Talent Scouting இந்த முறை எடுபடுமா?.. தொக்கி நிற்கும் கேள்விகள்.. மும்பை இந்தியன்ஸ் அணி முழு அலசல்

மும்பை முகாமைப் பொறுத்தவரை ஐ.பி.எல் வெறும் மூன்று மாதத் தொடர் அல்ல. அந்த மூன்று மாத பயணத்திற்காக எஞ்சிய ஒன்பது மாதங்கள் உழைப்பவர்கள்
mumbai indians
mumbai indianspt web

பிற அணிகளின் பலம், பலவீனம் குறித்து, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...

கழுகு பார்வை

கழுகுக்கென ஒரு பிரத்யேக குணம் உண்டு. இரையைக் குறிவைத்துவிட்டால் அது காடோ மலையோ நீரோ நிலமோ குறியைத் தப்பவேவிடாது. 'ஒருதடவ முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்கமாட்டேன்' வசனத்தின் வானத்து வெர்ஷன் அது. குஞ்சு பொறிப்பதில் தொடங்கி வேட்டையாடுவது, இணை சேர்வதுவரை தன் இனம் தழைத்திருக்க எந்த எல்லைக்கும் செல்லத் தயங்காத போராளி. ஐ.பி.எல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியும் அப்படித்தான். வெற்றி ஒன்றே அவர்களின் குறிக்கோள்.

மும்பை முகாமைப் பொறுத்தவரை ஐ.பி.எல் வெறும் மூன்று மாதத் தொடர் அல்ல. அந்த மூன்று மாத பயணத்திற்காக எஞ்சிய ஒன்பது மாதங்கள் உழைப்பவர்கள். சின்னச் சின்ன உள்ளூர் போட்டிகள் தொடங்கி உலகமெங்கும் நடக்கும் டி20 தொடர்கள் வரை எல்லாவற்றையும் கழுகுக்கண்ணோடு கவனிப்பவர்கள். 'Talent Scouting' என்கிற வழக்கத்தை முறையாக இந்திய விளையாட்டுலகிற்கு அறிமுகம் செய்துவைத்தவர்கள். பும்ரா, ஹர்திக் பாண்ட்யா போன்றவர்கள் எல்லாம் அப்படியான தேடுதல் வேட்டையில் கண்டெடுக்கப்பட்ட வைரங்கள்தான். இதுவே அவர்களின் வெற்றிக்கான காரணமும் கூட.

mumbai indians
IPL | ‘ஜடேஜாவுக்கு நடந்தது ருத்துராஜுக்கு நடக்கக்கூடாது..’ கடைசி நேரத்தில் தோனி போடும் கணக்கு என்ன?

சின்ன பிளாஷ்பேக்

இந்தமுறை வெற்றிக்காக இன்னும் ஒருபடி மேலே போனார்கள். அதற்கு முன் கடந்த இரு சீசன்களைப் பற்றிய சின்ன பிளாஷ்பேக். 2022 மெகா ஏலத்தின்போது, பார்த்துப் பார்த்து கட்டமைத்த அணியை கலைத்துப்போடவேண்டிய நிலை. உடனடித் தேவையாய் இருந்தது ஒரு வெற்றி. இஷான் கிஷனை 15.25 கோடி கொடுத்து மீண்டும் எடுத்தார்கள். திலக் வர்மா எனும் சென்சேஷனை விரட்டி வாங்கினார்கள். டிம் டேவிட் என்கிற உலகம் சுற்றும் வாலிபனை கூட்டி வந்தார்கள். போக, ஆர்ச்சரையும் சொல்லிவைத்துத் தூக்கினார்கள். 'பும்ராவும் ஆர்ச்சரும் ஒரே டீமா? அப்போ பேட்ஸ்மேன் நிலைமை' என அப்போதே அணிகள் கிலியாகின. ஆனால் போட்ட திட்டம் எதுவும் பலிக்கவில்லை. ஆர்ச்சர், அடுத்த ஆண்டு பும்ரா என தொடர் காயங்கள். பொல்லார்ட் தொடரிலிருந்து ஓய்வு பெற்றார். ரோகித் சர்மாவின் ஃக்ராப்பும் இறங்கிக்கொண்டே போனது. ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதற்கு முன் நடந்திடாதது 2022 சீசனில் நடந்தது. மும்பைக்குதான் கடைசி இடம். கடந்த சீசனிலும் இரண்டாவது குவாலிபையர் மட்டுமே வர முடிந்தது. இந்த 11 ஆண்டுகளில் தொடர்ந்து மூன்றாண்டுகள் மும்பை பைனலுக்குப் போகாமல் இருந்ததும் இதுவே முதல்முறை.

