ரிஷப் பண்ட் காயம்
ரிஷப் பண்ட் காயம்web

அதிவேகமாக காலை தாக்கிய பந்து.. ரத்த காயத்துடன் ஆம்புலன்ஸில் வெளியேறிய பண்ட்!

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் காலில் ஏற்பட்ட ரத்தக்காயத்தால் வலி தாங்க முடியாமல் ஆம்புலன்ஸில் ரிஷப் பண்ட் அழைத்துச்செல்லப்பட்டார்.
Published on

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது. வெற்றிக்கு 193 ரன்களே தேவையாக இருந்த நிலையில் இந்தியாவே வெற்றிபெறப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்தியாவின் டாப் ஆர்டர் வீரர்கள் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் நல்ல வாய்ப்பை இழந்த இந்திய அணி 1-2 என தொடரில் பின்தங்கியுள்ளது.

இங்கிலாந்து - இந்தியா
இங்கிலாந்து - இந்தியா

இந்த சூழலில் தொடரை 2-2 என சமன் செய்யும் முயற்சியில் இந்திய அணி 4வது போட்டியில் களமிறங்கியுள்ளது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்ய இந்திய அணி பேட்டிங் செய்துவருகிறது.

வலிதாங்க முடியாமல் வெளியேறிய பண்ட்..

பரபரப்பாக தொடங்கிய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். உணவு இடைவேளை வரைக்கும் விக்கெட்டை விட்டுக்கொடுக்காத இந்த ஜோடி 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தியது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் 46 ரன்கள் அடித்து வெளியேற, மறுமுனையில் 10 பவுண்டரிகள் 1 சிக்சர் என அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் 58 ரன்கள் அடித்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களத்திற்கு வந்த சாய் சுதர்சனும் அரைசதமடித்து அசத்தினார்.

மறுமுனையில் 2 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசிய ரிஷப் பண்ட், கிறிஸ் வோக்ஸ் வீசிய ஃபுல் டாஸ் பந்தை ரிவர்ஸ் ஷாட் ஆட முயற்சிக்க பந்து வேகமாக பண்ட்டின் காலை தாக்கியது. இதனால் வலி தாங்க முடியாமல் துடித்த ரிஷப் பண்ட் மருத்துவ குழுவை அழைத்தார். பந்து தாக்கியதால் ரத்தம் வெளிப்பட, வலியால் அவதிப்பட்ட ரிஷப் பண்ட் மினி ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச்செல்லப்பாட்டார். 37 ரன்கள் இருந்த நிலையில் ரிட்டயர்ட் ஹர்ட் மூலம் வெளியேறினார்.

அவரைத்தொடர்ந்து அணியை பொறுப்பை உணர்ந்து எடுத்துச்செல்வார் என நினைத்த சாய் சுதர்சன் 61 ரன்கள் அடித்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் அடித்துள்ளது. ஷர்துல் தாக்கூர் மற்றும் ஜடேஜா இருவரும் களத்தில் நீடிக்கின்றனர்.

விபத்தில் இருந்து மீண்டு சிறப்பாக பேட்டிங் செய்யும் ரிஷப்!!

கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 30 அன்று டெல்லியில் இருந்து தனது சொந்த ஊரான ரூர்க்கிக்கு காரில் சென்று கொண்டிருந்த ரிஷப் பண்ட், தனது காரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்த தடுப்புச் சுவரில் மோதியதில் விபத்தில் சிக்கினார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அதிகப்படியான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரிஷப் பண்ட்டின் கழுத்து முதல் முழங்கால் வரை தோல்பகுதிகள் சேதமாகியிருந்தன.

ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட்

பிழைப்பாரா மாட்டாரா என்ற நிலைமையிலும் ‘என்னால் கிரிக்கெட் விளையாட முடியுமா’ என்ற கேள்வியை தான் ரிஷப் பண்ட் கேட்டார் என்று அவருடைய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் டின்ஷா பர்திவாலா வெளிப்படுத்தியுள்ளார். கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேல் சிகிச்சையில் இருந்த ரிஷப் பண்ட், விபத்திற்கு பிறகு டி20 உலகக்கோப்பை சாம்பியனாக மாறியது மட்டுமில்லாமல், தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிற்கும் திரும்பி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார்.

Rishabh Pant
ரிஷப் பண்ட்cricinfo

முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் முறையே 134, 118 ரன்கள் என சதம் விளாசி அசத்தினார். இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் 25 ரன்கள் எடுத்தாலும், இரண்டாவது இன்னிங்ஸில் 65 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். மூன்றாவது போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் 74 ரன்கள் சேர்த்து அசத்தினார். தற்போது நான்காவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தான் பந்துதாக்கி காயத்தால் வெளியேறியிருக்கிறார்.

கடந்த போட்டிகளின் போதும் பேட்டிங் செய்யும் போது காயத்தால் அவதிப்பட்டு வந்தார். கீப்பிங் செய்யும் போதும் அவரால் வலியை தாண்டி செயல்பட முடியவில்லை. அதனால் தான் அவருக்கு பதிலாக ஜூரல் கீப்பிங் செய்தார்.

பிசிசிஐ வெளியிட்ட தகவல்:

ரிஷ்ப் பண்ட் காயம் தொடர்பாக பிசிசிஐ தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், “மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ரிஷப் பண்ட்டின் வலது பாதத்தில் பந்து தாக்கி காயம் ஏற்பட்டது. மைதானத்தில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டு ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. அவர் காயத்தில் இருந்து எப்படி முன்னேறி வருகிறார் என்பதை பிசிசிஐ மருத்துவக் குழு கண்காணித்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

இந்திய அணி தற்போது உள்ள நிலையில் இன்னும் 100 ரன்களுக்கு மேல் அடித்து 350 அல்லது 400 ரன்களை எட்டினால்தான் இங்கிலாந்து அணியை சமாளிக்க முடியும். அதற்கு ரிஷப் பண்ட் மீண்டும் வந்து கூடுதலாக ரன்கள் அடித்தால் சிறப்பாக இருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com