ஸ்ரேயாஸ் இடம்பெறாதது ஏன்? | பிசிசிஐ திட்டம் இதுதான்.. கவுதம் காம்பீர் சொல்வது என்ன?
18வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் மோதியதில் பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மும்பை ஆகிய 4 அணிகள் பிளேஆப் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளன. அதன்படி, புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருக்கும் பஞ்சாப், பெங்களூரு ஆகிய அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதில் வெற்றிபெறும் அணி, நேரிடையாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும். தோல்வி பெறும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்.
இந்த நிலையில், ஐபிஎல்லின் இறுதிப்போட்டிக்கான பணிகள் வேகம் பிடித்து வருகின்றன. இதைச் சிறப்பாகக் கொண்டாட பிசிசிஐ திட்டம் போட்டுள்ளது. அந்த வகையில், ஐபிஎல் இறுதிப்போட்டியில் பங்கேற்க முப்படைத் தளபதிகளான ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி, விமானப் படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் ஆகியோருக்கு பிசிசிஐ சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் காம்பீர், “இதுபோன்ற ஒரு முயற்சியை எடுத்ததன் மூலம், பிசிசிஐக்கு நாம் நிறைய நன்றி சொல்ல வேண்டும். மேலும் முக்கியமாக நிபந்தனையின்றி நமக்கு உதவி செய்து நம்மைக் காப்பாற்றி பாதுகாத்து வரும் நமது ஆயுதப் படைகளுக்கு நன்றி சொல்ல வேண்டும். பொதுவாக நாங்கள் பல விஷயங்களில் பிசிசிஐயை நிறைய விமர்சிக்கிறோம். ஆனால் இந்த முயற்சி என்பது நம்பமுடியாத ஒன்று. முழு தேசமும் ஒன்று என்ற கண்ணோட்டத்தில் பிசிசிஐ ஒரு முயற்சியை எடுத்துள்ளது. மேலும் முழு தேசமும் ஆயுதப் படைகள் நிபந்தனையின்றிச் செய்யும் செயல்களுக்கு வணக்கம் செலுத்த வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறாதது குறித்த கேள்விக்கு, “நான் ஒரு தேர்வாளர் அல்ல” எனப் பதிலளித்தார். தற்போதைய ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான ஞ்சாப் கிங்ஸ் அணி, 11 ஆண்டுகளுக்குப் பிறகு பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. தவிர, இந்தத் தொடரில் ஸ்ரேயாஸ் சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறார். எனினும், அவர் தேர்வு செய்யப்படாதது விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.