டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெறும் விராட் கோலி..? முடிவைப் பரிசீலிக்க சொன்ன பிசிசிஐ!
இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்த அணியுடன் 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்தச் சூழலில் இந்திய அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். எனினும், ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதாக விருப்பம் தெரிவித்துள்ளார்.
அவரது இந்த ஓய்வுக்கு பிசிசிஐ தேர்வுக் குழுவினர் கொடுத்த அழுத்தமே எனக் காரணம் கூறப்பட்டது. அதற்கு, அவருடைய தலைமையிலான கடந்தகால இந்திய அணியின் தோல்விகள் குறித்தும் ஆராயப்பட்டது. ஆனால், இந்தக் கூற்றை பிசிசிஐ மறுத்திருந்தது. ரோகித் சொந்த விருப்பத்தின்பேரிலேயே ஓய்வு பெற்றுள்ளதாகக் கூறி முற்றுப்புள்ளி வைத்தது.
இந்த நிலையில், டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற இருப்பதாக முன்னாள் கேப்டனும், மூத்த வீரருமான விராட் கோலி தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இதுதொடர்பாக விராட் கோலி பொதுவெளியில் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும் இதுகுறித்து அவர் பிசிசிஐயிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், பிசிசிஐ இன்னும் விராட் கோலியை, விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. குறிப்பாக, முக்கியமான வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்கள் வரவிருக்கும் நிலையில், உயர் அதிகாரிகள் கோலியைத் தொடர்பு கொண்டு அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கான சுற்றுப்பயணங்கள் உட்பட, சவாலான வெளிநாட்டுத் தொடரில் இந்தியா களமிறங்க உள்ளது. இதற்கு அவருடைய அனுபவம் தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே அவரை தொடர்ந்து விளையாடும்படி வலியுறுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.
2011ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான விராட் கோலி, இதுவரை 123 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 30 சதங்களுடன் 9,230 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, தற்போதைய இந்திய அணியில் அவரே அனுபவம் வாய்ந்த வீரராகவும் உள்ளார்.