2025 மகளிர் ஐபிஎல் ஏலம்: அதிக தொகைக்கு ஏலம்போன 5 பேர்.. முதலிடத்தில் இந்திய வீராங்கனை!
ஐபிஎல்லை போன்றே கிரிக்கெட் ரசிகர்களின் பெருமித்த வரவேற்பை பெண்கள் ஐபிஎல் என கூறப்படும் மகளிர் பிரீமியர் லீக்கும் பெற்றுள்ளது. முதலிரண்டு சீசன்களில் முதல் சீசனை ஹர்மன்ப்ரீத் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணியும், இரண்டாவது சீசனை ஸ்மிரிதி மந்தனா தலைமையில் ஆர்சிபி அணியும் WPL கோப்பைகளை கைப்பற்றி அசத்தியுள்ளனர்.
இந்நிலையில் 2025 மகளிர் பிரீமியர் லீக் தொடர் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், 2025 மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான மினி ஐபிஎல் ஏலம் இன்று பெங்களூரில் தொடங்கி நடைபெற்றது.
19 இடங்களுக்கான WPL மினி ஏலத்தில் மொத்தமாக 120 வீராங்கனைகள் பங்கேற்றனர். அதில் 91 இந்திய வீராங்கனைகளும், 29 வெளிநாட்டு வீராங்கனைகளும் அடங்கும். மொத்தமான 19 இடங்களில் 5 இடங்கள் வெளிநாட்டு வீராங்கனைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பரபரப்பாக நடைபெற்ற மினி ஏலத்தில் 5 வீரர்கள் அதிகதொகைக்கு ஏலம் சென்று அசத்தியுள்ளனர். அவர்களின் விவரத்தை பார்க்கலாம்.
டாப் 5 வீராங்கனைகள் யார்?
1. சிம்ரன் ஷைக் - 1.90 கோடி - குஜராத் ஜியண்ட்ஸ்
2025 மகளிர் ஐபிஎல் ஏலத்தில் மும்பையை சேர்ந்த அன்கேப்டு இந்திய வீராங்கனையான சிம்ரன் ஷைக் ரூ.1.90 கோடிக்கு ஏலம் சென்று முதலிடத்தை பிடித்துள்ளார். ஆல்ரவுண்டரான சிம்ரன் ஷைக்கை விலைக்கு வாங்க டெல்லி மற்றும் குஜராத் அணிகள் போட்டப்போட்டன. இறுதியில் ரூ1.90 கோடிக்கு குஜராத் ஜியண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
2. டியான்ட்ரா டாட்டின் - 1.70 கோடி - குஜராத் ஜியண்ட்ஸ்
வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டரான 33 வயது டியான்ட்ரா டாட்டின் 50 லட்சம் அடிப்படை விலையிலிருந்து 1.70 கோடிக்கு குஜராத் ஜியண்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
3. ஜி கமலினி - 1.60 கோடி - மும்பை இந்தியன்ஸ்
அன்கேப்டு இந்திய வீராங்கனையும், தமிழகத்தைசேர்ந்த 16 வயதான விக்கெட் கீப்பர் வீராங்கனையுமான ஜி கமலினி அடிப்படை விலையான 10 லட்சத்துக்கு வந்து 1.60 கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்டார்.
இந்தமாதம் இந்திய அணிக்கான யு19 அணியில் 80 ரன்கள் (61 பந்துகள்), 79 ரன்கள் (62 பந்துகள்), 63 ரன்கள் (44 பந்துகள்) என அதிரடி காட்டியிருந்த கமலினியை ஏலத்தில் எடுக்க டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது. முடிவில் மும்பை ரூ.1.60 கோடிக்கு தட்டிச்சென்றது.
4. பிரேமா ராவத் - 1.20 கோடி - ஆர்சிபி
உத்தரகாண்ட்டை சேர்ந்த இந்திய ஆல்ரவுண்டர் வீரரான பிரேமா ராவத்தை ரூ.1.20 கோடிக்கு ஆர்சிபி அணி விலைக்கு வாங்கியுள்ளது. லெக் ஸ்பின்னரான பிரேமா ராவத்தை விலைக்கு வாங்க டெல்லி மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது, இறுதியில் ஆர்சிபி அணி ரூ.1.20 கோடிக்கு தட்டிச்சென்றது.
5. நல்லபுரெட்டி சரணி - 55 லட்சம் - டெல்லி கேபிடல்ஸ்
ஆந்திராவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் வீரரான நல்லபுரெட்டி சரணி டெல்லி கேபிடல்ஸ் அணியால் 55 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளார். டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே போட்டி நிலவிய நிலையில் டெல்லி அணி இறுதியாக 55 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.