rajasthan royals
rajasthan royalspt web

IPL 2024 | Rajasthan Royals | ‘விதை நான் போட்டது’ - இந்தியாவை தாங்கும் ராஜஸ்தான் படை!

கோப்பை வெல்வது, ரெக்கார்டுகள் படைப்பது ஆகியவற்றையெல்லாம் தாண்டி இளம் வீரர்கள் மேல் வெளிச்சம் பாய்ச்சுவது அவர்களின் பிரதான குறிக்கோள். முதல் சீசனிலிருந்தே அவர்களின் அணுகுமுறை அப்படித்தான்.

பிற அணிகளின் பலம் பலவீனம் குறித்து, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...

“விதை நான் போட்டது” - இப்படிக்கு ராஜஸ்தான்

இருந்த துணியை எல்லாம் தம்பிகளுக்காக, அதுவும் அவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு பெரிய சட்டைகளாகத் தைத்துப்போட்டு, தம்பிகள் தூங்கும்போது மழை நீர் தெறித்துவிடக்கூடாது என்பதற்காக இரவெல்லாம் குடைபிடித்து, 'பீஸை எல்லாம் நீங்க சாப்பிடுங்கப்பா. அண்ணனுக்கு குஸ்கா மட்டும் போதும்' என வாழ்வாங்கு வாழ்வாரே 'வானத்தைப் போல' விஜயகாந்த், அதுதான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம்.

கோப்பை வெல்வது, ரெக்கார்டுகள் படைப்பது ஆகியவற்றையெல்லாம் தாண்டி இளம் வீரர்கள் மேல் வெளிச்சம் பாய்ச்சுவது அவர்களின் பிரதான குறிக்கோள். முதல் சீசனிலிருந்தே அவர்களின் அணுகுமுறை அப்படித்தான். விதை காலஞ்சென்ற ஜாம்பவான் வார்னே போட்டது. ரவீந்திர ஜடேஜா தொடங்கி, சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், சேத்தன் சக்காரியா, லேட்டஸ்ட்டாக துருவ் ஜுரேல் வரைக்குமே 'பெயர் சொல்லும் பிள்ளைகளை' இந்திய அணிக்கு அனுப்பி அழகு பார்க்கிறார்கள். இந்த அணுகுமுறையே மற்ற அணி ரசிகர்களுக்கும் ராஜஸ்தானைப் பிடிக்கக் காரணம்.

கடந்த சீசனின் முதல்பாதியில் மின்னல் வேகத்தில் புள்ளிப்பட்டியலில் ஏறினார்கள். பின் ஏறிய வேகத்தில் சறுக்கி ப்ளே ஆஃப் வாய்ப்பை ஜஸ்ட் மிஸ் செய்தார்கள். எனவே ஏலத்திற்கு முன் டீமை பெரிதாக டிஸ்டர்ப் செய்யவில்லை. தங்கள் லைன் அப்பில் பெரிதாக பயன்படுத்திக்கொள்ள முடிந்திடாத படிக்கல்லை லக்னோவிற்கு டிரேட் செய்துவிட்டு அவர்களிடமிருந்து அவேஷ் கானை வாங்கிக்கொண்டார்கள். ஏலத்திற்கு முன்னால் நிர்வாகம் எடுத்த மற்றொரு முக்கிய முடிவு அணிக்கு பேலன்ஸைக் கொண்டுவரக்கூடிய ஆல்ரவுண்டரான ஜேசன் ஹோல்டரை ரிலீஸ் செய்தது. சரி, ஏலத்தில் அந்த பேலன்ஸை சரிசெய்துவிடுவார்கள் என்பதே அப்போது எதிர்பார்க்கப்பட்டது.

ஏலத்தில் நடந்ததென்ன?

பெரிதாக வீரர்களை விடுவிக்காததால் கையிருப்பும் குறைவாகவே இருந்தது. 14.5 கோடி. மூன்று வெளிநாட்டு வீரர்கள் உள்பட எட்டு வீரர்களை இந்தத் தொகைக்குள் எடுக்கவேண்டும். மிடில் ஆர்டர் பவர்ஹிட்டரான ரோவ்மன் பவலை 7.40 கோடி கொடுத்துத் தூக்கினார்கள்.

விதர்பாவின் அதிரடி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சுபம் தூபேவை 5.80 கோடிக்கு எடுத்தார்கள். இங்கிலாந்தின் விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன் டாம்ம் கேட்மோரை பேக்கப்பாக எடுத்தார்கள். இதுபோக தென்னாப்பிரிக்காவின் நான்ரே பர்கர், இந்திய ஆல்ரவுண்டரான அபிட் முஷ்டாக். அவ்வளவுதான்.

இந்த சீசனின் செட்டிலான மிகச் சில அணிகளுள் ஒன்றாக காட்சியளிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் கோப்பையை முத்தமிடுமா?

