ரூ 10.75 கோடிக்கு சென்ற நடராஜன்; 5ல் இருந்து ரூ 10 கோடிக்கு தாவிய CSK; MI செய்த தரமான அந்த ஒரு ஏலம்!
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமில்லாமல் உலக கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த 2025 ஐபிஎல் திருவிழாவிற்கான மெகா வீரர்கள் ஏலமானது இன்றும், நாளையும் ( நவம்பர் 24 - 25) என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
ஒவ்வொரு அணிக்கும் 120 கோடி ஏலத்தொகை மற்றும் 6 ஆர்டிஎம் கார்டு ஆப்சன்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், 10 ஐபிஎல் அணிகளும் அவர்களுக்கான அணியை கட்டமைக்கும் முயற்சியில் இன்று ஏலத்தில் வீரர்களை வாங்கவுள்ளனர்.
367 இந்திய வீரர்கள், 210 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 577 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கும் நிலையில், பல ஸ்டார் வீரர்கள் மிகப்பெரிய ஏலத்திற்கு செல்வார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில், இன்றைய நாள் ஐபிஎல் ஏலமானது 3.30 PM மணி முதல் நடைபெற்று வருகிறது.
5 கோடியிலிருந்து 10 கோடிக்கு சென்ற சிஎஸ்கே..
சிஎஸ்கே அணி ஏற்கனவே ரவிச்சந்திரன் அஸ்வின், டெவான் கான்வே, ரச்சின் ரவிந்திரா, ராகுல் திரிப்பாத்தி முதலிய 4 வீரர்களை எடுத்த நிலையில், அடுத்த பிட்டில் ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர் நூர் அகமதுவை ரூ.10 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது. 5 கோடிவரை சென்ற சிஎஸ்கே அணி குஜராத் டைட்டன்ஸ் RTM பயன்படுத்திய போது, அவரை விட்டுக்கொடுக்க கூடாது என்பதற்காக 10 கோடிக்கு பிட் செய்து தூக்கியது.
நடராஜனுக்கு செல்வார்கள் என்று நினைத்தபோது இடது கை வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமதுவை 4.80 கோடிக்கு எடுத்துள்ளது.
பும்ரா உடன் இணையும் டிரெண்ட் போல்ட்!
ஒரு வீரரை கூட ஏலம் எடுக்காமல் வேடிக்கை பார்த்த மும்பை இந்தியன்ஸ் அணி, ஒரு பிட் என்றாலும் தரமாக டிரெண்ட் போல்ட்டை எடுத்துள்ளது. பும்ரா மற்றும் போல்ட் இருவரும் இணைந்து விளையாட உள்ளனர்.
10.75 கோடிக்கு சென்ற தமிழக வீரர் நடராஜன்..
தமிழக வீரர் நடராஜனுக்கு இறுதிவரை ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. ஆனால் இறுதியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 10.75 கோடிக்கு தட்டிச்சென்றது.
ஜோப்ரா ஆர்ச்சர், ஆவேஷ் கான், ஹசரங்கா..
ராஜஸ்தான் ராயல்ஸ் - ஜோப்ரா ஆர்ச்சரை 12.50 கோடிக்கும், மஹீஷ் தீக்சனாவை 4.40 கோடிக்கும், வனிந்து ஹசரங்காவை 5.25 கோடிக்கும் எடுத்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் - ராகுல் சாஹரை 3.20 கோடிக்கும், ஆடம் சாம்பாவை 2.40 கோடிக்கும் எடுத்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ஆவேஷ் கானை 9.75 கோடிக்கு எடுத்துள்ளது.