’கேப்டனாக கம்பீர், கோலியை பின்னுக்கு தள்ளிய ஸ்ரேயாஸ்..’ ரோகித், தோனிக்கு பிறகு 3வது சிறந்த கேப்டன்!
ஒருநேரத்தில் பிசிசிஐ-ன் ஒப்பந்த பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், ஐபிஎல் தொடரில் கேப்டனாக கோப்பை வென்றுகொடுத்த கொல்கத்தா அணியிலிருந்தும் வெளியேற்றப்பட்டார்.
ஒரு கடினமான கிரிக்கெட் சரிவுகளை கண்ட ஸ்ரேயாஸ் ஐயருக்கு விராட் கோலி காயத்தினால் ரெஸ்ட் எடுக்க, இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக்கொண்டு ரன்களை குவித்த ஸ்ரேயாஸ் ஐயர், சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்தார்.
சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு அபாரமான ஆட்டத்தை ஆடிய அவர், இந்திய அணியின் மிடில் ஆர்டர் தூணாக செயல்பட்டார். 2 அரைசதங்களுடன் 243 ரன்களை குவித்த ஸ்ரேயாஸ் இந்தியாவிற்காக அதிக ரன்கள் குவித்த வீரராக தொடரை முடித்து, இந்திய அணி கோப்பை வெல்வதற்கு முக்கியமான காரணமாக அமைந்தார்.
இந்த சூழலில் 2025 ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியால் 26.75 கோடிக்கு வாங்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், பஞ்சாப் கிங்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்திவருகிறார். இதுவரை நடந்துமுடிந்துள்ள 6 போட்டியில் நான்கில் வெற்றிபெற்றிருக்கும் ஸ்ரேயாஸ் தலைமையிலான பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் நீடிக்கிறது.
கேப்டனாக கம்பீர், கோலியை பின்னுக்குதள்ளிய ஸ்ரேயாஸ்!
சண்டிகரில் உள்ள முல்லன்பூர் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய பஞ்சாப் அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 111 ரன்களையே அடித்தது.
எப்படியும் பஞ்சாப் கிங்ஸ் எளிதில் தோற்றுவிடும் என நினைத்தபோது யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் கொல்கத்தாவை 95 ரன்னுக்குள் சுருட்டி வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது பஞ்சாப் கிங்ஸ். சுழற்பந்துவீச்சில் மிரட்டிய சாஹல் 4 விக்கெட்டுகளை கைப்பற்ற, கேப்டனாகவும், ஃபீல்டராகவும் சில சிறந்த தலைமைபன்பை வெளிப்படுத்தினார் ஸ்ரேயாஸ்.
இந்த சூழலில் கொல்கத்தா உடனான வெற்றிக்கு பிறகு 76 போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தியிருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர், அதில் 44 வெற்றிகளை பதிவுசெய்து சாதனை படைத்துள்ளார். 76 போட்டிகள் முடிவில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டனாக மாறியிருக்கும் ஸ்ரேயாஸ், கம்பீர், கோலி மற்றும் வார்னர் சாதனையை உடைத்துள்ளார். அவருக்கு முன்னதாக முதலிடத்தில் ரோகித் சர்மா 46 மற்றும் தோனி 45 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கின்றனர்.