பஞ்சாபை வீழ்த்தி த்ரில் வெற்றி.. நிஜமானது RCB-ன் கோப்பை கனவு.. கண்ணீரில் மூழ்கிய விராட் கோலி!
18வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இதுவரை கோப்பையையே வெல்லாத பெங்களூரு அணியும், பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி, இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த பஞ்சாப் அணி, பெங்களூரு அணியை பேட் செய்ய பணித்தது. அதன்படி, அவ்வணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது. அவ்வணியில் அதிகபட்சமாக விராட் கோலி 43 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் ஹர்ஷ்தீப் சிங் மற்றும் ஜேமின்ஸன் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
பின்னர், 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி, தொடக்க வீரர்கள் நல்ல அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். இதனால் பஞ்சாப் அணி எளிதில் வெற்றிபெற்றுவிடும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் பிரியான்ஸ் ஆர்யா (24), பிரபாப்சிம்ரன் சிங் (26) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் களமிறங்கினார்.
கடந்த போட்டியில் கலக்கிய ஸ்ரேயாஸ் இன்றைய போட்டியில் 1 ரன்னில் விக்கெட்டை இழந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அவர், வெளியேற்றத்திற்குப் பிறகு பஞ்சாப் அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது பரிதவித்தது. 145 ரன்களுக்குள் அது 7 விக்கெட்களை இழந்தது. எனினும், அவ்வணியின் கடைசிக்கட்ட வீரர்கள் அணியை வெற்றிப் பாதைக்கு இழுத்துச் செல்வதில் ஆர்வம் காட்டினர். கடைசி ஓவரில் பஞ்சாப் அணிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், அந்த ஓவரில் 22 ரன்களே எடுக்க முடிந்தது.
இதையடுத்து, 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி த்ரில் வெற்றியைப் பெற்றது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்கு வந்த பஞ்சாப் அணி, கோப்பையை உச்சி முகராமல் போனது அவ்வணி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தது. ஆனால், 17 ஆண்டுகளுக்குப் பிறகு பெங்களூரு அணி கோப்பையை உச்சி முகர்ந்தது. இந்த வெற்றியை இந்தியா மீது 17 முறை படையெடுத்த கஜினி முகம்மதுவுடன் ஒப்பிட்டு வருகின்றனர்.