மீண்டும் வந்த ஹர்திக்

தோல்வி முகத்தை மாற்ற ஐ.பி.எல் வரலாற்றின் மிகப்பெரிய டிரேடிங் ஒன்றை சில மாதங்களுக்கு முன் நிகழ்த்திக்காட்டினார்கள். குஜராத் டைட்டன்ஸின் கோப்பை வென்ற கேப்டன் மும்பை இந்தியன்ஸ் கேப்டனானார். இந்திய ஆல்ரவுண்டர், கேப்டன், ஃபினிஷர் என்கிற மூன்று பிளேயர்களின் வெற்றிடத்தை அந்த ஒரே ஒரு ட்ரேட் வழியே நிரப்பினார்கள். Money Heist போல இது Mumbai Heist.அசந்து போயின மற்ற அணிகள்.

mumbai indians
”சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக இருப்பது எனக்கு கிடைத்த பாக்கியம்” - CSK கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

கோப்பை ஒன்றே குறி

ஏலத்திலும் கோட்ஸீ, மலிங்காவை அப்படியே ஜெராக்ஸ் எடுத்தது போல பந்துவீசும் நுவான் துஷாரா, ஆப்கன் ஆல்ரவுண்டர் நபி என தேடித் தேடி வீரர்களை வாங்கினார்கள். அதன்பின் நடந்ததுதான் அதிர்வுகளை உண்டாக்கிய அதிரடி. ஐந்துமுறை கோப்பையை வென்று கொடுத்த ரோஹித்தை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு ஹர்திக்கை கேப்டனாக்கினார்கள். இதன் பின்விளைவுகளைப் பற்றியெல்லாம் அவர்களுக்குத் தெரியாமல் இல்லை. ஆனாலும் இப்படி ஒரு முடிவெடுக்கிறார்கள் என்றால் ஆறாவது முறையாக கோப்பை வெல்ல பெரும் முனைப்போடு இருக்கிறார்கள் என்பது எல்லாருக்கும் தெளிவானது.

பழைய வீரர் புதிய கேப்டனாய், முன்னாள் கேப்டன் சாதாரண முன்கள வீரராய்.. இதற்கிடையே அடுத்த கேப்டனாக தங்களை தகுதிப்படுத்திக்கொண்ட இருவர்... இப்படி ஒரு வித்தியாசமான கூட்டணியோடு களமிறங்குகிறது மும்பை இந்தியன்ஸ். தடைகளைத் தாண்டி கோப்பை வெல்லுமா?

mumbai indians
IPL 2024 | Punjab Kings | ‘ஆல்ரவுண்டர் வேலை - ஆட்கள் தேவை..’ பஞ்சாப்பின் தொடர் தோல்விகளுக்கு காரணம்?

