ஒரே வருடத்தில் 49 சதங்கள் விளாசல்! 1.10 கோடிக்கு விலைபோன 13 வயது வீரர்.. யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?
2025 ஐபிஎல் தொடருக்கான மெகா வீரர்கள் ஏலமானது சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள அபாடி அல்-ஜோஹர் அரங்கில் நடைபெற்றுவருகிறது.
நவம்பர் 24ம் தேதியான நேற்று ஏலம் முதல் நாள் நடந்த நிலையில் மிகப்பெரிய ஏலத்திற்கு இந்திய வீரர்களான ரிஷப் பண்ட் ரூ.27 கோடி, ஸ்ரேயாஸ் ஐயர் ரூ.26.75 கோடி மற்றும் வெங்கடேஷ் ஐயர் ரூ.23.75 கோடிக்கு சென்றனர்.
இந்நிலையில் இரண்டாம் நாள் ஐபிஎல் ஏலமானது நவம்பர் 25ம் தேதியான இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த ஏலத்தில் பல சுவாரசியமான பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
அந்தவகையில் 18 வயதான ஆப்கானிஸ்தான் வீரர் அல்லா கசன்ஃபர் ரூ.4.80 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்ட நிலையில், 13 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ.1.10 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.
வரலாறு படைத்த 13 வயது வைபவ் சூர்யவன்ஷி..
ஐபிஎல் வரலாற்றில் குறைந்த வயதில் ஏலத்திற்கு வந்த வீரராக, 13 வயது வைபவ் சூர்யவன்ஷி பதிவுசெய்யப்பட்டார்.
இந்நிலையில் அடிப்படை விலையான ரூ.30 லட்சத்துக்கு 13 வயது இந்திய பேட்ஸ்மேனான வைபவ் சூர்யவன்ஷியின் பெயர் வாசிக்கப்பட்டது. இளம் வயது வீரரான அவரை விலைக்கு வாங்க டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் போட்டி போட்டன.
இவர்களின் போட்டி 1 கோடியை கடந்த நிலையில், இறுதியில் 1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் விலைக்கு வாங்கியது. இவர் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலியா யு-19 அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 58 பந்துகளில் சதமடித்ததன் மூலம் பல சாதனைகளை படைத்திருந்தார்.
யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?
2011, மார்ச் 27-ம் தேதி பீகாரில் உள்ள தஜிபூர் என்ற கிராமத்தில் பிறந்த வைபவ் சூர்யவன்ஷி தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் இளம் வயதிலேயே தொடங்கிவிட்டார். இந்திய கிரிக்கெட் வீரர்களால் பெரிதும் மதிக்கப்படும் ரஞ்சிக்கோப்பை தொடரில் 12 வயதில் அறிமுகத்தை பெற்றார் சூர்யவன்ஷி, அவர் அங்கு பீகாருக்காக விளையாடினார்.
யு-19 கிரிக்கெட்டில் வரலாறு..
13 வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷி சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலியா யு-19 அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 58 பந்துகளில் 14 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் அதிவேக சதத்தை பதிவுசெய்து சாதனை படைத்தார்.
இதன் மூலம் யு-19 டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த வயதில் சதமடித்த வீரர் என்ற சாதனையையும், அதிவேகமாக டெஸ்ட் சதமடித்த இந்திய யு-19 வீரர் மற்றும் உலகளவில் அதிவேகமாக டெஸ்ட் சதமடித்த இரண்டாவது யு-19 வீரர் என்ற சாதனைகளை குவித்து அசத்தினார்.
அதுமட்டுமில்லாமல் ரஞ்சி டிராபி, ஹேமந்த் டிராபி, கூச் பெஹர் டிராபி மற்றும் வினு மங்கட் டிராபி என பல டோர்னமெண்ட்களில் விளையாடியிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி, ஒட்டுமொத்தமாக ஒரு வருடத்தில் 49 சதங்கள் அடித்ததாகவும் கூறப்படுகிறது.
வைபவ் சூர்யவன்ஷியின் இந்த குறிப்பிடத்தக்க தொடக்கமானது, சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் போன்ற இந்திய ஜாம்பவான்களின் முந்தைய சாதனைகளை முறியடிக்க அவரை அனுமதித்துள்ளது. இப்படியே தொடர்ந்தால் மற்றொமொரு சூப்பர் ஸ்டார் கிரிக்கெட்டராக வைபவ் ஜொலிக்க அதிக வாய்ப்புள்ளது. இந்தியாவின் முதல் தர உள்நாட்டுப் போட்டிகளின் வரலாற்றில் இளைய வீரராக வைபவ் சூர்யவன்ஷி விளையாடிவருவது குறிப்பிடத்தக்கது.