13 or 15? | வயதை குறைத்துச் சொல்லி ஏமாற்றினாரா ’’வைபவ் சூர்யவன்ஷி? - குற்றச்சாட்டுக்கு தந்தை பதில்!
2025 ஐபிஎல் தொடருக்கான மெகா வீரர்கள் ஏலமானது சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள அபாடி அல்-ஜோஹர் அரங்கில் நடைபெற்றது. ஒவ்வொரு அணிகளும் தங்களுடைய பிரதான வீரர்களை ஏலம் எடுப்பதில் ஆர்வம் காட்டினர்.
எப்போதும் இல்லாத வகையில் இந்திய வீரர்களான ரிஷப் பண்ட் ரூ.27 கோடி, ஸ்ரேயாஸ் ஐயர் ரூ.26.75 கோடி மற்றும் வெங்கடேஷ் ஐயர் ரூ.23.75 கோடி என அதிகபட்ச தொகைக்கு இந்திய வீரர்கள் ஏலம் சென்றனர்.
ஆனால் ஏலத்தின் இரண்டாம் நாளான கடைசி செஸ்ஸனில் ஏலத்திற்கு வந்த 13 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி 1 கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் சென்று தலைப்பு செய்திகளாக மாறினார். இளம் வயதில் ஐபிஎல்லில் பங்கேற்ற முதல் வீரர் மற்றும் இளம் வயதில் 1 கோடி ரூபாய்க்கு மேல் விலை போன முதல் வீரர் என வரலாற்று பக்கங்களில் தன்னுடைய பெயரை பதித்தார்.
இந்நிலையில் வைபவ் சூர்யவன்ஷி வயதை குறைத்து காட்டி ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ரூ 1.10 கோடிக்கு ஏலம்போன 13 வயது வீரர்..
ஐபிஎல் வரலாற்றில் குறைந்த வயதில் ஏலத்திற்கு வந்த வீரராக, 13 வயது வைபவ் சூர்யவன்ஷி பதிவுசெய்யப்பட்டார்.
2025 ஐபிஎல் ஏலத்தில் அடிப்படை விலையான ரூ.30 லட்சத்துக்கு 13 வயது இந்திய பேட்ஸ்மேனான வைபவ் சூர்யவன்ஷியின் பெயர் வாசிக்கப்பட்டது. இளம் வயது வீரரான அவரை விலைக்கு வாங்க டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் போட்டி போட்டன. இவர்களின் போட்டி 1 கோடியை கடந்த நிலையில், இறுதியில் 1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் விலைக்கு வாங்கியது.
இதன்மூலம் ஐபிஎல் ஏல வரலாற்றில் குறைந்த வயதில் ஏலம்போன வீரர் மற்றும் குறைந்த வயதில் 1 கோடிக்கு மேல் விலைபோன முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் வைபவ் சூர்யவன்ஷி.
13 வயதா? 15 வயதா? எழுந்த குற்றச்சாட்டு..
13 வயதில் சாதனை படைத்ததாக ஊடகங்களில் தலைப்பு செய்தியான சூர்யவன்ஷி, வயதை குறைத்து சொல்லி ஏமாற்றிவிட்டதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்தது.
பல நெட்டிசன்கள் 2023-ல் வைபவ் சூர்யவன்ஷி பேசியதாக ஒரு வீடியோவை பகிர்ந்து, அந்த வீடியோவின் படி அவருக்கு அப்போதே 14 வயது என்றும் தற்போது அவருக்கு 15 வயதை கடந்திருக்கும் என்றும் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.
ஆனால் அனைத்து குற்றச்சாட்டையும் வைபவ் சூர்யவன்ஷியின் தந்தை மறுத்து பேசியுள்ளார்.
வயது ஃபிராடு குற்றச்சாட்டை மறுத்த தந்தை..
வயதை மறைத்து சொல்லி ஏமாற்றியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து பேசியிருக்கும் வைபவ் சூர்யவன்ஷியின் தந்தை, “வைபவ் சூர்யவன்ஷி அவருடைய 8 1/2 வயதில் பிசிசிஐ எலும்பு சோதனைக்கு முதலில் உட்படுத்தப்பட்டார். அவர் ஏற்கனவே அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி இந்தியாவின் U-19 அணியில் விளையாடிவிட்டார். நாங்கள் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. அவர் மீண்டும் வயது சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும் பிரச்னை இல்லை” என மறுத்து பேசியுள்ளார்.
மேலும் தன் மகனை பீகாரின் மகன் என்று கூறிய தந்தை, அவருடைய கிரிக்கெட் முன்னேற்றத்திற்காக தங்களுடைய நிலத்தை விற்றுவிட்டதாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “அவர் என்னுடைய மகன் மட்டுமல்ல தற்போது பீகாரின் மகனாக மாறியுள்ளார். அவருடைய கிரிக்கெட் முன்னேற்றத்திற்காக நான் எனது நிலத்தை விற்றுவிட்டேன். நிதி சிக்கல்கள் இன்னும் உள்ளன.
என் மகன் மிகவும் கடுமையாக உழைத்தான். எட்டு வயதில் இருக்கும் பொழுதே 16 வயதுக்குட்பட்டோருக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட்டில் திறமையை வெளிப்படுத்தினார். அவனுடைய கிரிக்கெட் பயிற்சிக்காக சமஸ்திபுர் நகருக்கு அழைத்துச் செல்வேன். அவனுடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு பின்புலமாக இருந்து பார்த்துக் கொள்கிறேன்." என்று பிடிஐ உடன் பேசியிருப்பதாக இந்தியா டுடே மேற்கோள் காட்டியுள்ளது.