2025 ஆசியக் கோப்பை | திட்டமிட்டபடி நடைபெறுமா? தற்போதைய தகவல் என்ன?
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இதற்கு இந்திய எல்லைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியது. இதையும் இந்திய ராணுவம் முறியடித்தது. இதற்கிடையே இருதரப்பில் பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்யப்பட்டு, தாக்குதல் நிறுத்தப்பட்டது. எனினும், இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்பு உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. தவிர, சிந்து நதி நீர் ஒப்பந்தம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இருதரப்பிலான கிரிக்கெட் தொடர்களும் இனி நடைபெறாது எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், ACC மற்றும் ICC நிகழ்வுகளில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் போட்டிகளையும் BCCI புறக்கணிக்கக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இருப்பினும், 2025ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை திட்டமிட்டபடி நடக்க வாய்ப்புள்ளதாகத் தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) செப்டம்பர் மாதம் போட்டியை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. அதேநேரத்தில், இதுகுறித்து இன்னும் உறுதியான முடிவுகள் எதுவும் இறுதி செய்யப்படவில்லை
என்றாலும், அடுத்த வாரம் முறையான முடிவு எடுக்கப்படலாம் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. மேலும், ஆறு அணிகள் கொண்ட போட்டிக்கான அட்டவணையை ஜூலை முதல் வாரத்தில் வெளியிட ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) நம்பிக்கை கொண்டுள்ளது, அப்போது அணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டிக்கான விளம்பர நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. இதில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முன்னணியில் உள்ளது. இருப்பினும் கலப்பின வடிவத்தில் இதை நடத்துவது குறித்து சில விவாதங்களும் உள்ளன.
முதலில், இந்தியா 2025 ஆசியக் கோப்பையை நடத்தும் நாடாக இருந்தத. ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான பதற்றங்கள் ACC புதிய போட்டியாளரைத் தேடவேண்டிய கட்டாயத்தில் உள்ளன. முன்னதாக லீட்ஸில் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் போது, 2025 ஆசியக் கோப்பையின் விளம்பர வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. ACC தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவர் மொஹ்சின் நக்வி தலைமையில் உள்ளது. சமீபத்தில், ஆசியக் கோப்பை ரத்து செய்யப்பட்டாலோ அல்லது ஒத்திவைக்கப்பட்டாலோ ஆகஸ்ட் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸை உள்ளடக்கிய முத்தரப்பு தொடரை ஏற்பாடு செய்ய PCB அதன் ஆப்கானிஸ்தான் சகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.