பலம்

ஸ்டார் பவர்

பட்லர் - ஜெய்ஸ்வால் ஓபனிங், ஒன் டவுன் சாம்சன், மிடில் ஆர்டர் ஹெட்மயர், ரோவ்மன் பவல், துருவ் ஜுரேல். இந்த அட்டகாச ஆறுபேர் கொண்ட லைன் அப் எந்த எதிரணி பவுலிங் கூட்டணிக்கும் அச்சம் வரவைப்பது. இவர்களில் யாராவது இரண்டு பேர் க்ளிக்கானாலே போதும் எதிரில் ஆடுபவர்கள் நம்பிக்கையை கைவிட்டுவிட வேண்டியதுதான். ஜெய்ஸ்வால் முரட்டு ஃபார்மில் இருக்கிறார். பட்லர் போன சீசனில் சுமாராகவே ஆடியிருந்தாலும் அதன்பின் ஆடிய ஆட்டங்களில் ஓரளவு பிக்கப்பாகிவிட்டார். ஐ,பி.எல்லுக்கு பின் ஆடியிருக்கும் 38 இன்னிங்ஸ்களில் 1347 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 146.09. சாம்சனின் ஆட்டத்தில் நிதானம் அதிகமாகியிருக்கிறது. மீதி மூவருக்கும் பந்து சிக்கினால் போதும். பக்கத்து ஊருக்கே பார்சல் செய்துவிடுவார்கள். முழுக்க முழுக்க பேட்டிங்கை நம்பியே இந்தமுறை களமிறங்குகிறது ராயல்ஸ் அணி.

ஸ்பின் கிங்ஸ்

ஒரு டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட், ஒரு டி20 ஸ்பெஷலிஸ்ட், ஒரு ஒன் டே ஸ்பெஷலிஸ்ட் என மூன்று சர்வதேச ஸ்பின்னர்கள் ஆடும் ஒரே ஐ.பி.எல் அணி இந்த சீசனில் ராஜஸ்தான் மட்டுமே. அஸ்வின் கடந்த நான்கு சீசன்களாக 7.5 என்கிற எகானமியையே தக்கவைத்து வருகிறார். சாஹலின் ஐ.பி.எல் டைரியைப் பொறுத்தவரை சுமாரான சீசன் என ஒன்று இல்லவே இல்லை. சீசனுக்கு சராசரியாய் 19 விக்கெட்கள். இப்போது ஐ.பி.எல்லில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பெருமையும் அவருக்கே. 187. இந்த முறை எப்படியும் 200 விக்கெட்களை கடந்துவிடுவார். இன்னொரு ஸ்பின்னர் ஆடம் ஸாம்பா. மிடில் ஓவர்களில் ராஜஸ்தான் இவரை நம்பி பல ஆட்டங்களில் களமிறங்கியது. இந்தமுறையும் ஸாம்பா எல்லா ஆட்டங்களிலும் ஆடமாட்டார் என்றாலும் சென்னை, கொல்கத்தா, லக்னோ ஆடுகளங்களில் களமிறக்கப்பட்ட வாய்ப்புகள் அதிகம்.

பலவீனம்

டெத் ஓவர் பரிதாபங்கள்

பவர்ப்ளே பிரச்னை இல்லை. போல்ட் பார்த்துக்கொள்வார். ஆனால் டெத் ஓவரில் பவுலிங் போடத்தான் அணியில் சரியான ஆள் இல்லை. கடந்த சீசனிலேயே ராயல்ஸ் அணியின் டெத் ஓவர் எகானமி 10.1. இந்தமுறையும் கிட்டத்தட்ட அதே பவுலர்கள்தான் என்பதால் இந்தமுறையும் ரன்களை வாரிக்கொடுக்க வாய்ப்பியிருக்கிறது. அவேஷ் கான் ஒரு ஆப்ஷன் தான். ஆனால் அவருடைய கடந்த சீசன் எகானமியுமே 9.76 என பயமுறுத்தும்வகையில் இருப்பதுதான் சிக்கல். பிரசித் கிருஷ்ணா இடத்தில் ஆடும் சந்தீப் ஷர்மாவுமே சன்ரைஸர்ஸ் அணியில் ஆடியபோது இருந்த ஃபார்மில் தற்போது இல்லை.

ஆல்ரவுண்டர் எங்கேப்பா?

மற்ற ஏரியாக்களில் கில்லி போல ஸ்கோர் செய்தாலும் அதென்னவோ தெரியவில்லை ஆல்ரவுண்டரைத் தேர்ந்தெடுப்பதில் மட்டும் தொடர்ந்து சில சீசன்களாக சொதப்பி வருகிறது ராஜஸ்தான் ராயல்ஸ். இம்பேக்ட் பிளேயர் விதி வந்தது ஒருவகையில் அவர்களுக்கு சாதகமானதுதான் என்றாலும் இன்னும் எத்தனை நாளைக்கு முறையான ஆல்ரவுண்டர் இல்லாமல் ஒப்பேற்றுவார்கள் எனத் தெரியவில்லை.

