IND vs ENG Test | ரிஷப் பண்ட்-க்கு சீரியஸான காயம்.. வெளிவந்த முக்கிய தகவல்.. கவலையில் இந்திய அணி!
இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி, அவ்வணியுடன் தற்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் இங்கிலாந்து 2 போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையேயான 4வது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இதற்கிடையே நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில், ரிஷப் பண்ட், கிறிஸ் வோக்ஸ் வீசிய ஃபுல் டாஸ் பந்தை ரிவர்ஸ் ஷாட் ஆட முயற்சிக்க பந்து வேகமாக அவரது காலை தாக்கியது. இதனால் வலி தாங்க முடியாமல் துடித்த ரிஷப் பண்ட் மருத்துவக் குழுவை அழைத்தார். பந்து தாக்கியதால் ரத்தம் வெளிப்பட, வலியால் அவதிப்பட்ட ரிஷப் பண்ட் மினி ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச்செல்லப்பட்டார். 37 ரன்கள் இருந்த நிலையில் ரிட்டயர்ட் ஹர்ட் மூலம் மைதானத்தில் இருந்து கோல்ப் வாகனத்தில் வெளியேறினார்.
ரிஷ்ப் பண்ட் காயம் தொடர்பாக பிசிசிஐ தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தது. இதுதொடர்பாக பிசிசிஐ தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், “மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ரிஷப் பண்ட்டின் வலது பாதத்தில் பந்து தாக்கி காயம் ஏற்பட்டது. மைதானத்தில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டு ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. அவர் காயத்தில் இருந்து எப்படி முன்னேறி வருகிறார் என்பதை பிசிசிஐ மருத்துவக் குழு கண்காணித்து வருகிறது” என்று குறிப்பிட்டிருந்தது.
இந்த நிலையில், ஸ்கேன் பரிசோதனைக்காக ரிஷப் பண்ட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த மருத்துவப் பரிசோதனையில் அவரது கால் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அவர் ஆறு வாரங்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, “ரிஷப் பண்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது, அதில் கால் விரல் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவருக்கு வலி அதிகமாக இருப்பதால் அவர் பேட்டிங் செய்ய வாய்ப்பில்லை” என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து, இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சியுள்ள ஒரு டெஸ்ட் போட்டியிலிருந்தும் பண்ட் விலக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பண்ட், காயம் அடைவது இது முதல் முறை அல்ல. முன்னதாக, மூன்றாவது டெஸ்டில் லார்ட்ஸில் விக்கெட் கீப்பிங் செய்யும்போது அவரது இடது ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே காயம் காரணமாக ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் விலகியுள்ள நிலையில், பண்ட்டின் இந்த திடீர் விலகலும் இந்தியாவுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
ரிஷப் பண்ட் அணியில் இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. பிளாட் பிட்சுகளில் சிறப்பாக பேட்டிங் செய்யும் கேப்டன் சுப்மன் கில் போன்ற இந்திய வீரர்கள் கொஞ்சம் கடினமான ஆடுகளங்களில் தடுமாறுகிறார்கள். கே.எல்.ராகுல் போன்றவர்களே பெரும்பலான போட்டிகளில் ரன்கள் அடிக்கிறார்கள். ரிஷப் பண்ட் இங்கிலாந்து அணிக்கு எதிராக சிறப்பாக பேட்டிங் செய்கிறார். நிதானமாகவும் அதே நேரத்தில் சிக்ஸர்கள் விளாசி அதிரடியாகவும் ரன்களை சேர்க்கிறார். முக்கியமான நேரத்தில் தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் திறன் அவருக்கு இருக்கிறது. அதனால், ரிஷப் மீதமுள்ள ஆட்டங்களில் இல்லாதது இங்கிலாந்து அணிக்கு சாதகமாக அமையும்.
ரிஷப் பண்டிற்கு பதிலாக இஷான் கிஷனை 5வது போட்டிக்கு தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் போட்டியில் அவருக்கு பதிலாக ஜூரல் விக்கெட் கீப்பிங் செய்வார் என்று தெரிகிறது.