“நாலு வதந்தி பரப்பி என்ன காலி பண்ணலாம்னு நெனச்சா..” குபேரா மேடையில் கொதித்த தனுஷ்! பின்னணி இதுதான்!
குபேரா படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்ற தனுஷின் வீடியோவும், அவர் பேசிய காட்சிகளும் சமூகவலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன. குறிப்பாக, கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க என்று கூறி பேசுபொருளாக மாறி இருக்கிறார் தனுஷ். நடந்தவை குறித்து பார்க்கலாம்.
சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள குபேரா திரைப்படம், வரும் 20ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், படத்தின் வெளியீட்டை ஒட்டி, சென்னை தாம்பரம் அருகே நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
படத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரையுலகில் முன்னணி நடிகர்களாக திகழும் நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில், அனைவரும் விழாவில் பங்கேற்றனர். கதாநாயகனாக தனுஷ், நாயகியாக ராஷ்மிகா, முக்கிய ரோலில் நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்த நிலையில், வழக்கமான பாணியிலேயே வேட்டி அணிந்து விழாவில் பங்கேற்றார் தனுஷ். அப்போது, தனது பாடல் திரையிட்டபோது ஏதோ நினைத்தபடி ராயன் பட கெட்டப்பில் அமர்ந்திருந்த அவரது காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளன.
பதிலடி கொடுக்கும் பேச்சு.. நடந்தது என்ன?
அதோடு, தனது பேச்சில் பல விஷயங்களை குறிப்பிட்டிருக்கிறார் தனுஷ். ஆம், ‘நானும் ரௌடிதான்’ படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை தனது திருமண ஆவணத்தில் பயன்படுத்தி இருந்தார் நயன்தாரா. படத்தின் தயாரிப்பாளராக தனுஷ் இருக்கும் நிலையில், அவரிடம் அனுமதி பெறாமலேயே காட்சிகளை பயன்படுத்தியது பிரச்னையை கிளப்பியது. இதனால், இழப்பீடு கேட்டு தனுஷ் நோட்டீஸ் அனுப்ப, பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து தனுஷை காட்டமாக விமர்சித்தார் நயன்தாரா. இதையும் தாண்டி, திரைத்துறையினரின் தனிப்பட்ட சிக்கல்களுக்கும் தனுஷை ஒப்பிட்டு விமர்சித்து வருகிறது ஒரு தரப்பு. இப்படியாக திரையுலகில் ஒரு தரப்பினர் தனக்கு எதிராக செயல்படுவது, சோசியல் மீடியா ட்ரோல் என அனைத்திற்கும் குபேரா மேடையில் வைத்து பதிலடி கொடுத்தார் தனுஷ்.
அவரது உரையில், ”எனக்கு எதிரா நீங்கள் எவ்வளவு வேணாலும் வதந்தி பரப்பலாம். நெகட்டிவிட்டிய spread பண்ணலாம். ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும்போதும் என்னைப் பற்றி நெகட்டிவிட்டி பரப்புங்க.. தம்பிகளா கொஞ்சம் தள்ளிப் போய் விளையாடுங்க ராஜா.. இந்த சர்க்கஸ்லாம் வேணாம்” என்று கூறினார்.
அதோடு, தனது ரசிகர்கள் தன்னுடன் இருக்கும் வரை 4 வதந்திகளைப் பரப்பி தன்னை காலி செய்துவிடலாம் என்று நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் ஏதும் இல்லை என்று கூறியவர், இதன் மூலம் ஒரு செங்ககல்லைக் கூட ஆட்ட முடியாது என்றும் காட்டமாக பதிலடி கொடுத்தார். இப்படியாக, தன்னைச் சுற்றிச் சுழலும் விமர்சனங்களுக்கெல்லாம் ஒரே மேடையில் வைத்து பதிலடிகளைக் கொடுத்த தனுஷ், வழக்கம்போல எண்ணம் போல் வாழ்க்கை என்று ரசிகர்களுக்கு மோடிவேஷனாகவும் பேசி முடித்தார். இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தனுஷுக்கு ஆதரவாக கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர்.