ராஜஸ்தான் அணி -  சன்ரைசர்ஸ் அணி
ராஜஸ்தான் அணி - சன்ரைசர்ஸ் அணிமுகநூல்

ராஜஸ்தான் தோல்விக்கு RCB தான் காரணம்.. ஒரேயொரு முடிவால் வீழ்ந்த RR! 3வது முறையாக FINAL சென்றது SRH!

36 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் அணி .

16 வருடங்களாக தொடரும் சோகம்!

2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்ட முதல் சீசனில், ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் அணி தோனியின் சிஎஸ்கே படையை இறுதிப்போட்டியில் வீழ்த்தி முதல் ஐபிஎல் கோப்பையை வென்று மகுடம் சூடியது.

அதற்குபிறகு 14 வருடங்களாக ஒருமுறை கூட இறுதிப்போட்டிக்கு முன்னேறாமல் தடுமாறிவந்த ராஜஸ்தான் அணியை, 2022 ஐபிஎல் தொடரில் தனது வாழ்நாள் ஃபார்மில் ஜொலித்த ஜோஸ் பட்லர் 863 ரன்களை தனியாளாக குவித்து RR அணியை இறுதிப்போட்டிவரை எடுத்துச்சென்றார். ஆனால் அந்தமுறையும் கோப்பை வெல்லாத ராஜஸ்தான் அணி இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் படுதோல்வி அடைந்து வெறுங்கையோடு திரும்பியது.

இந்நிலையில், 2024 ஐபிஎல் தொடரில் முதல் பாதியில் 9 போட்டிகளில் விளையாடி 8-ல் வெற்றிபெற்று சிறப்பான ஃபார்மில் ஜொலித்த ராஜஸ்தான் அணி, இந்தமுறை எப்படியும் கோப்பையை வென்று வரலாறு படைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் யார் கண்ணு பட்டுச்சோ என்ற நிலைமையில் திடீரென மிகமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் அணி, தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோற்று அரையிறுதிக்கு கூட செல்லுமா செல்லாதா என்ற படுமோசமான நிலைமைக்கே சென்றது.

தட்டித்தடுமாறி ஒருவழியாக எலிமினேட்டருக்கு சென்ற ராஜஸ்தான் அணி, ஆர்சிபி அணியை வீழ்த்தி குவாலிஃபையர் 2 சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் பலம்வாய்ந்த சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக வெல்லுமா? அல்லது எப்போதும் போல இரண்டாவது பாதியில் கோட்டைவிட்டு செல்லுமா? என்ற எதிர்ப்பார்ப்புடன் போட்டி தொடங்கப்பட்டது.

திரிபாதி-க்ளாசன் ஆட்டத்தால் தப்பித்த SRH!

முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்ந்தெடுப்பார் என்று பார்த்தால், பந்துவீச்சை தேர்ந்தெடுத்து சன்ரைசர்ஸ் அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு அழைத்தார்.

முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா, எப்போதும் போல முதல் ஓவரிலேயே சிக்சர் பவுண்டரி என பறக்கவிட்டு அதிரடியாக தொடங்கினார். ஆனால் அதிகநேரம் அபிஷேக் சர்மாவை களத்தில் நிறுத்தாத டிரெண்ட் போல்ட், 12 ரன்னில் அபிஷேக்கை வெளியேற்றி பதிலடி கொடுத்தார்.

விரைவாகவே முதல் விக்கெட்டை இழந்திருந்தாலும் 3வது வீரராக களத்திற்கு வந்த திரிபாதி, வந்ததிலிருந்தே 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டி ரன்வேட்டை நடத்தினார். எந்த பவுலர் போட்டாலும் அடிவெளுத்த இவரை, எப்படி வெளியேற்றப்போகிறோம் என்ற குழப்பத்தில் இருந்த ராஜஸ்தான் அணிக்கு “நீங்க விக்கெட் எடுக்க வேண்டாம், நானே கிளம்புறன்” என்று ஒரு சுமாரான ஷாட் விளையாடி கைக்கே கேட்ச் கொடுத்து வெளியேறினார். உடன் வந்தவேகத்தில் மார்க்ரமும் 1 ரன்னில் நடையை கட்ட திடீரென 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது சன்ரைசர்ஸ் அணி.

