Asia cup | Ind V Pak செப். 14 மோதல்.. எதிர்ப்பைச் சந்திக்கும் அரசியல்!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், இருதரப்பிலான கிரிக்கெட் தொடர்களும் இனி நடைபெறாது எனக் கூறப்பட்டது. இதன் காரணமாக, நடப்பாண்டு ஆசியக் கோப்பை திட்டமிட்டபடி நடைபெறுமா எனக் கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில், திட்டமிட்டப்படி ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, இந்த தொடரில் ஒரே பிரிவில் இந்தியாவும் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளன. இதற்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9 தொடங்கி செப்டம்பர் 28 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் குரூப் A-வில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் நாடுகள் இடம்பெற்றுள்ளன. குரூப் B-ல் வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா - பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற இருப்பதாக அந்த அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவின் எம்பி பிரியங்கா சதுர்வேதி, “அன்புள்ள பிசிசிஐ, பாகிஸ்தானுடனான கிரிக்கெட்டை நீங்கள் எந்த நாட்டிற்கு மாற்றினாலும், இந்தியர்களான நாங்கள் அனைவரும் எதிர்ப்போம். இந்தியர்கள் மற்றும் ஆயுதப்படைகளின் இரத்தத்தால் உங்கள் லாபத்தை நிறுத்துங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
ஜார்கண்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் சுக்தியோ பகத், "விளையாட்டுகளை அரசியலில் இருந்தும் அல்லது மற்ற எல்லாவற்றிலிருந்தும் தனித்தனியாக வைத்திருக்க வேண்டும் என்று பலர் கூறுகிறார்கள், ஆனால் பாகிஸ்தானின் செயல்களால் முழு நாட்டின் தேசபக்தி மற்றும் தேசிய உணர்வுகள் புண்படுத்தப்படுகின்றன. அவர்களுக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுத்த பின்னரே நாம் மேலும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன், “நீங்கள் இருதரப்பு போட்டிகளில் விளையாடவில்லை என்றால், சர்வதேச போட்டிகளிலும் விளையாடக்கூடாது என்பதே எனது நிலைப்பாடு. ஆனால் அரசாங்கமும் வாரியமும் என்ன முடிவு செய்தாலும் நடக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. முன்னதாக, இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி ரத்து செய்யப்பட்டது. பஹல்காம் தாக்குதலைக் காரணம் காட்டி ஹர்பஜன் சிங், இர்பான் பதான் மற்றும் ஷிகர் தவான் போன்ற பல ஓய்வுபெற்ற இந்திய வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.