GOAT OF STUMPING.. அதிவேகமான கைகள்! சால்ட்டை நூலிழையில் வெளியேற்றிய தோனி!
2025 ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய ரைவல்ரி போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் சேப்பாக்கத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
2024 ஐபிஎல் தொடரில் மே 18-ம் தேதி நடந்த லீக் போட்டியில் தோற்றதற்கு பழிதீர்க்க வேண்டும் என ஒட்டுமொத்த மஞ்சள் படை ரசிகர்களும் காத்திருக்கும் நிலையில், 17 வருடத்திற்கு பின் சென்னையில் சிஎஸ்கேவை ஆர்சிபி அணி வீழ்த்துமா என்ற எதிர்ப்பார்ப்பில் ஆர்சிபி ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.
மின்னல் வேக ஸ்டம்பிங்கில் அசத்திய தோனி..
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இரண்டு அணிகளும் ஒரு வெற்றிக்கு பிறகு இரண்டாவது போட்டியில் களம்காண்கின்றன.
இரண்டு அணிகளுக்கும் இது முக்கியமான போட்டி என்பதால் அவர்களின் பிரைம் பவுலர்களான பதிரானா மற்றும் புவனேஷ்வர் குமார் இருவரும் அணிக்கு திரும்பியுள்ளனர்.
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வுசெய்ய ஆர்சிபி அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் மற்றும் விராட் கோலி இருவரும் களமிறங்க, அதிரடி வீரர் பிலிப் சால்ட் சிக்சர் பவுண்டரிகளாக விரட்டி ரன்களை எடுத்துவந்தார்.
ஒருபுறம் விராட் கோலியை அடிக்கவிடாமல் பவுலர்கள் டைட்டாக பந்துவீச, விக்கெட்டில் ஃபுட்டை சிறப்பாக பயன்படுத்திய பிலிப் சால்ட் 13 பந்தில் 5 பவுண்டரிகள் 1 சிக்சர் என பறக்கவிட்டு அசத்தினார். 4 ஓவர்களுக்கு 40 ரன்களை ஆர்சிபி கடக்க முதல் விக்கெட்டுக்காக பவுலர்களை மாற்றிக்கொண்டே இருந்தார் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்.
இந்த சூழலில் விக்கெட் எடுக்க எதுக்கு பவுலர் என்பது போல, ஒரு அற்புதமான ஸ்டம்ப் அவுட் மூலம் சால்ட்டை அவுட்டாக்கி வெளியேற்றினார் விக்கெட் கீப்பர் தோனி. இந்தமுறை சால்ட் விக்கெட்டை விட்டு இறங்கிசெல்லவில்லை, ஒரு சாதாரண பந்தைப்போலவே எதிர்கொண்டார்.
ஆனால் விக்கெட்டில் காலை தூக்கிய சிறிய நேரத்தில் ஸ்டம்ப் அவுட் செய்து, தான் ஏன் சிறந்த விக்கெட் கீப்பர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தார் தோனி. சிஎஸ்கே பவுலர்களுக்கு ஆபத்தான வீரராக விளங்கிய பிலிப் சால்ட் தோனியின் அபாரமான ஸ்டம்பிங்கால் 32 ரன்னில் வெளியேறினார்.
11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 109 ரன்களை அடித்து விளையாடிவருகிறது ஆர்சிபி அணி.