‘17 இல்ல, 1017 IPL ஆடினாலும் தோல்விதான்’ - 287 ரன்கள் விட்டுக்கொடுத்த RCB! இமாலய சாதனை படைத்த SRH!
17 வருடங்களாக கோப்பை வெல்லவேண்டும் என்று போராடிவரும் ஆர்சிபி அணியின் கனவானது, நடப்பு ஐபிஎல் தொடரிலும் SRH அணியால் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது.
6 போட்டிகளில் விளையாடி 5 தோல்விகளுடன் சோகமுகமாக வலம்வரும் ஆர்சிபி அணி, தங்களுடைய இரண்டாவது வெற்றியை தேடி சன்ரைசர்ஸ் அணியை எதிர்த்து நேற்று விளையாடியது.
கடந்த 5 போட்டியிலும் ஒன்றில் கூட டாஸ் வெல்லாத ஆர்சிபி கேப்டன் டுபிளெசிஸ், முதல்முறையாக டாஸ் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். பேட்டிங்கிற்கு சாதகமான பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில், சேஸிங் செய்யப்போகிறோம் இரண்டாவது வெற்றியை எடுத்துவந்துவிடலாம் என்ற மகிழ்ச்சியில் பந்துவீசியது ஆர்சிபி.
மரண அடி கொடுத்த SRH பேட்டர்கள்...
தொடக்க வீரர்களாக களமிறங்கிய SRH அணியின் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் ஆர்சிபி அணியின் மகிழ்ச்சியை இரண்டே ஓவரில் தட்டிப்பறித்தனர். ஒரு ஓவருக்கு 2 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் என பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டிய இந்த ஜோடி, 8 ஓவர்களுக்கு 108 ரன்களை எடுத்துவந்து மிரட்டிவிட்டது. ஒருமுனையில் அவ்வப்போது சிக்சரை விரட்டிய அபிஷேக் ஷர்மா ஆர்சிபி பவுலர்கள் மீது கருணை காட்டினாலும், கருணையே காட்டாத டிராவிஸ் ஹெட் 3 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என துவம்சம் செய்து 20 பந்துகளில் அரைசதம் எடுத்துவந்து காட்டடி அடித்தார்.
”நீ விக்கெட் கூட எடுக்கவேணாம், ஒரு டாட் பந்தாவது வீசு” என ஆர்சிபி கேப்டன் டூபிளெசி புலம்பினாலும், பந்தை ஸ்லாட்டில் மட்டுமே வீசிய ஆர்சிபி பவுலர்கள் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். அடிக்க கொஞ்சம் ரெஸ்ட் விடலாம் என SRH பேட்டர்களே நினைத்தாலும், ”தலைகீழாக தான் குதிப்போம்” என Poor பந்துகளை அதிகமாக வீசிய ஆர்சிபி பவுலர்கள் ரன்களை வாரி வழங்கினர்.
20 பந்தில் அரைசதமடித்திருந்த டிராவிஸ் ஹெட், கண்சிமிட்டுவதற்குள் 39 பந்துகளில் சதமடித்து மிரட்டிவிட்டார். 9 பவுண்டரிகள், 8 சிக்சர்கள் என விளாசி 41 பந்துகளுக்கு 102 ரன்கள் அடித்த டிராவிஸ் ஹெட், SRH அணியை 13 ஓவருக்கே 170 ரன்களுக்கு எடுத்துவந்து வெளியேறினார்.
