தீபிகா படுகோனே - சந்தீப் ரெட்டி வங்கா
தீபிகா படுகோனே - சந்தீப் ரெட்டி வங்காweb

இதான் உங்க பெண்ணியமா? vs சமபங்களிப்பு தரவேண்டாமா? |அனிமல் பட டைரக்டர் - தீபிகா படுகோனே இடையே மோதலா?

நடிகை தீபிகா படுகோனேவிற்கும் அனிமல் பட இயக்குநருக்கும் இடையே மோதல் நிலவிவருவதாக செய்திகள் வெளிவரும் சூழலில், பின்னணி என்ன என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம்..
Published on

தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் ’அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சந்தீப் ரெட்டி வங்கா. அதன் பிறகு ஹிந்தியில் ’கபீர் சிங்’, ’அனிமல்’ என அடுத்தடுத்த திரைப்படங்கள் மூலம் இந்திய திரையுலகின் முக்கிய இயக்குநராக வளர்ந்துள்ளார்.

சந்தீப் ரெட்டி வங்காவின் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும், விமர்சன ரீதியாகவும் கருத்து ரீதியாகவும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இத்தகைய படங்கள் தொடர்பான நேர்காணல்களில் சந்தீப் ரெட்டி வங்காவின் பதில்களும் பல சர்ச்சைகளை கிளப்பும்.

animal director sandeep reddy vanga
animal director sandeep reddy vanga

இந்நிலையில் பிரபல நடிகை ஒருவர் குறித்து சந்தீப் ரெட்டி வங்கா கடந்த மே 26ம் தேதி பதிவிட்ட சமூக வலைதள பதிவு பேசு பொருளானது. சந்தீப் ரெட்டி வங்கா தற்போது பிரபாஸின் நடிப்பில் ’ஸ்பிரிட்’ (Spirit) எனும் படத்தை இயக்கவுள்ளார். ’ஸ்பிரிட்’ திரைப்படத்தில் கதாநாயகியாக 'அனிமல்' பட நடிகை திருப்தி டிம்ரி நடிக்கிறார் என சமீபத்தில் தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க தீபிகா படுகோனேவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டது. அவர் நடிக்க சம்மதித்து பின் படத்திலிருந்து விலகியதாகவும் சர்ச்சை எழுந்தது. அவருக்குப் பதிலாகத்தான் திருப்தி டிம்ரி நாயகியாக அறிவிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

வெடித்ததா மோதல்?

இந்நிலையில் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா தனது எக்ஸ் தளத்தில் “நான் ஒரு நடிகருக்கு கதை சொல்லும்போது, 100% நம்பிக்கையுடன் தான் சொல்கிறேன். அந்த கதையை வெளியில் சொல்ல கூடாது என ஒரு சொல்லப்படாத உடன்படிக்கை எங்களுக்குள் இருக்கிறது. ஆனால் இதை வெளியில் கூறி நீங்கள் யார் என்பதை காட்டிவிட்டீர்கள். ஒரு இளம் நடிகரை கீழே தள்ளி, என் கதையை வெளியில் சொல்வது என்பது தான் உங்களது பெண்ணியமா? ஒரு இயக்குநராக என்னுடைய படைப்பிற்கு பின்னால் பல வருட கடின உழைப்பை போட்டிருக்கிறேன். திரைப்படங்களை எடுப்பது மட்டும்தான் எனக்கு எல்லாமே. அது உங்களுக்கு புரியவில்லை. புரியாது. எப்போதும் புரியாது. இன்னொன்றை செய்யுங்கள், அடுத்த முறை முழு கதையையும் சொல்லுங்கள். ஏனென்றால் அது எனக்கு ஒரு சிறிய வித்தியாசத்தைக் கூட ஏற்படுத்தாது” என காட்டமாக அந்த பதிவை வெளியிட்டிருந்தார்.

தீபிகா படுகோனே வெளியேறி வேறு ஒரு நடிகை வந்ததால், அவர் தீபிகா படுகோன் பற்றித்தான் இப்படி குறிப்பிட்டுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து தீபிகா ஏதாவது சொல்வாரா என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், கடந்த மே 31ம் தேதி தீபிகா படுகோன் கலந்து கொண்ட ஒரு பேட்டியில், பாலின பாகுபாடு உங்களை பாதித்துள்ளதா? எனக் கேள்வி கேட்டக்கப்பட, "அத்தகைய சூழலில் நானோ எனது சகோதரியோ வளரவில்லை. ஆனால் சினிமாவில் ஆண் நட்சத்திரத்திற்கும், பெண் நட்சத்திரத்திற்கும் வழங்கப்படும் சம்பளத்தில் அத்தகைய பாகுபாட்டை கவனிக்கிறேன்.

சமீபத்தில் இயக்குநர் ஒருவர் ஒரு படத்திற்காக என்னை அணுகினார். படைப்பாக அது எனக்கு பிடித்தது. ஆனால் பணம் பற்றி வரும் போது, நான் இவ்வளவு சம்பளம் வாங்குகிறேன் எனக் கூறினேன். எங்களால் இவ்வளவு சம்பளம் கொடுக்க முடியாது, ஏனென்றால் எங்கள் ஹீரோவுக்கு ஒரு பெரிய தொகை கொடுக்க வேண்டும் என அவர் கூறினார். சரி நீங்கள் சென்றுவாருங்கள் எனக் கூறிவிட்டேன்.

ஏனென்றால் என்னுடைய மதிப்பும், என் வெற்றிகளின் அளவும் எனக்கு தெரியும். மேலும் அந்த ஹீரோவின் படங்கள், என் படங்கள் போல வெற்றியடையவில்லை எனவும் எனக்கு தெரியும். எனவே அந்தப் படத்திற்கு நான் நோ சொன்னேன். ஏனெனில் சமமான பங்களிப்பை கொடுக்கும் இருவருக்கு சரியான அளவில் சம்பளம் அளிக்கப்படவில்லை என்ற சூழலில் பணியாற்ற எனக்கு விருப்பம் இல்லை." எனக் கூறினார்.

ஸ்பிரிட் படத்திலிருந்து வெளியேறியது பற்றியும், இயக்குநர் சந்தீப் மற்றும் நடிகர் பிரபாஸை தான் இந்த பதிலில் தீபிகா குறிப்பிட்டுள்ளார் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com