“RCB-க்கே எனது ஆதரவு” - இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்!
நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் இன்றைய இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியும், பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த முறை கோப்பையை வெல்லாத இரு அணிகளும் ஐபிஎல் தொடருக்குள் நுழைந்திருப்பதால், ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. குறிப்பாக, ஐ.பி.எல். தொடரின் அறிமுக சீசனில் இருந்து தொடர்ந்து 18-வது ஆண்டாக ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்த முறையாவது கோப்பையை கையில் ஏந்துவார என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். அதுபோல், 11 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் அணியை ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் அழைத்துச் சென்றிருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் இந்த முறையும் மகுடம் சூடுவார் என ரசிர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுதொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இங்கிலாந்து முன்னாள் பிரதமரான ரிஷி சுனக்கும் பெங்களூரு அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், “நான் பெங்களூரு பெண்ணை திருமணம் செய்துள்ளேன். எனவே, ஆர்சிபியே எனது அணி. விராட் கோலியின் மட்டைகளில் ஒன்று, எனக்கு பரிசாக வழங்கப்பட்டது. அது எனது மதிப்புமிக்க சொத்துக்களில் ஒன்று. மேலும், பில் சால்ட் மற்றும் லியாம் லிவிங்ஸ்டோன் போன்ற ஆர்சிபியின் இங்கிலாந்து நட்சத்திரங்களிடமிருந்து பெரிய பங்களிப்புகளை எதிர்பார்க்கிறேன்.
ஐபிஎல் ஒட்டுமொத்த கிரிக்கெட்டையும் மாற்றியுள்ளது. ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும், எல்லா இடங்களிலும், தங்கள் வாழ்க்கையில் ஒரகட்டத்தில் ஐபிஎல்லில் விளையாட விரும்புகிறார்கள். கடந்த வாரம் நான் எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்து vs மேற்கிந்திய தீவுகள் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஜேக்கப் பெத்தேல் ஒரு அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார். ஐபிஎல், அவரை ஒரு வீரராக மேம்படுத்தியுள்ளது. (ஜேக்கப் பெத்தேலும் ஆர்சிபி அணியில் விளையாடினார். ஆனால் சர்வதேச போட்டி காரணமாக தற்போது இங்கிலாந்து அணியில் இணைந்துள்ளார்). ஐபிஎல், பெண்கள் விளையாட்டுக்கு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. அது, விளையாட்டில் அதிக பெண்களை ஈர்த்தது. இந்தியாவின் ரசனைகள் இப்போது உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.