“ஷாட் ஓகே; ஆனா அவரிடம் டெக்னிக் இல்லை” ஸ்ரேயாஸ் தேர்வு செய்யப்படாதது குறித்து முன்னாள் இங்கி. வீரர்!
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய அணி ’ஜுன் 13 முதல் ஆக்ஸ்ட் 4’ வரை 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த பிறகு, யார் கேப்டனாக வழிநடத்தப்போகிறார்? எந்த வீரர்கள் கொண்ட அணியை தேர்வுக்குழு இங்கிலாந்துக்கு அனுப்ப போகிறது போன்ற பலகேள்விகள் எழுந்தன.
இப்படியான சூழலில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணியை அறிவித்த அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு, சுப்மன் கில் தலைமையிலான 18 வீரர்கள் அடங்கிய அணியை அறிவித்தது. இதில் கருண் நாயர், சாய் சுதர்சன் முதலிய வீரர்களுக்கு இடம் வழங்கப்பட்டிருந்தபோதிலும், ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடம் மறுக்கப்பட்டது பல்வேறு விமர்சனங்களை பெற்றுக்கொடுத்தது.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அகர்கர், ஸ்ரேயாஸ் ஐயருக்கான இடம் இந்திய டெஸ்ட் அணியில் இல்லை என பகிரங்கமாக தெரிவித்தார். ஆனால் ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடியிருக்கும் ஸ்ரேயாஸ், அவருடைய ஷார்ட் பால் வீக்னெஷை தவிர்க்கும் வகையிலும் பவுன்சர்களுக்கு எதிராக நல்ல முன்னேற்றம் கண்டுள்ளார்.
இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரை இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் தவிர்த்த இந்திய தேர்வுக்குழுவின் முடிவு சரியானது தான் என்று முன்னாள் இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் பனேசர் கூறியுள்ளார்.
ஸ்ரேயாஸ் ஐயரை தேர்வுசெய்யாதது சரிதான்..
கடந்த 2021-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் அறிமுக போட்டியில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர், முதல் போட்டியிலேயே 105 & 65 ரன்கள் என அடித்து சிறந்த அறிமுகத்தை பெற்றிருந்தார். ஆனால் அவருடைய ஷார்ட் பால் வீக்னஷை பயன்படுத்திகொண்ட அணிகள், டெஸ்ட் ஃபார்மேட்டில் அவருக்கு எதிரான ஆயுதமாக அதை பயன்படுத்தினர்.
இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயரிடம் இங்கிலாந்து நிலைமைகளில் பேட்டிங் செய்யுமளவு டெக்னிக் இல்லை என்றும், அவரை புறக்கணித்த இந்திய அணியின் முடிவு சரியானதுதான் என்றும் முன்னாள் இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் பனேசர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசியிருக்கும் பனேசர், “இந்திய தேர்வுக்குழு எந்த ட்ரிக்கையும் தவறவிடவில்லை என்றே நான் நினைக்கிறேன். ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு சிறந்த வீரர் தான், ஆனால் சீமிங் மற்றும் ஸ்விங்கிங் நிலைமைகளைப் பொறுத்தவரை, அவரை தடுமாறக்கூடிய ஒருவீரராகவே நான் பார்க்கிறேன். இங்கிலாந்து போன்ற நிலைமைகளில் சிறப்பாக விளையாடும் டெக்னிக் அவரிடம் இல்லை. அவர் சரிவரமாட்டார் என இந்திய தேர்வுக்குழு உணர்ந்ததற்கு இதுவே ஒரு காரணம் என்று நான் நினைக்கிறேன்.
ஸ்ரேயாஸ் ஐயர் ஃபிளாட் மற்றும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் மட்டுமே அதிகமான ரன்களை குவித்துள்ளார். அதுவே பவுன்ஸி ஆடுகளங்கள் என்றால் அவரால் ரன்களை அடிக்க முடியவில்லை. அதற்கு காரணம் அவர் பந்தை ஹார்டாக அடிக்க கூடிய வீரர், அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு சாதகமாக மெதுவாக ஆடுவது என்பது முடியாது என நினைக்கிறேன்” என்று பனேசர் கூறியுள்ளார்.
ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் டி20 வடிவத்தில் சதமடித்த போதும் கூட, அவருக்கு டி20 அணியில் இடம்கிடைக்கவில்லை, பிசிசிஐ-ம் அஜித் அகர்கரும் ஸ்ரேயாஸ் ஐயரை வஞ்சிக்கவே செய்கின்றனர் என ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.