Asia cup |நீக்கப்படும் வீரர்கள்.. யாருக்கு வாய்ப்பு? தேர்வுப் பணியில் பிசிசிஐ தீவிரம்!
8 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை தொடர், திட்டமிட்டபடி நடைபெற இருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் 28 வரை நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் குரூப் A-வில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய அணிகளும், குரூப் B-இல் வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகளும் இடம்பெற்றுள்ளன. இதில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. தவிர, இரு அணிகளும் சூப்பர் 4 மற்றும் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெறும் எனச் சொல்லப்படுகிறது. இது, ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருப்பதுடன், அரசியல் ரீதியாகவும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், மறக்கமுடியாத இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட இருக்கிறது. இது, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிடிஐயின் அறிக்கையின்படி, அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு ஆகஸ்ட் 19 அல்லது 20ஆம் தேதி ஆசிய கோப்பைக்கான அணியைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது. இது சிறப்பு மையத்தின் (சிஓஇ) விளையாட்டு அறிவியல் குழு அனைத்து வீரர்களின் மருத்துவ அறிக்கையையும் அனுப்பும் நேரத்தைப் பொறுத்தது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் உட்பட சிலர் பெங்களூருவில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், பிசிசிஐ தேர்வுக் குழு இந்த அமைப்பை மாற்ற அதிக ஆர்வம் காட்டாது என்றும், அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் முதல் ஐந்து இடங்களில் இடம் பெற்றுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சீசனில் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடியுள்ளார். அதேபோல் கடந்த ஐசிசி தரவரிசையில் அபிஷேக் ஷர்மா உலகின் நம்பர் 1 டி20 பேட்டர் வரிசையைப் பெற்றுள்ளார். அதேபோல் தற்போதைய டெஸ்ட் தொடர் வரை ஷுப்மன் கில் சாதித்துள்ளார். இதனால், டாப் ஆர்டர்களில் அதிகமான வீரர்கள் உள்ளனர். இது, தேர்வாளர்களுக்குச் சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாக பிசிசிஐ முன்னேற்றங்களை அறிந்த ஒரு வட்டாரம் பிடிஐயிடம் தெரிவித்துள்ளது.
இதனால், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்சனுக்கு ஓர் இடத்தைத் தேர்வு செய்வது கடினமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதேபோல், ஒருநாள் போட்டிகளில் இப்போது முதல் தேர்வு கீப்பராக இருக்கும் கே.எல்.ராகுல்கூட, மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்யாததால், அவர் பரிசீலிக்கப்பட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. அந்த வகையில், சஞ்சு சாம்சன் முதல் கீப்பராக இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றாலும், இரண்டாவது கீப்பரின் இடத்திற்கான தேர்வு ஜிதேஷ் சர்மா மற்றும் துருவ் ஜூரெல் இடையே போட்டி இருக்கும் எனக் கூறப்படுகிறது. கடந்த டி20 தொடரில் ஜூரல் ஒரு பகுதியாக இருந்தபோது, ஐபிஎல் வெற்றியின்போது ஜிதேஷ், ஆர்சிபி அணிக்காகச் சிறப்பாகச் செயல்பட்டார்.
அவர் ஒரு ஃபினிஷராகவும் சிறப்பாகச் செயல்பட்டார். அதேபோல், ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்ட்யா இருந்தாலும், மற்றொரு வீரராக இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடிய சிவம் துபே அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. ஆனால், இங்கிலாந்து தொடரின்போது காயமடைந்த நிதிஷ் குமார் ரெட்டி சரியான நேரத்தில் ஃபினிஷராக இருக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. அணியில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களாக அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பிடிக்க, பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் வேகப்பந்து வீச்சுக்கான இடத்தைப் பிடிப்பர் எனத் தெரிகிறது. மூன்றாவது இடத்திற்கு கடந்த ஐபிஎல்லில் 25 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரசித் கிருஷ்ணாவுக்கும், சில கனமான பந்துகளை வீசும் திறன் கொண்ட ஹர்ஷித் ராணாவுக்கும் இடையே போட்டி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அந்த வகையில் கீழ்க்கண்ட உத்தேச அணி அறிவிக்கப்படலாம் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (WK), திலக் வர்மா, ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, ஹர்ஷித் கிருஷ்ணா, ஜூரல்.