CSK | ‘விட்டது ரெண்டே ராக்கெட்.. LAND ஆனது மக்கள் மனசுல..’ - ரிஸ்வியும் ரெய்னாவும் ஓர் ஒப்பீடு!

ஐபிஎல் போட்டி ஒன்றில் கூட ஆடாத ஒருவருக்கு ஏன் ரூ.8.4 கோடி என்ற கேள்வி எழாமல் இல்லை. ஆனால், அதற்கான பதிலை, தனது கடந்த காலங்களிலேயே கொடுத்திருந்தார் ரிஸ்வி.
ரிஸ்வி - ரெய்னா - தோனி
ரிஸ்வி - ரெய்னா - தோனிTwitter

ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும், இளம் நட்சத்திர வீரர் ஒருவர் ஒட்டுமொத்த மக்களது கவனத்தையும் ஈர்ப்பார். ஒரு ஆண்டில் ருதுராஜ் என்றால், மறுஆண்டில் ரிங்கு சிங். ஆனால், இந்தாண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தின்போதே அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் இளம் கிரிக்கெட்டரான சமீர் ரிஸ்வி.

ரூ.20 லட்சம் TO ரூ. 8.4 கோடி

அடிப்படை விலையான 20 லட்சத்தில் ஆரம்பித்த அவருடைய ஏலம், யாரும் எதிர்ப்பார்க்காத 8.4 கோடிக்கு சென்றது. குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் அனைத்தும் இளம் டேலண்டான சமீர் ரிஸ்விக்கு போட்டிப்போட்ட நிலையில், ரூ.8.4 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரைத் தட்டிச் சென்றது.

ஐபிஎல் போட்டி ஒன்றில் கூட ஆடாத ஒருவருக்கு ஏன் ரூ.8.4 கோடி என்ற கேள்வி எழாமல் இல்லை. ஆனால், அதற்கான பதிலை, தனது கடந்த காலங்களிலேயே கொடுத்திருந்தார் ரிஸ்வி.

ரிஸ்வி - ரெய்னா - தோனி
நாடி, நரம்பு.. அனைத்திலும் ஊறிப்போன CSK! ஆசை இருந்தும் பேட்டிங் செய்ய வராத தோனி! நெகிழ்ச்சி சம்பவம்!

’தோனி பட்டறை’யின் அடுத்த தலைமுறை

20 வயதுடைய உத்தரப்பிரதேச வீரரான சமீர் ரிஸ்வி, அனைத்துவிதமான உள்நாட்டு தொடர்களிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். சமீபத்தில் கூட உத்தரப்பிரதேச டி20 லீக் தொடரில், 9 ஆட்டங்களில் இரு சதங்கள் உட்பட 455 ரன்களை குவித்திருந்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அவரது சராசரி 29. உள்நாட்டு டி20 போட்டிகளில் அவரது சராசரி 49.2. இந்த சாதனை கோபுரங்களின் மூலமே, ஐபிஎல் அணிகளின் நிர்வாகத்தின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார். இந்நிலையில்தான், தோனி பட்டறையில் கூர்தீட்டப்பட அஸ்வின், ஜடேஜா, ருதுராஜ், சாஹர், பதிரானா வரிசைகளில் இவரும் இணைந்துள்ளார்.

நேற்று, தான் சந்தித்த முதல் இரு பந்துகளில், அதுவும் ரஷித் கான் பந்துவீச்சில், அவர் அடித்த இரண்டு சிக்ஸர்கள், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தில் அவரது இடத்திற்கான தேவையை பசுமரத்தாணி போல் பதியச் செய்தது. அதேபோல், ரூ.8.4 கோடி ஏன் என்று கேட்டவர்களுக்கு பதிலாகவும் அமைந்தது. எதிரணியை தனது கட்டுக்குள் வைத்திருப்பதுதான் ரஷித் பாணி. ஆனால், அவரையே நிலைகுலையைச் செய்தனர் சென்னை சிங்கங்கள். அதிலும், மிகப்பெரிய தொடர் ஒன்றில், உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளரை எதிர்கொள்ளும்போது முதல் பந்தையே ராக்கெட் விடுவார் என்றும் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர், அந்த ஓவரின் கடைசி பந்தில் இரண்டாவது சிக்ஸர் அடித்தபோது, தோனியின் சிரிப்பே தனது தேர்வின் நியாயத்தை சொன்னது.

