U19 மகளிர் டி20 WC | 3 லீக் போட்டியிலும் வெற்றி.. சூப்பர் 6 சுற்றுக்கு இந்தியா தகுதி!
ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது, மலேசியாவில் ஜனவரி 18-ம் தேதி முதல் தொடங்கி பிப்ரவரி 2-ம் தேதிவரை நடைபெறுகிறது.
டி20 உலகக்கோப்பையை வெல்ல உலகில் உள்ள 16 நாடுகளான மலேசியா, இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஸ்காட்லாந்து, சமோவா, பாகிஸ்தான், அயர்லாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நேபாளம், நைஜீரியா முதலிய அணிகள் பங்கேற்றுள்ளன.
41 போட்டிகள் நடைபெறவிருக்கும் இந்த தொடரில், இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இலங்கை, மலேசியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், லீக் போட்டிகள் நடந்துவரும் நிலையில், குரூப் ஏ பிரிவில் பங்கேற்ற எதிரணிகளான இலங்கை, மலேசியா, வெஸ்ட் இண்டீஸ் முதலிய 3 அணிகளையும் தோற்கடித்து தோல்வியே பெறாமல் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது இந்திய யு19 மகளிர் அணி
58 ரன்கள் மட்டுமே எடுத்து இலங்கை தோல்வி..
2025 யு19 மகளிர் உலகக்கோப்பையில் இரண்டுமுறை 150 ரன்களுக்கு மேல் அடித்த ஒரே அணியாக இலங்கை சிறப்பாக செயல்பட்டது. அவர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 166 ரன்களும், மலேசியா அணிக்கு எதிராக 162 ரன்களும் பதிவுசெய்திருந்தனர்.
இந்நிலையில் தோல்வியே சந்திக்கா இரண்டு அணிகளுக்கு எதிரான போட்டியாக இன்று இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு எதிராக இன்று நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி இலங்கை பவுலர்களின் தாக்குதலுக்கு தாக்குபிடிக்க முடியாமல் வெறும் 118/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியாவின் தொடக்க வீரர் கோங்கடி திரிஷா 5 பவுண்டரிகள், 1 சிக்சர் என விளாசி 49 ரன்கள் சேர்த்து இந்தியாவை ஒரு ஆரோக்கியமான டோட்டலுக்கு எடுத்துவந்தார்.
119 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி எளிதில் வெற்றிபெற்றுவிடும் என்ற எதிர்ப்பார்ப்பே இருந்தது. ஆனால் இந்திய பவுலர்களின் தரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாத இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 58 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இலங்கையை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி 3 லீக் போட்டிகளிலும் வெற்றிபெற்று சூப்பர் 6 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.