யாரும் எதிர்பார்க்காத டிவிஸ்ட்.. சுழலில் மேஜிக் செய்த சாஹல்! 95 ரன்னில் சுருண்ட KKR வரலாற்று தோல்வி!
டி20 கிரிக்கெட்டானது ஒட்டுமொத்தமாக பேட்ஸ்மேனுக்கு சாதகமான ஒரு ஃபார்மேட்டாக மாறிவிட்டது, அதிலும் இம்பேக்ட் பிளேயர் விதிமுறை பந்துவீச்சாளர்களுக்கு செய்யப்பட்ட துரோகம் என்றெல்லாம் சொல்லப்பட்டுவருகிறது.
போதாக்குறைக்கு சமீபத்திய ஆக்ரோஷமான டி20 பேட்டிங் அணுகுமுறை பவுலர்களுக்கு மன உளைச்சலை தருகின்றன என்று ரவிச்சந்திரன் அஸ்வினும், கிரிக்கெட்டில் சமநிலை இல்லையென்றால் அதை கிரிக்கெட் என சொல்லாமல் வெறும் ’பேட்டிங் விளையாட்டு’ என்றே கூறுங்கள் என ககிசோ ரபாடா போன்ற சர்வதேச பவுலர்களும் டி20 ஃபார்மேட் பேட்ஸ்மேனுக்கு சாதகமாகவே இருக்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
அதற்கேற்றார் போல் கடந்த இரண்டு ஐபிஎல் சீசனில் 287, 286, 277, 272, 266 மற்றும் 262 ரன்கள் என்ற ரெக்கார்டு ரன்சேஸ் என இமாலய ரன்குவிப்பையே அனைத்து ஐபிஎல் அணிகளும் செய்துவருகின்றன. அதிலும் இந்த தீவிரமான ரன்குவிப்பானது 2024 ஐபிஎல் சீசனைவிட, 2025 ஐபிஎல் சீசனில் அதிகமாகவே இருந்துவருகிறது.
இப்படி அடித்தால் 250 ரன், 300 ரன் என்றெல்லாம் சொல்லப்பட்டுவரும் நடப்பு ஐபிஎல் சீசனில், லோ ஸ்கோரிங் மேட்ச்சாக மாறி, சீட் நுனியில் அமர்ந்து பார்க்கும் ஒரு செம பவுலிங் ட்ரீட்டை கொடுத்துள்ளது இன்றைய ஐபிஎல் போட்டி.
111 ரன்னில் சுருண்ட பஞ்சாப்!
சண்டிகரில் நடைபெற்ற இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வுசெய்து விளையாட, தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரியான்ஸ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.
3 பவுண்டரிகள் 1 சிக்சர் என பிரியான்ஸ் மிரட்டிவிட, க்ரீஸில் பிஷியாக இருந்த பிரப்சிம்ரன் 3 சிக்சர்களை பறக்கவிட்டு மிரட்டிவிட்டார். 3 ஓவர்களுக்கு 39 ரன்களை கடந்த பஞ்சாப் அணி அதிரடியில் மிரட்ட, சரியான நேரத்தில் பந்துவீச வந்த ஹர்சித் ரானா பிரியான்ஸை 22 ரன்னில் வெளியேற்றியது மட்டுமில்லாமல் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை 0 ரன்னில் அவுட்டாக்கி பஞ்சாப் அணியை திணறடித்தார்.
அடுத்துவந்த அதிரடிவீரர் ஜோஷ் இங்கிலீஸை 2 ரன்னில் போல்டாக்கி வெளியேற்றிய வருண் சக்கரவர்த்தி பஞ்சாப் அணியை மேலும் நசுக்கினார். தொடர்ந்து மீண்டும் வில்லனாக வந்த ஹர்சித் ரானா நம்பிக்கை அளித்த ஒரே வீரரான பிரப்சிம்ரனையும் 30 ரன்னில் வெளியேற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி ஆட்டம் கண்டது.
தொடர்ந்து களத்திற்கு வந்த வதேரா 10, மேக்ஸ்வெல் 7, சூர்யான்ஸ் 4 மற்றும் மார்கோ யான்ஸன் 1 ரன் என வந்தவர்கள் எல்லாம் வரிசையாக நடையை கட்ட, இவர்களை எல்லாம் பார்த்து என்ன நினைத்தாரோ தெரியவில்லை கடந்த போட்டிகளில் கலக்கிய ஷஷாங் சிங்கும் 18 ரன்னில் வெளியேறி ஒட்டுமொத்த நம்பிக்கையையும் உடைத்தார். முடிவில் 15.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 111 ரன்கள் மட்டுமே அடித்து சுருண்டது.
112 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் களத்திற்கு வந்த கொல்கத்தா அணி 10 ஓவரில் இலக்கை எட்டிவிடும் என நினைத்தபோது ‘இருங்க பாய்’ என்ற தொணியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய பஞ்சாப் பவுலர்கள், முதலிரண்டு ஓவரிலேயே தொடக்க வீரர்களான சுனில் நரைன் மற்றும் டிகாக் இருவரையும் 5, 2 என சொற்ப ரன்னில் வெளியேற்றி கலக்கிப்போட்டனர்.