டிராவிஸ் ஹெட் சென்றுவிட்டார் கொஞ்சம் பிரேக் எடுக்கலாம் என நினைத்த ஆர்சிபி அணிக்கு, அடுத்துவந்த அதிரடி வீரர் க்ளாசன் ”ஹெட் போனா என்ன இனிதான் உங்களுக்கு தலைவலியே” என 7 சிக்சர்களை பறக்கவிட்டு அணியின் ஸ்கோரை 17 ஓவருக்கே 230 ரன்களுக்கு எடுத்துச்சென்று மிரட்டிவிட்டார். அவர்தான் ஒருபுறம் அடிக்கிறார் என்றால் அடுத்துவந்த மார்க்ரம் 2 சிக்சர்களை பறக்கவிட, கடைசியாக வந்த சின்னபையன் அப்துல் சமாத் கூட ஆர்சிபி அணியை எகிறி எகிறி அடிக்க, அடிதாங்காத ஆர்சிபி பவுலர்கள் இனி பந்தேவீசவே வரமாட்டோம் என கலங்கி போயினர். 10 பந்துகளுக்கு 37 ரன்களை வாரிகுவித்த அப்துல் சமாத், சன்ரைசர்ஸ் அணியை 287 ரன்கள் என்ற வரலாற்று டோட்டலுக்கு எடுத்துச்சென்றார்.
கடந்த சில போட்டிகளுக்கு முன்னர்தான் மும்பை அணிக்கு எதிராக 277 ரன்களை குவித்த சன்ரைசர்ஸ் அணி, ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை குவித்து சாதனை படைத்தது. அவர்களின் சொந்த சாதனையை இந்தப்போட்டியில் அவர்களே முறியடித்து ஐபிஎல்லில் புதிய அதிகபட்ச டோட்டலை பதிவுசெய்து வரலாறு படைத்தனர்.
போட்டிப்போட்டு அடித்த கோலி - டூபிளெசிஸ்!
288 ரன்கள் என்ற எட்டவேமுடியாத இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணியில், தொடக்கவீரர்களாக களமிறங்கிய விராட் கோலி மற்றும் டூபிளெசி இருவரும் ”இனி அடி எல்லாம் இல்லை அடிச்சா இடிதான்” என அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். போட்டிப்போட்டு சிக்சர் பவுண்டரிகளாக விரட்டிய இருவரும், பவர்பிளே முடிவில் 4 சிக்சர்கள் 9 பவுண்டரிகள் என பறக்கவிட்டு 79 ரன்களை எடுத்துவந்து மிரட்டிவிட்டனர்.
இனி SRH அணியை விட 3 ரன்கள் அதிகமாகும். 'ஆஹா ஆர்சிபி அணிக்கு கோவம் வந்துடுச்சி, இனி எல்லாரும் சின்னபின்னமாக போறிங்க' என நினைத்த போது, 7வது ஓவரிலேயே போல்டாகி வெளியேறிய விராட் கோலி, ஆர்சிபி ரசிகர்களை ஏமாற்றினார்.
அதற்குபிறகு களத்திற்கு வந்த வில் ஜேக்ஸ் எதிர்பாராத ரன்அவுட் மூலம் வெளியேற, அடுத்தடுத்து உள்ளே வந்த பட்டிதார் மற்றும் சௌகான் இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறி, வந்த தடமே தெரியாமல் பெவிலியன் திரும்பினர்.
என்னதான் ஒருபுறம் விக்கெட்டுகளாக விழுந்தாலும் மறுமுனையில் அதிரடியை விடாத கேப்டன் டூபிளெசிஸ், 28 பந்துகளில் 7 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என விளாசி 62 ரன்களுடன் நம்பிக்கை அளித்தார்.
ஆனால் முக்கியமான நேரத்தில் பந்துவீச வந்த SRH கேப்டன் பாட் கம்மின்ஸ், டூபிளெசியை வெளியேற்றி ஆர்சிபி ரசிகர்களின் இதயத்தை சுக்குநூறாக உடைத்தார்.
SRH அணிக்கு பயம் காட்டிய DK!