ஆனால் அதுவரை களத்தில் அமைதியாக இருந்த டிராவிஸ் ஹெட், 3 பவுண்டரிகள் 1 சிக்சர் என துவம்சம் செய்ய 10 ஓவர் முடிவில் 100 ரன்களை எட்டி நல்ல அடித்தளத்தை அமைத்தது சன்ரைசர்ஸ் அணி. எப்படியும் 200 ரன்களுக்கு மேல் வந்துவிடும், சேப்பாக்கத்தில் எளிதாக வென்றுவிடலாம் என நினைத்த SRH அணிக்கு வில்லனாக வந்த ஆவேஷ் கான், ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை RR அணியின் பக்கம் திருப்பிவிட்டார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் அனைவரும் 0, 5, 5 என சொற்ப ரன்களில் வெளியேற, களத்தில் தனியாளாக போராடிய க்ளாசன் அரைசதமடித்து ரன்களை எடுத்துவந்தார். முக்கியமான நேரத்தில் 50 ரன்னடித்த க்ளாசனை போல்டாக்கி வெளியேற்றிய சந்தீப் சர்மா, சன்ரைசர்ஸ் அணியை 175 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினார்.

சுழலில் சிக்கித்திணறிய RR வீரர்கள்!

176 ரன்களை எளிதாக எட்டிவிட முடியும் என்ற நம்பிக்கையில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பட்லருக்கு மாற்றுவீரராக வந்த டிம்-கோலர் இந்த போட்டியிலாவது அடிப்பார் என்று பார்த்தால், 16 பந்துக்கு 10 ரன்கள் அடித்து ஏமாற்றினார். ஆனால் மறுமுனையில் அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என பறக்கவிட்டு ரன்களை குவிக்கும் வேலையில் இறங்கினார். ஜெய்ஸ்வால் அடிப்பதை பார்த்தால் ராஜஸ்தான் அணி எளிதில் வென்றுவிடும் என்று நினைத்தபோது தான், களத்தில் பந்துவீச வந்த இடதுகை ஆஃப் ஸ்பின்னர் ஷபாஸ் அகமது, ஜெய்ஸ்வாலை 42 ரன்னில் வெளியேற்றி கலக்கிப்போட்டார்.

 ராஜஸ்தான் அணி -  சன்ரைசர்ஸ் அணி
காலை தலைப்புச் செய்திகள்|6-ம் கட்ட மக்களவை தேர்தல் To RR-ஐ வீழ்த்தி இறுதிப்போட்டியில் SRH அணி!

உடன் கேப்டன் சஞ்சு சாம்சனை மற்றொரு ஆஃப் ஸ்பின்னரான அபிஷேக் சர்மா வெளியேற்ற, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த ராஜஸ்தான் அணி தடுமாறியது. ஆனால் RR அணி நிமிர்வதற்குள் அடிக்குமேல் அடிகொடுத்த ஷபாஷ் அகமது மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் விக்கெட் வேட்டை நடத்தினர். பந்தை மெதுவாக கிரிப் செய்து தரமாக திருப்பிய இந்த இரண்டு ஸ்பின்னர்களும், “ரியான் பராக், ஷிம்ரன் ஹெட்மயர், ரவிச்சந்திரன் அஸ்வின்” என்ற ராஜஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் தூண்களை இடித்து தரைமட்டமாக்க RR அணி ஆட்டம் கண்டது. இரண்டு ஸ்பின்னர்களும் சேர்ந்து 5 விக்கெட்டுகளை கைப்பற்ற, களத்திற்கு வந்த ரோவ்மன் பவல் ரன்களை எடுத்துவர முடியாமல் அழுத்தத்தில் விளையாடினார். நீண்டநேரம் போராடிய அவரை நடராஜன் வெளியேற்ற, கடைசிவரை களத்திலிருந்த துருவ் ஜுரேல் மட்டும் தனியாளாக வெற்றிக்காக போராடினார். 7 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விளாசிய ஜுரேல் இறுதிவரை போராடினாலும், ராஜஸ்தான் அணியால் இலக்கை எட்டமுடியவில்லை. முடிவில் 36 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பதிவுசெய்த சன்ரைசர்ஸ் அணி, 3வது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.

ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு காரணம் RCB!

16 வருடங்களாக கோப்பைக்காக போராடிவரும் ராஜஸ்தான் அணி இந்தமுறையும் கோப்பை வெல்லும் வாய்ப்பை கோட்டைவிட்டு வெளியேறியது.

 ராஜஸ்தான் அணி -  சன்ரைசர்ஸ் அணி
எங்கே கோட்டை விட்டது பெங்களூரு? 2015-ல் தொடர் தோல்வியை மாற்றி மும்பை கோப்பையை வென்றது எப்படி?

ராஜஸ்தான் அணியின் தோல்வியை பொறுத்தவரையில் ஆர்சிபி அணியின் பங்கு முக்கியமானதாக இருந்தது. ஏனென்றால் ஆர்சிபி அணிக்கு எதிராக சேஸிங் செய்து வெற்றிப்பெற்ற RR அணி, அதே முடிவில்தான் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்து தவறுசெய்தது. அவர்கள் ஆர்சிபி அணிக்கு எதிராக சுமாரான பேட்டிங்கையே வெளிப்படுத்தி இருந்தனர், பேட்டிங்கில் நம்பிக்கை தரும் ஒருவிசயம் கூட கடந்த 6 போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்கு அமையவில்லை. அதையும் மீறி சன்ரைசர்ஸ் அணிக்கு சேஸிங் செய்வதில் பிரச்னை இருப்பது தெரிந்தும் முதலில் பேட்டிங் செய்ய அனுமதித்து பெரிய தவறை இழைத்தனர். இதையெல்லாம் தாண்டி ஆர்சிபி அணிக்கு எதிராக எலிமினேட்டர் போட்டிகளில் வெற்றிபெற்ற எந்த அணியும் நாக்அவுட் போட்டிகளில் வென்றதேயில்லை என்ற சாதனை மீண்டும் தொடர்கிறது.

SRH அணியின் வெற்றிக்கும் RCB தான் காரணம்!

சன்ரைசர்ஸ் அணியின் வெற்றியை பொறுத்தவரையில், இரண்டு இடது கை ஆஃப் ஸ்பின்னர்கள் வெற்றியை உறுதிசெய்தனர். இம்பேக்ட் வீரராக மயங்க் மார்கண்டேவிற்கு பதிலாக ஷபாஷ் அகமது களமிறங்கிய போது, சன்ரைசர்ஸ் அணி ஏன் இந்த தவறை செய்கிறது என்று எல்லோருக்கும் தோன்றியது. ஆனால் களத்தில் சிறப்பாக பந்துவீசிய ஷபாஷ் அகமது மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் ஆட்டத்தையே தலைகீழாக திருப்பி, சன்ரைசர்ஸ் அணியை பைனலுக்கு அழைத்துச்சென்றனர். ஷபாஷ் அகமதை களமிறக்கும் முடிவு யாருடையது என்று கேட்டபோது, அது பயிற்சியாளர் டேனியல் விட்டோரியின் முடிவு என்று பாட் கம்மின்ஸ் தெரிவித்தார். ‘ஏன் பா விட்டோரி நீங்களும் முன்னாள் ஆர்சிபி பயிற்சியாளர் தானே’ என ஆர்சிபி ரசிகர்கள் புலம்பவே ஆரம்பித்துவிட்டனர்.

 ராஜஸ்தான் அணி -  சன்ரைசர்ஸ் அணி
USA vs BAN T20|தொடர்ந்து 2 போட்டிகளில் வெற்றி.. அமெரிக்காவிடம் தொடரை இழந்த வங்கதேசம்!

ஆஷஸ் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் உலகக்கோப்பை என தொட்டதெல்லாம் தங்கமாக ஜொலித்துவரும் பாட் கம்மின்ஸ், 4வது பெரிய கோப்பையாக ஐபிஎல் கோப்பையையும் வெல்லுவார் என்ற நம்பிக்கையில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது SRH அணி.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com