பலம்

அசுரத்தனமான பேட்டிங்

மும்பை இந்தியன்ஸ் ப்ளேயிங் லெவனை அப்படியே எடுத்துக்கொண்டாலும் சரி, இல்லை அதன் இந்திய பிளேயர்களை மட்டும் வைத்து ஒரு டீமை உருவாக்கினாலும் சரி, இன்றைய தேதியில் அது உலகின் எந்த சர்வதேச அணியையும் தோற்கடித்துவிடும் ஆற்றல் கொண்டதாகவே இருக்கும். ரோஹித், பாண்ட்யா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா என டாப் க்ளாஸ் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் சரி அவர்களுக்கு ஆதரவாய் ஆடப்போகும் நபி, டிம் டேவிட் போன்ற ஆல்ரவுண்டர்களும் சரி, ஒற்றையாளாகவே கோப்பையை வென்றுதரக்கூடிய மேட்ச் வின்னர்கள். இவர்களில் யாருடைய ஸ்ட்ரைக் ரேட்டும் 130க்கு குறைந்து இல்லை. எதிரணிக்கு இவர்களை சமாளிப்பது பெரும்பாடாகவே இருக்கும்.

மின்னல் முரளிகள்

பும்ரா ஃபார்முக்குத் திரும்பிவிட்டார் என்பதே மும்பை அணிக்கு மிகப்பெரிய ஆறுதல். போதாக்குறைக்கு போன சீசனின் சென்சேஷன் ஆகாஷ் மத்வாலும் இருக்கிறார். 'அடுத்த தலைமுறை சூப்பர்ஸ்டார்' என சர்வதேச வீரர்களே ஒப்புக்கொள்ளும் தென்னாப்பிரிக்காவின் ஜெரால்ட் கோட்ஸீயையும் போராடி வாங்கிவிட்டார்கள். பவர்ப்ளேயில் பந்தை காலுக்குள் இறக்க பாண்ட்யாவும் ரெடி. இதுபோக இலங்கை சென்சேஷன் நுவான் துஷாரா, இங்கிலாந்தில் வலதுகை பேட்ஸ்மேன்களை சோதிக்கும் லூக் வுட், பும்ராவை தன் ஆதர்ஷமாகக் கருதி பின்பற்றும் தென்னாப்பிரிக்க டீனேஜ் இளைஞன் க்வெனா மபாக்கா என வேகப்பந்திலேயே வெரைட்டி வெரைட்டியான ஆப்ஷன் இருக்கும் லைன் அப் இது.

mumbai indians
IPL 2024 | GT | சுப்மன் கில் தலைமையில் திறமையை நிரூபிக்குமா குஜராத் டைட்டன்ஸ்? பலமும் பலவீனமும்!

பேக்கப் பில்டப்

சூர்யகுமார் யாதவ் ஆடமுடியவில்லையென்றால் அங்கே நேஹல் வதேராவை களமிறக்கலாம். மிடில் ஆர்டர் பேட்டிங் பலமாக வேண்டுமென்றால் ப்ரெவிஸ் எனும் எக்ஸ்ரா ஆப்ஷன் உண்டு. டிம் டேவிட்டுக்கு மாற்றாக ஒரு ஃபினிஷர் வேண்டுமென்றால் ரொமாரியோ ஷெப்பர்ட், பியூஷ் சாவ்லாவின் ஸ்பின் கைகொடுக்கவில்லையென்றால் ஸ்ரேயாஸ் கோபால், குமார் கார்த்திகேயா இருவரில் ஒருவரின் உதவியை நாடலாம். பாஸ்ட் பவுலிங்கில் மேலே சொன்ன ஆப்ஷன்கள். இப்படி பேக்கப் வீரர்களை வைத்தே ஒரு தனி ஐ.பி.எல் அணி உருவாக்கிவிடலாம் எனச் சொல்கிற அளவுக்கு இருக்கிறது மும்பையின் பெஞ்ச் பலம்.

