ENG vs IND | சதம் விளாசிய ரிஷப் பண்ட்.. தோனியின் 2 சாதனைகள் காலி!
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இங்கிலாந்து கேப்டன் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்ய இந்தியா பேட்டிங் செய்தது.
பரபரப்பாக நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே இந்தியாவின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் சுப்மன் கில் இருவரும் சதமடித்த நிலையில், இரண்டாவது நாளில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டும் சதமடித்து அசத்தியுள்ளார்.
ஜெய்ஸ்வால், கில் சதம்..
விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், ரோகித் சர்மா முதலிய மூத்த வீரர்கள் இல்லாமல், சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தை எதிர்த்து அவர்களின் சொந்த மண்ணில் களம்கண்டுள்ளது.
இதனால் இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பது இந்த தொடரில் தெரிந்துவிடும் என பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால் சச்சின் டெண்டுல்கர் 3-1 என இந்தியா தொடரை வெல்லும் என ஆரூடம் வழங்கி ஆதரவு தெரிவித்தார்.
இந்த சூழலில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 101 ரன்கள் அடித்து மிரட்டிவிட்டார். அவரை தொடர்ந்து அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்திய கேப்டன் சுப்மன் கில் 14 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசி, கேப்டனாக அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து சாதனை படைத்தார்.
சதமடித்து தோனியின் சாதனையை காலிசெய்த பண்ட்..
இந்திய அணி முதல்நாள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 359 ரன்கள் அடித்த நிலையில், சுப்மன் கில் 127 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 65 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட், 10 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் மூலம் தன்னுடைய 7வது டெஸ்ட் சதத்தை பதிவுசெய்து அசத்தினார்.
இதன் மூலம் இந்தியாவிற்காக அதிக சதங்கள் அடித்திருந்த விக்கெட் கீப்பர் தோனியின் (6 சதங்கள்) சாதனையை முறியடித்தார் ரிஷப் பண்ட்.
இந்தியாவிற்காக அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர்கள்:
* ரிஷப் பண்ட் - 7 சதங்கள்
* மகேந்திர சிங் தோனி - 6 சதங்கள்
* ரித்திமான் சாஹா - 3 சதங்கள்
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 6 சிக்சர்களை விளாசிய ரிஷப் பண்ட், டெஸ்ட் கிரிக்கெட்டில் 79 சிக்சர்களை பதிவுசெய்தார்.
இதன்மூலம் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த மகேந்திர சிங் தோனியை (78) பின்னுக்கு தள்ளி 3வது இடம் பிடித்தார். முதல் இரண்டு இடங்களில் சேவாக் (90) மற்றும் ரோகித் சர்மா (88) நீடிக்கின்றனர்.
சுப்மன் கில் 147 ரன்கள் அடித்திருந்த போது வெளியேறினார். அதனைத்தொடர்ந்து வந்த கருண் நாயர் 0 ரன்னில் அவுட்டாக, ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் பேட்டிங் செய்துவருகின்றனர்.