வரலாற்று சாதனை.. டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸை 3-0 என ஒயிட்வாஷ் செய்த வங்கதேசம்!
வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் செய்த வங்கதேச அணி டெஸ்ட் தொடரை 1-1 என சமன்செய்தது மட்டுமில்லாமல், டி20 தொடரை 3-0 என ஒயிட்வாஷ் செய்து மிகப்பெரிய வெற்றிப் பயணமாக மாற்றியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிய வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடியது.
இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 1-1 என வெற்றிபெற்று இரண்டு அணிகளும் சரிசம பலத்தை வெளிப்படுத்தின. முதல்முறையாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் டெஸ்ட் போட்டியை வென்று அசத்தியது வங்கதேச அணி.
அதற்குபிறகு நடைபெற்ற ஒருநாள் தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி 3-0 என அசத்தலான வெற்றிபெற்றது.
இந்நிலையில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்ற நிலையில் முதலிரண்டு போட்டிகளையும் வென்று 2-0 என முன்னிலை வகித்த வங்கதேசம், இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் வெற்றிபெற்று வரலாற்று வெற்றியை பதிவுசெய்துள்ளது.
சிறந்த வீரர் மெஹிதி ஹாசன், ஜாக்கர் அலி.. 3-0 என வெற்றி!
மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியில், தொடக்க வீரராக விளையாடிய பர்வேஸ் ஹொசைன் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விளாசி 39 ரன்களுடன் நல்ல தொடக்கத்தை கொடுத்தார்.
இடையில் வங்கதேசம் விக்கெட்டுகளை இழந்தாலும் மிடில் ஆர்டர் வீரராக வந்த ஜாக்கர் அலி 6 சிக்சர்களை பறக்கவிட்டு 41 பந்தில் 72 ரன்கள் சேர்க்க 20 ஓவர் முடிவில் 189 ரன்கள் என்ற நல்ல டோட்டலை சேர்த்தது வங்கதேசம்.
190 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, சீட்டுக்கட்டை போல விக்கெட்டுகளை சரியவிட்டு 109 ரன்களுக்கே சுருண்டது. இதன்மூலம் 80 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்ற வங்கதேசம் 3-0 என ஒயிட்வாஷ் செய்து முதல்முறையாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் டி20 தொடரை வென்று சாதனை படைத்தது.
ஆட்டநாயகனாக ஜாக்கர் அலியும், தொடர் நாயகனாக சுழற்பந்துவீச்சில் அசத்திய மெஹிதி ஹாசனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.