பலவீனம்

இருக்கு ஆனா இல்ல

'இந்த உலகம் நீ ஜெயிச்சுடுவேன்னு சொன்னா கேக்காது, ஆனா நீ ஜெயிச்சுட்டு சொன்னா கேக்கும்' என்பது ரோஹித்தின் வரையில் உண்மை. இப்போதிருக்கும் இந்த அணி அவருக்கென, அவரை மையமாய் வைத்தே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பும்ரா, சூர்யகுமார், இஷான் கிஷன், திலக் என அதன் இந்திய வீரர்கள் அனைவருக்கும் ரோஹித் தான் எல்லாம். இப்படியான செட்டப்பில் திடீரென பாண்ட்யா நுழைந்தால்? அதுவும் அடுத்த கேப்டன்கள் என எதிர்பார்க்கப்பட்ட பும்ரா, சூர்யகுமாரை எல்லாம் ஓரம் தள்ளிவிட்டு 'கேப்டன்' பாண்ட்யாவாக வந்தால்? 'அணி நிர்வாகத்தின் இந்த முடிவில் வீரர்கள் யாருக்கும் உடன்பாடில்லை' என அரசல் புரசலாக செய்திகள் இப்போதுவரை வந்துகொண்டே இருக்கின்றன. போதாக்குறைக்கு பிரஸ்மீட்டில் ரோஹித் சர்மா பற்றிய கேள்விகளை பாண்ட்யா கவனமாய் தவிர்க்க, 'எல்லாம் சரியா இருந்தும் கோ ஆர்டினேஷன் இல்லாம போயிடுமோ' என ரசிகர்கள் பயப்படத் தொடங்கியிருக்கிறார்கள். உள்ளுக்குள் இருக்கும் உரசல்களை எல்லாம் சரிசெய்து எல்லாரையும் அரவணித்துச் செல்ல பாண்ட்யாவால் முடியுமா என்பதில்தான் இருக்கிறது ப்ளே ஆஃப் வாய்ப்புகள்.

mumbai indians
IPL 2024 | Rajasthan Royals | ‘விதை நான் போட்டது’ - இந்தியாவை தாங்கும் ராஜஸ்தான் படை!

ஸ்கைக்கு என்னாச்சு?

டிசம்பரில் கணுக்கால் சர்ஜரி, ஜனவரியில் ஸ்போர்ட்ஸ் ஹெர்னியாவினால் மற்றுமொரு சர்ஜரி என சூர்யகுமார் யாதவின் உடல்நிலை மும்பை நிர்வாகத்தையும் ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. அவர் பயிற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டார் என்றாலும் என்.சி.ஏ அவரின் உடல்தகுதி குறித்து அறிவிக்கப்போகும் ரிப்போர்ட்டை நம்பியே இருக்கிறது அவரின் இந்த ஐ.பி.எல் சீசன். அங்கே க்ரீன் சிக்னல் கிடைக்கும்வரை இங்கே அவரால் ஆடமுடியாது. என்.சி.ஏ அவருக்கு தம்ஸ் அப் காட்டப்போகிறதா இல்லை 'உலககோப்பை டி20க்கு அவர் தேவை, அதனால் அதுவரை ஓய்வெடுக்கட்டும்' என அறிவுறுத்தப்போகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். பேக்கப் ஆப்ஷன்கள் இருந்தாலும் சூர்யா இல்லாத வெற்றிடம் அந்த அணிக்கு சிக்கல்தான்.

ஸ்பின் பஞ்சாயத்து

பளபளவென புதிதாய் வெள்ளையடிக்கப்பட்ட சுவற்றில் சின்னதாய் கருப்புக் கோடு விழுந்தால் எப்படியிருக்கும். அப்படி இருக்கிறது மும்பை இந்தியன்ஸ் லைன் அப்பில் ஸ்பின் அட்டாக். பியூஷ் சாவ்லா அனுபவத்தின் மீது சந்தேகமே இல்லை. கடந்த சீசனில் அவர் கொடுத்தது யாரும் கற்பனையே செய்து பார்த்திடாத கம்பேக். ஆனால் அவர் கடைசியாய் ஆடிய சையது முஷ்டாக் அலி தொடரில் ஆறு போட்டிகளில் வெறும் மூன்றே விக்கெட்கள். ஸ்ரேயாஸ் கோபாலின் சமீபத்திய ஃபார்ம் நன்றாக இருந்தாலும் அவர் போன சீசன் ஆடவே இல்லை. அதற்கு முந்தைய இரண்டு சீசன்களும் சேர்த்தே மூன்று போட்டிகளில்தான் ஆடியிருக்கிறார். குமார் கார்த்திகேயா விக்கெட்கள் எடுக்கும் பவுலர் இல்லை. ஆக நபியை நம்பியே இருக்கிறது ஸ்பின் டிபார்ட்மென்ட்.

