs MIpt

43 வயதில் மின்னல்வேக (0.12 Secs) ஸ்டம்பிங்! சுழலில் மிரட்டிய NOOR.. MI-க்கு எதிராக சிஎஸ்கே வெற்றி!

2025 ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
Published on

மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது என்றாலே ஐபிஎல் ரசிகர்களுக்கு அதைவிட சுவாரசியமான விசயம் எதுவும் கிடையாது. எப்போதும் கடைசி நேர த்ரில்லர், விறுவிறுப்பான சேஸிங், உயிரை கொடுத்து விளையாடும் வீரர்கள், ரசிகர்களுக்கு இடையேயான வார்த்தை மோதல் என ஐபிஎல் கிரிக்கெட்டின் தலைசிறந்த போட்டிகளை இவ்விரு அணிகளும் விருந்தாக படைத்துள்ளன.

எதனால் இந்த அணிகள் மோதும்போது மட்டும் இப்படி என்றால், இவ்விரு அணிகள் வைத்திருக்கும் தரமும், லெகசியும் அப்படி. ஐபிஎல் வரலாற்றில் ஒரு கோப்பை வெல்வதே குதிரை கொம்பாக இருந்துவரும் சூழலில், தலா 5 கோப்பைகளை வென்று ஐபிஎல் கிரிக்கெட்டையே ஆண்டுவருகின்றன சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள்.

சிஎஸ்கே
சிஎஸ்கே web

இந்த சூழலில் 2025 ஐபிஎல் தொடரின் முதல் மோதலில் ஒருவரை ஒருவர் எதிர்கொண்ட சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.

பவுலிங்கில் மிரட்டிய நூர் அகமது!

கேப்டன் ஹர்திக் பாண்டியா இல்லாமால் மும்பை அணியும், நட்சத்திர பவுலர் பதிரானா இல்லாமல் சிஎஸ்கே அணியும் களம்கண்டன. பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீசியது.

முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய ஹிட்மேன் ரோகித் சர்மாவை 0 ரன்னில் வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார் கலீல் அகமது. முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தாலும் அடுத்தடுத்து பவுண்டரிகளாக விரட்டிய ரிக்கல்டன் மற்றும் வில் ஜாக்ஸ் இருவரும் ரன்களை எடுத்துவர முயற்சி செய்தனர்.

ஆனால் ரிக்கல்டனை கலீல் அகமது போல்டாக்கி வெளியேற்ற, 9 வருடங்களுக்கு பிறகு சிஎஸ்கே அணிக்கு திரும்பிய ரவிச்சந்திரன் அஸ்வின் வில் ஜாக்ஸை அவுட்டாக்கி சிறந்த கம்பேக் கொடுத்தார். 36 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து மும்பை இந்தியன்ஸ் தடுமாற, கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா இருவரும் சிக்சர் பவுண்டரிகளாக விரட்டி ரன்வேகத்தை குறையாமல் பார்த்துக்கொண்டனர்.

சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமது வீசிய பந்தில் சூர்யகுமாரை ஒரு மின்னல்வேக ஸ்டம்பிங்கில் வெளியேற்றிய மகேந்திர சிங் தோனி, 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை உடைத்து விக்கெட்டை எடுத்துவந்தார். தொடர்ந்து சிறப்பாக பந்துவீசிய நூர் அகமது தனது சுழல் மேஜிக்கால் திலக் வர்மா, ராபின் மின்ஸ், நமன் திர் என அடுத்தடுத்து வந்த வீரர்களை வெளியேற்றி கலக்கிப்போட்டார். 4 ஓவரில் 18 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்த நூர் அகமது ஒரு பவுண்டரியை கூட வழங்காமல் தரமான பந்துவீச்சை பதிவுசெய்தார். இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஒரு சிஎஸ்கே ஸ்பின்னரின் சிறந்த பந்துவீச்சாக பதிவுசெய்யப்பட்டது.

