ஆசியக்கோப்பை: திட்டமிட்டபடி நடைபெறுமா? லீக்கில் மோதும் Ind - Pak..
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும், அதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்றிலேயே மோதலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதனை தொடர்ந்து நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் மோதல் காரணமாக, இந்தாண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் நடைபெறுவது கேள்விக்குறியானது. இந்த சூழலில், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில், நடப்பாண்டிற்கான ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பெற்றுள்ள பிசிசிஐ, வேறு நாட்டில் தொடரை நடத்த ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே ஆசிய கோப்பை தொடர், துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள், ஒரே குரூப்பில் இடம்பெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு அணிகளும் ஒரே சுற்றில் இடம்பெற்றால், அவை க்ரூப் சுற்றிலேயே மோத நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.