புதிய சிக்கலில் பிசிசிஐ.. ரூ.538 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு! நடந்தது என்ன?
இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் என்ற பெயரில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குக் குறையாமல் கிரிக்கெட் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை, 18 தொடர்கள் நடைபெற்று உள்ளன. இதில் தற்போது 10 அணிகள் இடம்பெற்று விளையாடி வருகின்றன. முன்னதாக, இந்த தொடரில் ஒரேயொரு சீசனில் மட்டும் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா என்ற அணி விளையாடியது. அதன்பிறகு, கடந்த 2011ஆம் ஆண்டு இந்த தொடரில் இருந்து கொச்சி அணியை நீக்கம் செய்து பிசிசிஐ நடவடிக்கை எடுத்தது.
ஆண்டுத் தொகையை செலுத்தத் தவறியதால், பிசிசிஐ அவர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. உரிய வங்கி உத்தரவாதத்தைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் சமர்ப்பிக்காததே காரணம் என பிசிசிஐ விளக்கம் அளித்தது. ஆனால், மைதான அனுமதி உள்ளிட்ட விவகாரத்தினால் மட்டுமே தாமதம் ஏற்பட்டதாக கொச்சி அணி தெரிவித்திருந்தது.
பிசிசிஐயின் இந்த நடவடிக்கையை எதிர்த்து கொச்சி அணி வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து, கடந்த 2015ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில், கொச்சி அணிக்கு ரூ.384 கோடியும், ரென்டோவஸ் ஸ்போர்ட்ஸ் வேர்ல்டுக்கு ரூ.154 கோடியும் என மொத்தம் ரூ.538 கோடி செலுத்த வேண்டும் என பிசிசிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து பிசிசிஐ மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த நீதிபதி சாக்லா, பிசிசிஐயின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததுடன், கொச்சி அணிக்கு உரிய இழப்பீட்டை வழங்க உத்தரவிட்டார். மேலும், மேல்முறையீடு செய்ய பிசிசிஐக்கு 6 வார காலம் அவகாசம் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது பிசிசிஐக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
ரூ.1,550 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட கொச்சி அணி, அந்த ஒரே சீசனில், 14 லீக் ஆட்டங்களில் ஆறு ஆட்டங்களில் வெற்றி பெற்றதன் மூலம், 10 அணிகள் கொண்ட பட்டியலில் எட்டாவது இடத்தைப் பிடித்தது. ஹாட்ஜைத் தவிர, மகேலா ஜெயவர்த்தனே, பிரெண்டன் மெக்கல்லம் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அந்த அணிக்காக விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.