ஹாட்ரிக் விக்கெட்.. 31 ரன்னுக்கு ஆல்அவுட்.. U19 டி20 உலகக்கோப்பையில் IND வீராங்கனை வரலாறு!
ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது, மலேசியாவில் ஜனவரி 18-ம் தேதி முதல் தொடங்கி பிப்ரவரி 2-ம் தேதிவரை நடைபெறுகிறது.
டி20 உலகக்கோப்பையை வெல்ல உலகில் உள்ள 16 நாடுகளான மலேசியா, இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஸ்காட்லாந்து, சமோவா, பாகிஸ்தான், அயர்லாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நேபாளம், நைஜீரியா முதலிய அணிகள் பங்கேற்றுள்ளன.
41 போட்டிகள் நடைபெறவிருக்கும் இந்த தொடரில், இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இலங்கை, மலேசியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் முதலில் நடைபெற்ற லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, இரண்டாவது லீக் போட்டியில் தொடரை நடத்தும் மலேசியா அணியை எதிர்கொண்டு விளையாடியது.
ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வைஷ்ணவி சர்மா.. 31 ரன்னில் சுருண்ட மலேசியா..
இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியை தழுவிய மலேசியா யு19 மகளிர் அணி, இரண்டாவது போட்டியில் இந்தியாவை எதிர்த்து கோலாலம்பூரில் விளையாடியது.
முதலில் விளையாடிய மலேசியா அணி இந்தியாவின் தரமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வெறும் 31 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
13வது ஓவரை வீசிய வைஷ்ணவி சர்மா 2வது, 3வது மற்றும் 4வது பந்துகளில் 2 LBW மற்றும் ஒரு போல்ட் விக்கெட்டை வீழ்த்தி ஹார்ட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றினார். அத்துடன் 4 ஓவரில் வெறும் 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த வைஷ்ணவி 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்.
இதன்மூலம் யு19 மகளிர் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை வைஷ்ணவி சர்மா படைத்தார்.
32 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 17 பந்தில் போட்டியை முடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது.
குரூப் ஏ பட்டியலில் இலங்கை மற்றும் இந்தியா இரண்டு அணிகளும் தோல்வியே தழுவாமல் முதலிரண்டு இடங்களை பிடித்துள்ளன. இரண்டு அணிகளும் தங்களுடைய கடைசி லீக் போட்டியில் ஜனவரி 23-ம் தேதி மோதவிருக்கின்றன.