mumbai indians
IPL 2024 | அதிசயத்திற்கான காலக்கெடு முடிவாகிவிட்டது... ருத்துவுக்கு கட்டுப்படுமா CSK? டிசைன் எப்படி?

ப்ளேயிங் லெவன்

ரோஹித் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, நேஹல் வதேரா, ஹர்திக் பாண்ட்யா, டிம் டேவிட், முகமது நபி, கோட்ஸீ, பும்ரா, ஆகாஷ் மத்வால், நுவான் துஷாரா

சூர்யகுமார் ஆடுவாரா இல்லையா எனத் தெரியாத நிலையில் அவரிடத்தில் வதேரா இறங்கலாம். ஸ்பின்னை பலமாக்க நபியையும் ஆடவிடுவார்கள் என்றே தோன்றுகிறது. அதனால் ரொமாரியோ ஷெப்பர்ட்டுக்கு அணியில் இடமிருக்காது.

இம்பேக்ட் பிளேயர்கள்

பியூஷ் சாவ்லா - அணிக்கு அனுபவம் வாய்ந்த ஸ்பின்னர் தேவைப்படும்போது!

ஸ்ரேயாஸ் கோபால் - ஒருவேளை பியூஷ் சாவ்லா எதிர்பார்த்தபடி ஆடவில்லையென்றால்!

குமார் கார்த்திகேயா - அணிக்கு ஒரு இடதுகை ஸ்பின்னர் தேவைப்படும்போது!

mumbai indians
IPL 2024 | ஸ்பின்னருக்கு நாங்க எங்க போவோம்? - 2024 Playoff தேறுமா RCB? எங்கு சிக்கல்? விரிவான அலசல்!

தனி ஒருவன்

இந்த ஏழு மாதங்களுக்குள்ளாகவே ஆறு சர்வதேச டி20 தொடர்களில் ஆடிவிட்டார் திலக் வர்மா, அதுவும் 33.60 என்கிற சராசரி, 139.41 என்கிற ஸ்ட்ரைக் ரேட்டோடு. ஐ.பி.எல்லிலும் கடந்த இரண்டு சீசன்களாக அவரின் க்ராஃப் இறங்காமல் ஏறியபடியேதான் இருக்கிறது. உலககோப்பை டி20 தொடருக்கான அணியில் ஒவ்வொரு பொசிஷனுக்கும் ஏகப்பட்ட வீரர்கள் போட்டிபோடும்நிலையில் இந்தத் தொடரில் தன் வழக்கமான ஃபார்மில் திலக் வர்மா பிரகாசித்தால் ஜுன் மாதம் நல்ல செய்தி காத்திருக்கிறது அவருக்கும் நமக்கும்.

'இழப்பதற்கு ஒன்றுமில்லை இனி வெற்றியைத் தவிர' என்கிற மனநிலையோடு தெரிந்தே ரிஸ்க் எடுத்திருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம். மீடியாக்கள் சொல்வது போல அங்கே 'ஆல் இஸ் நாட் வெல்' தானா, இல்லை மும்பை தன் வழக்கமான மேஜிக்கல் டச்சில் எல்லாவற்றையும் சரிசெய்துவிடுமா? கேப்டனாக பாண்ட்யாவால் அகமதாபாத்தில் நிகழ்த்தியதை வான்கடேயிலும் நடத்திக்காட்ட முடியுமா? தொக்கி நிற்கும் பல கேள்விகளோடு காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். பொறுத்திருப்போம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com