’பேட்டிங் வெறி ஊறிப்போன ஒருத்தரால தான்..’ 42 வயதில் 37 பந்தில் சதம்.. மிரட்டிய ஏபிடி வில்லியர்ஸ்!
லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் தொடரில் தென்னாப்பிரிக்கா வீரர் ஏபிடி வில்லியர்ஸ் 37 பந்தில் சதமடித்து மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 42 வயதிலும் 277 ஸ்ட்ரைக்ரேட்டுடன் 111 ரன்கள் குவித்த அவர் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் 2026 தொடரானது கடந்த அக்டோபர் 3ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் இந்தியா சாம்பியன்கள், வங்கதேச சாம்பியன்கள், ஆஸ்திரேலியா சாம்பியன்கள், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்கள் என 6 லெஜெண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன்ஸை எதிர்த்து தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் விளையாடியது. பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டேவிட் வார்னர் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி 20 ஓவரில் 209 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஆஸ்திரேலியா வீரர் ஆர்கி ஷார்ட் 66 ரன்கள், வார்னர் 48 ரன்கள் அடித்தனர்.
210 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 15.4 ஓவரிலேயே இலக்கை எட்டி மிரட்டலான வெற்றியை பதிவுசெய்தது. தென்னாப்பிரிக்கா அணியில் 360 வீரரான ஏபிடி வில்லியர்ஸ் மரண பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 37 பந்தில் சதமடித்த அவர் 11 சிக்சர்கள் 6 பவுண்டரிகள் என வானவேடிக்கை காட்டி 40 பந்தில் 277 ஸ்ட்ரைக்ரேட்டுடன் 111 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டி20 பேட்டிங்கில் சரவெடிக்கு பெயர் போன ஏபிடி வில்லியர்ஸ் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும் 42 வயதில் இப்படியான பேட்டிங்கை வெளிப்படுத்தியிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் தள்ளியுள்ளது.

