இந்திய பவுலராக அதிக டி20 விக்கெட்.. யுஸ்வேந்திர சாஹல் இடம் மன்னிப்பு கேட்ட அர்ஷ்தீப் சிங்!
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது.
முதலில் தொடங்கப்பட்ட டி20 தொடரின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 132 ரன்னில் சுருண்டது. அபாரமாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அதனைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணி அபிஷேக் சர்மாவின் அதிரடியான 79 ரன்களால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்தது. அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்கள் அடங்கும்.
ஆட்டநாயகனாக வருண் சக்கரவர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதிக டி20 விக்கெட்டுகள்..
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு, டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலராக மாறி புதிய சாதனை படைத்தார். இதன்மூலம் 96 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருந்த யுஸ்வேந்திர சாஹலின் சாதனையை முறியடித்து, 97 விக்கெட்டுகளுடன் முதலிடம் பிடித்தார் அர்ஷ்தீப் சிங்.
இந்நிலையில், போட்டிக்கு பிறகான உரையாடலில் பேசிய அர்ஷீப் திங், யுஸ்வேந்திர சாஹலின் ஆல்டைம் ரெக்கார்டை உடைத்ததற்காக அவருடைய காதுகளில் வைத்து மன்னிப்பு கேட்டு சைகை செய்தார். தொடர்ந்து பேசிய அவர், ”இது உண்மையில் மிகப்பெரிய தருணம், எனது கடின உழைப்பு பலனளித்துள்ளது, அதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கவிரும்புகிறேன். நாட்டிற்காக தொடர்ந்து விக்கெட்டுகளை எடுக்க முயற்சிப்பேன்” என்று கூறினார்.
இந்தியாவிற்காக அதிக டி20 விக்கெட்டுகள்:
1. அர்ஷ்தீப் சிங் - 97 விக்கெட்டுகள் - 61 போட்டிகள்
2. யுஸ்வேந்திர சாஹல் - 96 விக்கெட்டுகள் - 80 போட்டிகள்
3. புவனேஷ்வர் குமார் - 90 விக்கெட்டுகள் - 87 போட்டிகள்
4. ஜஸ்பிரித் பும்ரா - 89 விக்கெட்டுகள் - 70 போட்டிகள்
5. ஹர்திக் பாண்டியா - 89 விக்கெட்டுகள் - 119 போட்டிகள்