சென்னை டி20 போட்டி | வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு! முதல் ஓவரில் விக்கெட் இழந்த இங்கிலாந்து!
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது.
முதலில் தொடங்கப்பட்ட டி20 தொடரின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியை 132 ரன்னில் சுருட்டிய இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்தது.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
நிதிஷ் குமார் தொடரிலிருந்து வெளியேற்றம்..
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வுசெய்தார். முதல் போட்டியிலிருந்த அணியிலிருந்து இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். இரண்டாவது போட்டியில் லோக்கல் பாய் வாசிங்டன் சுந்தர் மற்றும் துருவ் ஜுரேல் இருவரும் இணைக்கப்பட்டுள்ளனர்.
நிதிஷ் குமார் ரெட்டி காயம் காரணமாக தொடரிலிருந்தே வெளியேறுவதாகவும், ரிங்கு சிங் ஓரிரு போட்டிகளில் திரும்புவார் என்றும் தெரிவித்தார். அதன்படி நிதிஷ்குமாருக்கு மாற்று வீரராக வாஷிங்டன் மற்றும் ரிங்கு சிங்குவிற்கு மாற்றாக துருவ் ஜுரேலும் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்தியா பிளேயிங் லெவன்: சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ்(c), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் பவுண்டரி உடன் தொடங்கினார். இருப்பினும் அர்ஸ்தீப் சிங் வீசிய இந்த ஓவரிலேயே தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்து 4 ரன்னில் வெளியேறினார். இரண்டு ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 10 ரன்னிற்கு ஒரு விக்கெட் இழந்துள்ளது.