ரியான் பராங்
ரியான் பராங்

ஏழாவது பொசிஷனில் அஸ்வின் களமிறங்கினால் பேட்டிங் டெப்த் கம்மியாகும். ஏழாவது இடத்தில் இறங்கும் வீரரின் முதல் கடமையே நான்கு ஓவர்கள் கட்டாயம் பவுலிங் போடவேண்டும் என்பதுதான். பல தலைமுறைகளாக அவர்கள் தத்தெடுத்து வளர்க்கும் ரியான் பராங்கை அந்த இடத்தில் இறக்கினால் அவரால் நான்கு ஓவர்கள் பவுலிங் போடமுடியுமா என்பது சந்தேகமே. உள்ளூர் தொடர்களில் சில சீசன்களாக பவுலிங் போட்டு வருகிறார்தான். ஆனால் அது ஐ.பி.எல்லுக்கு போதாது என்றே தோன்றுகிறது. டாப் ஆர்டரில் பவல் அதிகபட்சம் இரண்டு ஓவர்கள் வீசலாம். எனவே எல்லா ஆட்டங்களிலும் இம்பேக்ட் பிளேயராய் ஒரு பவுலரை உள்ளே கொண்டுவரவே வாய்ப்புகள் அதிகம்.

ப்ளேயிங் லெவன்

ஜெய்ஸ்வால், பட்லர், சஞ்சு சாம்சன், ஹெட்மயர், ரோவ்மன் பவல், துருவ் ஜுரேல், ரியான் பராக், அஸ்வின், சாஹல், போல்ட், அவேஷ் கான்.

மேலே சொன்னது இந்தச் சிக்கலைத்தான். எப்படி பார்த்தாலும் ப்ளேயிங் லெவனில் நான்கு முழுநேர பவுலிங் ஆப்ஷன்கள்தான் இருக்கின்றன. இம்பேக்ட் பிளேயராய் வருபவரை வைத்து ஓட்டலாம்தான். ஒருவேளை அவரும் அடி வாங்கினால்? ஆறாவது ஆப்ஷன் என சொல்ல நல்ல பவுலிங் ட்ராக் ரெக்கார்டோடு அணியில் யாருமே இல்லையே.

இம்பேக்ட் பிளேயர்

சந்தீப் ஷர்மா
சந்தீப் ஷர்மா

சந்தீப் ஷர்மா - ஐ,பி.எல் பல சீசன்களாக பார்ப்பவர்களுக்கு இவர் விராட் கோலியின் வில்லனாக பரிச்சயம். கட்டாயம் இம்பேக்ட் ப்ளேயராக பவுலர்தான் ஆடமுடியும் என்பதால் அனுபவம் வாய்ந்த சந்தீப் களமிறங்க வாய்ப்புகள் அதிகம்.

குல்தீப் சென் - 2022 சீசனின்போது எல்லாரையும் திரும்பிப் பார்க்கவைத்தவர். போன சீசனில் ஆடியதே இரண்டு மேட்ச்கள்தான். ஒருவேளை சந்தீப் வேண்டாம் என அணி நிர்வாகம் முடிவெடுத்தால் அடுத்த ஆப்ஷன் குல்தீப் சென் தான்.

தனி ஒருவன்

இந்திய அணியின் அடுத்த சூப்பர்ஸ்டார் எனக் கணிக்கப்படும் ஜெய்ஸ்வால் தான். அவரிடம் பேச்சே இல்லை. ஒன்லி வீச்சுதான். டி20யில் ஓபனிங் இறங்கும் பேட்ஸ்மேன் ஐம்பதுக்கு நெருக்கத்தில் ஆவரேஜ் வைத்திருப்பதெல்லாம் அசாத்தியம் என்றுதான் ஜெய்ஸ்வால் என்ட்ரிக்கு முன்புவரை நினைத்துக் கொண்டிருந்தார்கள் ரசிகர்கள்.

ஜெய்ஸ்வால்
ஜெய்ஸ்வால்

ஐ.பி.எல்லில் அடித்த அடி போதாதென டெஸ்ட், சர்வதேச டி20 என எல்லா பார்மெட்களிலும் அடித்து வெளுக்கிறார். கில், இஷான் கிஷன், கெய்க்வாட் என உலகக்கோப்பை டி20 தொடரின் இளம் ஓபனர் இடத்துக்கு வரிசைகட்டி நிற்கும் வீரர்களில் இப்போதைக்கு முதலிடம் ஜெய்ஸ்வாலுக்குத்தான். இந்த ஐ.பி.எல் அவரின் உலகக்கோப்பை இடத்தை உறுதி செய்யும்.

ரீ - என்ட்ரிக்குப் பிறகான ஆறு ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே ப்ளே ஆப்பிற்கு தகுதி பெற்றிருக்கிறது ராஜஸ்தான். அடுத்த சீசனுக்கு முன் மெகா ஏலம் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இத்தனை மேட்ச் வின்னர்கள் ராஜஸ்தான் அணியில் இருப்பது இதுவே கடைசி முறையாகக் கூட இருக்கலாம். அதனால் இந்தமுறை கோப்பையை வெல்ல முழுமூச்சோடு களமிறங்குவார்கள். அவர்களின் பேட்டிங் அதற்கு நிச்சயம் கைகொடுக்கும். வீக்காக இருக்கும் ஃபாஸ்ட் பவுலிங்கும் மேம்பட்டால் வெற்றி நிச்சயம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com