Ind Vs Eng | நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ரிஷப் பண்ட்.. ஐசிசி எடுத்த நடவடிக்கை இதுதான்!
இங்கிலாந்திற்குச் சென்றுள்ள ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, 5 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதன் முதற்போட்டியில் இந்திய இளம்படை ரன் வேட்டை நடத்தியுள்ளது. அதாவது முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோரின் சதத்தால் 471 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் ஆகியோரின் சதத்தால் 364 ரன்களும் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 465 ரன்கள் எடுத்ததைத் தொடர்ந்து, அவ்வணி வெற்றிபெற 371 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த நிலையில், போட்டியின் மூன்றாவது நாளில் இந்திய அணி பந்து வீசி கொண்டிருந்தபோது 61வது ஓவரில், ஹாரி புரூக் முகமது சிராஜின் பந்தை ஸ்லிப்பில் அடிக்க, அது பவுண்டரிக்குச் சென்றது. அப்போது, ரிஷப் பண்ட் உடனடியாக நடுவரிடம் சென்று பந்தின் வடிவம் மாறி உள்ளதாகவும், உடனடியாக வேறு பந்தை மாற்றித்தரும்படியும் கேட்டார். ஆனால் நடுவர் பந்தை முழுவதும் சோதனை செய்துவிட்டு விளையாடுவதற்கு ஏற்றார்போல்தான் உள்ளது. பந்தை மாற்ற முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த ரிஷப் பண்ட், நடுவரின் மீது பந்தை வேகமாகத் தூக்கி எறிந்தார். பந்து நடுவரின் மீது படவில்லை என்றாலும், அவரின் இந்தச் செயல் ஐசிசியின் போட்டி விதிகளை மீறியதாகக் கூறப்பட்டது. இதனால் அவருக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் தடை விதிக்கப்படலாம் அல்லது அபராதம் விதிக்கப்படலாம் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில், நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக ரிஷப் பண்ட்டை ஐசிசி அதிகாரப்பூர்வமாக கண்டித்துள்ளது.
ஐ.சி.சி நடத்தை விதிகளின் நிலை 1ஐ ரிஷப் பண்ட் மீறியதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சர்வதேச போட்டியின்போது நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்பான வீரர்கள் மற்றும் வீரர் ஆதரவு பணியாளர்களுக்கான ஐ.சி.சி நடத்தை விதிகளின் பிரிவு 2.8ஐ பண்ட் மீறியதாகக் கண்டறியப்பட்டது என்று ஐ.சி.சி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே, ரிஷப் பண்ட் குற்றத்தை ஒப்புக்கொண்டு ஐசிசி போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் முன்மொழிந்த தண்டனையை ஏற்றுக்கொண்டதால் அவர்மீது எந்த ஒழுங்கு விசாரணையும் எடுக்கப்படவில்லை. எனினும், பன்ட்டின் ஒழுக்காற்று பதிவில் ஒரு தகுதி இழப்பு புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது. இது 24 மாதங்களில் அவருக்கு ஏற்பட்ட முதல் குற்றமாகும். நிலை 1 மீறல்களுக்கு குறைந்தபட்ச தண்டனையாக அதிகாரப்பூர்வ கண்டனம், அதிகபட்ச அபராதமாக ஒரு வீரரின் போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் மற்றும் ஒன்று அல்லது இரண்டு தகுதி இழப்புப் புள்ளிகள் ஆகியவை அடங்கும். வீரர் ஒருவர், 24 மாத காலத்திற்குள் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட குறைபாடு புள்ளிகளை எட்டினால், அவை இடைநீக்க புள்ளிகளாக மாற்றப்பட்டு, ஒரு வீரர் தடை செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.