ரிஸ்வி - ரெய்னா - தோனி
'இடுப்பு உயர No Ball' சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி.. புதிய டெக்னாலஜியை கையில் எடுக்கும் BCCI! விவரம்!

சமீர் ரிஸ்வி = சுரேஷ் ரெய்னா

சமீர் ரிஸ்வி கிரிக்கெட்டின் அடுத்த ரெய்னா என்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள். அதற்கு உதாரணமாக சில புள்ளிவிபரங்களையும் காட்டுகின்றனர். அவற்றை பார்க்கலாம்...

- 2003 ஆம் ஆண்டு தனது 16 ஆவது வயதில் சுரேஷ் ரெய்னா, உத்தரப்பிரதேச ரஞ்சி அணிக்காக அறிமுகமானார். சமீர் ரிஸ்வியும் தனது 16 ஆவது வயதில் உத்தரப்பிரதேச அணிக்காக ரஞ்சி தொடரில் அறிமுகமானவர்.

- சென்னை அணிக்காக ரெய்னா அறிமுகமான தனது முதல் இன்னிங்ஸில், ரெய்னா அடித்தது 13 பந்துகளில் 32 ரன்கள். சமீர் அடித்தது 6 பந்துகளில் 14 ரன்கள்.

- ரெய்னா சாவ்லா என்ற லெக் ஸ்பின்னரை நொறுக்கினார் என்றால், சமீர் ரஷ்த், கான் என்ற லெக் ஸ்பின்னரை திணற வைத்தார்.

- இருவரும் தனது முதல் இன்னிங்ஸில் 6 ஆவது இடத்தில் களமிறங்கியவர்கள்.

- ஸ்பின்னர்களுக்கு எதிராக ரிஸ்வி அடிக்கும் சிக்ஸர்கள் ரெய்னாவை ஒத்திருக்கிறது என்பதே பலரது கருத்தும்.

ரிஸ்வி - ரெய்னா - தோனி
சென்னையில் ஐபிஎல் இறுதிப்போட்டி.. தோனிக்கு ஃபேர்வெல் நடத்த சரியான வாய்ப்பு - சாதிக்குமா சிஎஸ்கே படை!

”சமீர் ரிஸ்வி பயமில்லாதவர்” - மைக்கேல் ஹஸ்ஸி

நேற்றைய போட்டி முடிந்தபின் மைக்கேல் ஹஸ்ஸி செய்தியாளர்களிடம் கூறிய வார்த்தைகள் - “இப்போதைய இளைஞர்களிடம் உள்ள சிறந்த குணாதிசயம் பயமின்மை. சமீர் ரிஸ்வியிடமும் அது இருக்கிறது. உள்ளே வந்ததும் அவரால் சிக்சர் அடிக்க முடிகிறது. எல்லோரும் தோனி வருவார் என நினைத்த நிலையில், சமீரின் திறனை மனதில் வைத்தே அவரை தோனிக்கு முன்பாக இறக்கினார்கள். அவரும் இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டார். சேப்பாக்கம் ரசிகர்களும் ஹேப்பி”. ஆம், சமீர் ரிஸ்வி பயமில்லாதவர்தான். அவர் விடப்போகும் ராக்கெட்கள், இனி இந்திய அணிக்கான தேர்வாளர்களின் டேபிளில் போய் விழப்போகிறது.

ரிஸ்வி - ரெய்னா - தோனி
யாஷ் தயாளை ‘குப்பை’ என விமர்சித்த முரளி கார்த்திக்! 'Thug Life' ரிப்ளை கொடுத்த RCB அணி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com