நூர் அகமதின் பந்துவீச்சை தாக்குபிடிக்கமுடியாமல் 9 விக்கெட்டுகளை இழந்து முமபை அணி தடுமாற, கடைசியாக வந்து 2 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என பறக்கவிட்ட தீபக் சாஹர், தன்னுடைய பழைய அணிக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தீபக் சாஹர் 15 பந்தில் 28 ரன்கள் அடிக்க 20 ஓவர் முடிவில் 155 ரன்களை எட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி

ருதுராஜ், ரச்சின் அதிரடி.. சிஎஸ்கே வெற்றி!

156 ரன்கள் அடித்தால் வெற்றி என களமிறங்கிய சிஎஸ்கே அணியில் தொடக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திரா மற்றும் திரிப்பாத்தி இருவரும் களம்கண்டனர். பேட்டிங்கில் மிரட்டிய தீபக் சாஹர், பந்துவீச்சிலும் இரண்டாவது ஓவரிலேயே திரிப்பாத்தியை வெளியேற்றி விக்கெட்டை எடுத்துவந்தார்.

விரைவாகவே விக்கெட்டை இழந்தாலும் 3வது வீரராக களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், மும்பை பவுலர்களை துவம்சம் செய்தார். 6 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என நாலாபுறமும் சிதறடித்த ருதுராஜ் 26 பந்தில் 53 ரன்கள் அடித்து கிட்டத்தட்ட போட்டியை சிஎஸ்கே பக்கம் கொண்டுவந்து வெளியேறினார்.

இதற்குபிறகு சிஎஸ்கே எளிதில் வென்றுவிடும் என நினைத்தபோது தான், 24 வயதேயான கேராளாவை சேர்ந்த இளம் ரிஸ்ட் ஸ்பின்னர் விக்னேஷ் புதுர் ‘ருதுராஜ், ஷிவம் துபே, தீபக் ஹுடா’ மூன்று பேரையும் அடுத்தடுத்து வெளியேற்றி ஆட்டத்தில் திருப்பத்தை ஏற்படுத்தினார்.

இன்னும் இரண்டு விக்கெட்டுகள் எளிதில் வீழ்ந்தால் சிஎஸ்கே அணி தடுமாறும் என்ற கட்டத்தில், இந்த பக்கமா அந்த பக்கமா என்ற நிலைமைக்கு போட்டி சென்றது. ஆனால் தொடக்க வீரராக களமிறங்கி கடைசிவரை ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் குவித்த ரச்சின் ரவீந்திரா போட்டியை சிஎஸ்கே அணிக்காக முடித்து கொடுத்தார். 19.1 ஓவரில் 158 ரன்கள் அடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆட்டநாயகனாக சிஎஸ்கே அணிக்காக முதல் போட்டியில் விளையாடிய நூர் அகமது தேர்வுசெய்யப்பட்டார்.

43 வயதில் சூர்யகுமாரை 0.12 வினாடியில் ஸ்டம்பிங் செய்து வெளியேற்றிய எம்எஸ் தோனி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார். இது அவருடைய ஸ்டம்பிங் வாழ்க்கையில் 4வது சிறந்த ஸ்டம்பிங்காக பதிவுசெய்யப்பட்டது. 2018-ல் கீமோ பாலுக்கு எதிராக 0.08 வினாடியிலும், 2012-ல் மிட்செல் மார்ஸுக்கு எதிராக 0.09 வினாடியிலும், 2023-ல் சுப்மன் கில்லுக்கு எதிராக 0.1 வினாடியிலும் ஸ்டம்பிங் செய்து அசத்தியிருக்கும் தோனி, இன்றைய போட்டியில் சூர்யகுமாருக்கு எதிராக 0.12 வினாடியில் ஸ்டம்பிங் செய்து மிரட்டினார். இதைப்பார்த்த ரசிகர்கள் ‘இன்னும் உங்களுக்கு வயசே ஆகல MSD’ என சிலாகித்து வருகின்றனர்.


தோனியின் டாப் 4 மின்னல் வேக ஸ்டம்பிங்!
தோனியின் டாப் 4 மின்னல் வேக ஸ்டம்பிங்!

அடுத்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com