IPL இறுதிப் போட்டி | வெற்றிக்கு முன்பே மகுடம் சூடிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர்
பஞ்சாப் அணியில் இருக்கும் வீரர்களிலேயே மூத்த வீரராக பார்க்கப்படும் சாஹலையும் பஞ்சாப் அணியின் வாகன ஓட்டுநர் இருவரையும் ஒரே மாதிரி தான் நடத்தப்போகிறோம். இந்த அணியின் கலாச்சாரம் அப்படித்தான் இருக்கப்போகிறது என்று இந்த ஐபிஎல் தொடருக்காக பஞ்சாப் அணி வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்த பிறகு முதல் நாளில் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஆகியோர் கூறியதாக மும்பைக்கு எதிரான கடைசி லீக் போட்டி முடிந்த பிறகு பஞ்சாப் அணி வீரர் ஷஷாங்க் சிங் கூறிய வார்த்தைகள் இவை இப்போதுவரை அவர்கள் இருவரும் அப்படித்தான் நடந்துகொள்கிறார்கள் என்றும் அவர் பெருமிதத்துடன் கூறியிருக்கிறார்.
ஒரு கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் அணி வீரர்களிடம் பெற்று இருக்கும் நன்மதிப்பிற்கு இதுவே சான்றாக இருக்கிறது. 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தோல்விக்குப் பிறகு இந்திய அணியை பிரதமர் சந்திக்கும்போது சர்ச்சைக்குரிய வகையில் ஷ்ரேயஸ் ஐயர் நடந்துகொண்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியது. அதன்பிறகு ஷ்ரேயஸ் ஐயரின் கிரிக்கெட் வாழ்க்கை பல்வேறு ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறது. இந்திய ஒருநாள் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக சிறந்த ரெக்கார்ட் வைத்திருந்த போதும் ஷ்ரேயஸ் ஐயருக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. தொடர்ந்து BCCI-யின் ஆண்டு ஒப்பந்தத்தில் இருந்தும் ஷ்ரேயஸ் ஐயர் நீக்கப்பட்டார்.
2023 ஆம் ஆண்டு 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 63 சராசரியுடன் 504 ரன்கள் குவித்த போதிலும் இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது அப்போதே பல்வேறு விவாதங்களை எழுப்பியது. இருப்பினும் ஷ்ரேயஸ் ஐயர் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தன்னை மேம்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வந்தார். மூத்த வீரர்கள் ரஞ்சி தொடர் போன்ற உள்ளூர் தொடர்களில் போதிய பங்களிப்பு வழங்கவில்லை என்றால் இந்திய அணியில் இடம் கிடையாது என்கிற உத்தரவால் தான் ஷ்ரேயஸ் ஐயருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக அப்போது சொல்லப்பட்டது. இதன் விளைவாக 2024 ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணிக்கு தலைமை தாங்கி அந்த அணிக்கு கோப்பையை பெற்றுக்கொடுத்தார் ஷ்ரேயஸ் ஐயர்.
தொடர்ந்து செய்யத் முஸ்டாக் அலி தொடரிலும் கோப்பையை வென்று காட்டினார். அதன் தொடர்ச்சியாக 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியையும் சிறப்பாக வழிநடத்தி 10 வருடங்களுக்கு பிறகு அந்த அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தார். பொதுவாக எந்த ஒரு ஐபிஎல் அணி சிறப்பாக செயல்பட்டாலும் அதற்காக முதலில் பாராட்டை பெறக்கூடிய நபர் கேப்டனாகதான் இருப்பார். அடுத்து பயிற்சியாளர் பார்க்கப்படுவார் ஆனால் கொல்கத்தா அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல பின்னணியில் இருந்தது அந்த அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் முக்கிய காரணம் என்கிற கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டது.
ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன் என்கிற பாராட்டை விட அதன் காரணகர்த்தா என்கிற பெயர் ஷ்ரேயஸ் ஐயரை விட கம்பீருக்கு அதிகம் கிடைத்தது. இதன்விளைவாக கொல்கத்தா அணியில் இருந்து விலகும் முடிவை எடுத்தார் ஷ்ரேயஸ் ஐயர். அடுத்து நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் பஞ்சாப் அணி ஷ்ரேயஸ் ஐயரை 26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. கூடவே டெல்லி அணியில் இருந்தபோது ஷ்ரேயஸ் ஐயருக்கு நன்கு பழக்கப்பட்ட ரிக்கி பாண்டிங் அந்த அணியின் பயிற்சியாளராகவும் கொண்டுவரப்படுகிறார். இதற்கிடையே கடந்தாண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக BCCI ஒப்பந்தத்திற்குள் மீண்டும் ஷ்ரேயஸ் ஐயர் கொண்டுவரப்படுகிறார்.
இந்த நிலையில்தான் இந்த ஆண்டு பஞ்சாப் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட ஷ்ரேயஸ் ஐயர் அந்த அணியை 11 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்று இருக்கிறார். இதன்மூலம் தொடர்ந்து 2 ஐபிஎல் இறுதி போட்டிக்கு முன்னேறிய மிகச்சில கேப்டன்கள் பட்டியலில் இடம்பிடித்தார். அதுமட்டுமல்லாமல் 3 வெவ்வேறு அணிகளை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்ற ஒரே கேப்டன் என்கிற பெருமையும் ஷ்ரேயஸ் ஐயருக்கு கிடைத்தது. ஐபிஎல் தொடரில் கேப்டனாக ஷ்ரேயஸ் ஜயர், 2017 ஆம் ஆண்டு 7 வருடத்திற்கு பிறகு டெல்லி அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்து சென்றார். 2020 ஆம் ஆண்டு டெல்லி அணியை முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு கொண்டுசென்றார், 2024 ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு 10 வருடங்களுக்கு பிறகு கோப்பையை வென்று கொடுத்தார். இப்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சாப் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்று இருக்கிறார்.
ஆனால் இவ்வளவு வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்ட போதிலும் அதுக்கான தகுந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது ஷ்ரேயஸ் ஐயரிடம் இருந்த ஆதங்கங்களில் ஒன்று. கொல்கத்தா அணியில் இருந்து வெளியேறிய பிறகு அவரே ஒரு பேட்டியில் இதை கூறியிருக்கிறார். இந்த நிலையில்தான் இந்த ஆண்டு குவாலிபையர் 2 ஆம் போட்டியில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தது மட்டுமல்லாமல் மும்பைக்கு எதிராக 200+ டார்கெட்டை வெற்றிகரமாக சேஸ் செய்த முதல் கேப்டன் என்கிற பெருமையையும் பெற்றார். இதன் விளைவு போட்டி முடிந்ததில் இருந்து இப்போது வரை சமூக வலைத்தளங்களில் பல்வேறு அணி ரசிகர்களாலும் ஷ்ரேயஸ் ஐயர் கொண்டாடப்பட்டு வருகிறார்.
இந்த போட்டிக்குப் பிறகு ஷ்ரேயஸ் ஐயருடன் பேசிய பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அவரை Coach with Winning Captain என்று அவரை அறிமுகம் செய்து வைத்தார். அதற்கு உடனே ஷ்ரேயஸ் ஜயர் Winning Coach with the Winning Captain என்று அதை திருத்தினார். இதைதான் அவர் எதிர்பார்த்தார். இப்போது அவருக்கு அது கிடைக்க தொடங்கியிருக்கிறது.