122 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை பறிகொடுத்த ஆர்சிபி அணி நிலைகுலைய, அவ்வளவுதான் “இனி யார் அடிக்கப்போறா எல்லாரும் வீட்டுக்கு கிளம்புங்க” என்ற எண்ணத்திற்கே ரசிகர்கள் சென்றனர். ஆனால் களத்திலிருந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், “களத்துல நான் இருக்குற வரைக்கும் ஆட்டம் முடியாது கண்ணா” என பேட்டிங்கில் ஒரு சூறாவளியையே கிளப்பினார். 35 பந்துகளில் 5 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் என கிரவுண்டின் நாலாபுறமும் பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டிய தினேஷ் கார்த்திக், SRH அணியின் பந்துவீச்சாளர்களுக்கு மரணபயத்தை காட்டினார்.
ஒரு ஓவருக்கு 18 ரன்கள் தேவையென போட்டி மாறினாலும், 20 ரன்களை எடுத்துவந்து மிரட்டிய தினேஷ் கார்த்திக் “ஒருகனம் இலக்கை எட்டிவிடுவாரோ” என்ற நம்பவேமுடியாத நம்பிக்கையை ஏற்படுத்தினார்.
இன்னும் உங்களுக்கு வயசாகல ப்ரோ” என ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடி தீர்க்க, யாராலுமே அவுட்டாக்க முடியாத தினேஷ் கார்த்திக்கை, மற்றொரு தமிழக வீரரான நடராஜன் வெளியேற்றி SRH அணியை பெருமூச்சுவிட வைத்தார்.
‘அடைமழை வெளுத்துவாங்கி ஓய்ந்தது போல’ ரன்மழை பொழிந்த DK-விற்கு, மைதானத்தில் இருந்த இரண்டு அணி ரசிகர்களும் எழுந்துநின்று மரியாதை செய்து அனுப்பிவைத்தனர்.
20 ஓவர் முடிவில் 262 ரன்களை ஆர்சிபி அணி அடித்து போராட, 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது சன்ரைசர்ஸ் அணி.
1017 சீசன் வந்தாலும் கோப்பை வெல்லமுடியாது...
ஆர்சிபி அணியை பொறுத்தவரையில் 16 சீசன்களாக இல்லாதவகையில் ஒரு படுமோசமான பவுலிங் யூனிட்டை கொண்டுள்ளது. நிச்சயம் இந்த பவுலர்களை வைத்துக்கொண்டு ஆர்சிபி அணியால் மீண்டுவரவே முடியாது. ஒரு பவுலர் கூட நம்பிக்கை கொடுக்கும் வீரராக அவர்களிடம் இல்லை.
இந்த வருடமும் கோப்பை வெல்லவேண்டும் என்ற கனவு எட்டாக்கனியாகவே ஆர்சிபிக்கு சென்றுள்ளது. இனி ஆர்சிபி அணி விளையாட போற மீதி 7 போட்டிகளும், மற்ற அணிகளுக்கு Free-ஆ இரண்டு பாய்ண்ட்ஸ் கொடுக்குற மாதிரிதான் பந்துவீச்சு அமைந்துள்ளது.
இந்த ஒரேபோட்டியில் மூன்று உலகசாதனைகள் நிகழ்த்தப்பட்டன. அவை...
- டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் இரண்டு அணிகளும் சேர்ந்து அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களை ஆர்சிபி மற்றும் SRH அணிகள் படைத்தன. 549 ரன்கள் அடித்து இந்தசாதனை படைக்கப்பட்டது.
- அதேபோல 81 பவுண்டரிகள் மற்றும் 38 சிக்சர்களை அடித்து ஒரு டி20 போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச உலகசாதனைகளை இவ்விரு அணிகளும் சமன்செய்துள்ளன.
- அதேபோல ஐபிஎல்லில் 287 ரன்கள் என்ற அதிகபட்ச டோட்டல், 22 சிக்சர்கள் என்ற அதிகபட்ச ஹிட்டர்கள் என புதியசாதனையை தன்வசப்படுத்தியுள்ளது சன்ரைசர்ஸ் அணி.
இந்தபோட்டியின் முடிவின் மூலம் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் நீடிக்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.