”இந்தியாவில் WTC இறுதிப் போட்டி நடத்தணும்”.. BCCI-ன் கோரிக்கையை நிராகரித்த ICC.. காரணம் ஏன்?
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் உலகக்கோப்பை வழங்கப்படுவதைப் போன்று, டெஸ்ட் போட்டிகளுக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற கோப்பை வழங்கப்பட்டு வருகிறது. முக்கியமாக, இதன் இறுதிப்போட்டிகள் இங்கிலாந்தில் நடத்தப்பட்டு வருகின்றன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கப்பட்ட 2021ஆம் ஆண்டு சவுத்தாம்ப்டனிலும், 2023 ஓவல் மைதானத்திலும், சமீபத்தில் லார்ட்ஸ் மைதானத்திலும் இறுதிப்போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
அதுபோல் 2027, 2029 மற்றும் 2031 ஆகிய ஆண்டுகளிலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப்போட்டி இங்கிலாந்திலேயே நடத்தப்பட இருக்கிறது. இதற்கான புதிய ஒப்பந்தத்தை, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) ஐசிசியுடன் மேற்கொள்ளவிருக்கிறது. தவிர இதுதொடர்பான அறிவிப்பு, வரும் செப்டம்பர் மாதம் சிங்கப்பூரில் நடக்கவிருக்கும் ஐசிசியின் வருடாந்திர மாநாட்டில் அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி டெஸ்ட் கிர்க்கெட் விளையாடும் எல்லா நாடுகளிலும் சுழற்சி முறையில் நடத்தப்பட வேண்டுமென பிசிசிஐ கருதுகிறது. குறிப்பாக, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இந்தியாவில் நடத்தப்பட வேண்டுமென்பது இந்திய ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. எனினும் இதுதொடர்பாக, பிசிசிஐயின் விண்ணப்பத்தை ஐசிசி நிராகரித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு நடைமுறை காரணங்களைக் கருத்தில்கொண்டு, இங்கிலாந்தில் நடத்துவதே சரியான முடிவு என ஐசிசி எண்ணுகிறதாம். அதன் காரணமாகவே பிசிசிஐயின் முடிவை ஐசிசி நிராகரித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
WTC இறுதிப் போட்டியை நடத்தும் நாடாக ICC இங்கிலாந்தை விரும்புவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, அங்கு ஜூன் மாதத்தில் நடத்தப்படுவதுதான். டெஸ்ட் போட்டிக்கு ஜூன் மாதத்தில் இங்கிலாந்து சிறந்த வானிலையை வழங்குகிறது. இது இங்கிலாந்து கோடையின் தொடக்கமாகும், எனவே, மழையால் போட்டி ரத்து செய்யப்படும் வாய்ப்புகள் குறைவு. மேலும் வெப்பநிலையும் மிக அதிகமாக இல்லை. தவிர, WTC இறுதிப் போட்டிகள் மற்றும் தேசிய அணியின் டெஸ்ட் போட்டிகளின்போது இங்கிலாந்து தொடர்ந்து மைதானங்களில் ரசிகர்களை அதிகளவில் ஈர்க்கிறது. ஐ.சி.சி இங்கிலாந்தை விரும்புவதற்கு தளவாடங்களின் எளிமையும் ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.