இன்று முடிகிறது TNPL.. ஆரம்பமாகிறது PPL.. புதுவை கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து!
ரசிகர்களுக்கு அடுத்தடுத்து விருந்து படைத்து வருகின்றன கிரிக்கெட் தொடர்கள். அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவின் ஐபிஎல்லின் 18வது சீசனுக்குப் பிறகு, தற்போது டி.என்.பி.எல். தொடர் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. கடந்த மாதம் 5ஆம் தேதி தொடங்கிய 9-ஆவது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில், 8 அணிகள் பங்கேற்று விளையாடின. இதில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில், சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் அணியும், அஸ்வின் தலைமையிலான நடப்பு சாம்பியன் திண்டுக்கல் அணியும் மோத இருக்கின்றன.
இதைத் தொடர்ந்து, ரசிகர்களுக்கு அடுத்த விருந்தாக, ’பிபிஎல் மெகா தொடர்’ ஆரம்பமாக இருக்கிறது. ஆம், பாண்டிச்சேரி பிரிமியர் லீக்கின் 2ஆவது ஆண்டு கிரிக்கெட் திருவிழா, சீகம் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற உள்ளது. ஜூலை 27ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தத் தொடரில் 6 அணிகள் பங்கேற்க உள்ளன. இன்று நடைபெறும் தொடக்கப் போட்டியில் உசுடு அக்கார்டு வாரியர்ஸ் மற்றும் ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அணிகள் மோத இருக்கின்றன. இந்தத் தொடரில் ஒவ்வோர் அணியும் மற்ற அணிகளுடன் இரண்டு முறை மோதவுள்ளன. அதில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள், பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும்.
பாண்டிச்சேர் கிரிக்கெட் சங்கத் தைலவர் பி.தாமோதரன், ”கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை பிபிஎல் (PPL) அளித்து வருகிறது. நேரலை மூலமும் பொதுமக்கள் முன்னிலையிலும் விளையாடுவதற்கான தளத்தை உருவாக்கி உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
பாண்டிச்சேரி பிரிமியர் லீக் தலைவர் எஸ்.மேகஷ், “இந்த தொடரில் ஒவ்வொரு அணியிலும் உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த திறைமயான வீரர்கள் பங்கேற்பதால், போட்டியின் தரம் உயர்வேதாடு, புதுச்சேரி கிரிக்கெட்டின் அந்தஸ்தும் உயர்ந்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.