பஞ்சாப் பவுலர்கள் சிறப்பாகவே தொடங்கினாலும் 3வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த கேப்டன் அஜிங்கியா ரஹானே மற்றும் இம்பேக்ட் வீரர் ரகுவன்சி இருவரும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிலும் ரஹானே அடிக்கலாமா வேண்டாமா என யோசித்து கொண்டிருக்க, ’இளங்கன்று பயமறியாது’ என்பதுபோல் 5 பவுண்டரிகள் 1 சிக்சர் என துவம்சம் செய்த ரகுவன்சி பஞ்சாப் அணியின் நம்பிக்கையை உடைத்தார். மறுபுறம் ரஹானேவும் சிக்சர் பவுண்டரி என விரட்ட, கொல்கத்தா அணி எளிதான வெற்றியை நோக்கியே நகர்ந்தது.
ஆனால் 8வது ஓவரை வீசவந்த யுஸ்வேந்திர சாஹல் ரஹானேவை 17 ரன்னில் LBW மூலம் வெளியேற்றியது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. காரணம் அம்பயர் அவுட் கொடுத்தாலும் மீண்டும் ரீப்ளே செய்யப்பட்டதில் நாட் அவுட் என தெரியவந்தது. ஆனால் எதிர்முனையில் இருந்த ரகுவன்சி DRS-க்கு செல்லுங்கள் என சொன்னபோதும் அதைகேட்காமல் மைதானத்தை விட்டு வெளியேறிய கேப்டன் ரஹானே தவறுசெய்தார். அதன் விளைவு அவர் கனவில் கூட எதிர்ப்பார்க்காத ஒன்றாக அமைந்தது.
இந்தமுறை நிலைத்து நின்று ஆடிய ரகுவன்சியை 37 ரன்னில் வெளியேற்றிய சாஹல் கொல்கத்தாவுக்கு பயத்தை ஏற்படுத்தினார். அடுத்துவந்த 23 கோடி வெங்கடேஷ் ஐயர் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் 7 ரன்னில் நடையை கட்ட, ரிங்கு சிங் மற்றும் ரமன்தீப் இருவரையும் 2, 0 ரன அடுத்தடுத்து வெளியேற்றிய சாஹல் அடிக்குமேல் அடி கொடுத்தார்.
76 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா அணி தடுமாற களத்தில் ஒரே நம்பிக்கையாக ஆண்ட்ரே ரஸ்ஸல் மட்டுமே இருந்தார். ஆனால் கேப்டன்சியில் சிறப்பாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் எதிர்பக்கம் இருந்த ஹர்சித் ரானாவை டார்கெட் செய்து மார்கோ யான்சனிடம் பந்தை கொடுக்க, ஒரு அசத்தலான டெலிவரி மூலம் ஹர்சித் ரானாவை போல்டாக்கிய யான்சன் 8வது விக்கெட்டை எடுத்துவந்தார்.
அச்சுறுத்திய ரஸ்ஸெல்.. வரலாறு படைத்த பஞ்சாப்!
எல்லாம் முடிந்துவிட்டது இனி பஞ்சாப் கிங்ஸ் அணி எளிதாக 2 விக்கெட்டுகளை வீழ்த்திவிடும் என நினைத்தபோது, சாஹல் வீசிய ஒரே ஓவரில் 2 சிக்சர் 1 பவுண்டரி என அடுத்தடுத்து பறக்கவிட்ட ரஸ்ஸெல் ’நான் இன்னும் களத்தில் தான் இருக்கிறேன்’ என பஞ்சாப் அணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தினார்.
வெற்றிபெற இன்னும் 17 ரன்கள் மட்டுமே தேவை என்ற இடத்தில் ரஸ்ஸெலுக்கு ஸ்டிரைக் கொடுத்தால் போதும் என்ற முடிவில் மறுமுனையில் வைபவ் பேட்டிங் செய்ய, ஒரு அற்புதமான பவுன்சரை வீசிய அர்ஷ்தீப் சிங் 9வது விக்கெட்டை எடுத்துவந்து கலக்கிப்போட்டார்.
இப்போது ஸ்டிரைக்கில் ஆண்ட்ரே ரஸ்ஸல் பேட்டிங் செய்ய, கடைசி ஒரு விக்கெட்டை தேடி பந்துவீசினார் மார்கோ யான்சன். வீசிய முதல்பந்தையே ரஸ்ஸெல் அடிப்பதற்கு செல்ல, பந்து எட்ஜாகி ஸ்டம்பை தகர்த்தது. முடிவில் 10வது விக்கெட்டையும் இழந்த கொல்கத்தா அணி 112 ரன்களை அடிக்க முடியாமல் வெறும் 95 ரன்களுக்கு சுருண்டு வரலாற்று தோல்வியை சந்தித்தது.
இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 111 ரன்கள் என்ற மிகைக்குறைவான டோட்டலை டிஃபண்ட் செய்துவெற்றிபெற்ற முதல் அணியாக வரலாற்று சாதனை படைத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. 116 ரன்களை டிஃபண்ட் செய்திருந்த சிஎஸ்கே அணியின் சாதனையை உடைத்தது பஞ்சாப் அணி.
4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட யுஸ்வேந்திர சாஹல் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.