கொல்கத்தாவில் மெஸ்சி: அவரது அறைக்கு அருகில் தங்க முட்டி மோதும் ரசிகர்கள்! ஹோட்டலில் பரபரப்பு
செய்தியாளர் - ஜெ. தமிழரசன்
அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி, இந்தியாவில் சுற்றுப்பயணமாக கொல்கத்தா வந்துள்ளார். அவர் தங்கியுள்ள ஹயட் ரீஜென்சி ஹோட்டலில், அறை எண் 730-ல் பலத்த பாதுகாப்புடன் தங்கவைக்கப்பட்டுள்ளார். இந்த அறையின் வாடகை ரூ.1,42,500 எனக் கூறப்படுகிறது. மெஸ்ஸியை காண ரசிகர்கள் பெரும் தொகை செலவழித்து அருகில் இருக்கும் அறைகளில் தங்கியுள்ளனர்.
புகழ்பெற்ற கால்பந்து வீரரான அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி இந்தியாவில் G.O.A.T. Tour of India என்ற பெயரில் 3 சுற்றுப் பயணத்திற்காக இன்று (சனிக்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் கொல்கத்தாவுக்கு வந்தடைந்தார். அப்போது, கொல்கத்தா விமான நிலையத்தில் ஏராளமான மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக அவர் விமான நிலையத்தின் பின்புறம் வழியாக அவர் தங்க உள்ள ஹோட்டலுக்கு சென்றார்.
மெஸ்ஸி தங்குவதற்காக கொல்கத்தா சால்ட்லேக் பகுதியில் உள்ள ஹயட் ரீஜென்சி ஹோட்டலில் (Hyatt Regency,Kolkata) அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஹயட் ரீஜென்சி ஹோட்டல் லாபி முழுவதும் ரசிகர்கள் “மெஸ்சி! மெஸ்சி!” என்று கூச்சலிட்டபடி வழித்தடங்களெங்கும் ஓடிக்கொண்டிருந்ததால் சற்று குழப்பமான சூழ்நிலை உருவானது.. அந்த கோஷங்கள் விடியற்காலையை கடந்தும் எதிரொலித்தன.
மெஸ்ஸி தங்கியுள்ள அறை எண்?
ஹயட் ரீஜென்சி ஹோட்டலின் அறை எண் 730-ல் மெஸ்ஸி தங்குவதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், அவர் தங்கியிருந்த ஹோட்டலின் 7-வது தளத்திற்கு யாரும் செல்ல முடியாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. மெஸ்ஸி தங்கியுள்ள அறை ஸ்யூட் ரூம் எனப்படும் ஹோட்டல் அறை. இந்த அறை சாதாரண அறையை விட பெரிய, பல அறைகள் கொண்ட (படுக்கையறை, வரவேற்பறை, சில சமயம் சமையலறை) சொகுசு தங்குமிடமாகும். இந்த நிலையில் மெஸ்ஸி தங்கியுள்ள அறையின் வாடகை குறித்து சமூக வலைதளங்களில் பலவித தகவல்கள் உலவி வருகின்றன.
ஒரு நாள் கட்டணம் என்ன?
மெஸ்ஸி தங்கியுள்ள அறையின் துல்லியமான விலை உறுதியாக தெரியாத நிலையில், ஹோட்டலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டிசம்பர் 13 (சனிக்கிழமை) அன்று பிரெசிடென்ஷியல் ஸ்யூட் (சிறிய சமையலறை, தனி அமர்வு அறை, தனி பணிப்பகுதி, எட்டு பேர் அமரக்கூடிய உணவறை) அறைகளில் பதிவு செய்ய முடியாது என்று காட்டப்படும் நிலையில், டிசம்பர் 14 அன்று ஒரு நாளுக்கான அதன் விலை ரூ.1,42,500 எனக் காட்டப்படுகிறது. மெஸ்ஸி தங்கிவிருக்கும் ஹோட்டல் குறித்த தகவல் வெளியான நிலையில், மெஸ்ஸியைக் காண அவர் அறை அருகே உள்ள அறைகளில் அவரின் ரசிகர்கள் சிலர், பெரும் தொகையினை செலவழித்துஅறை எடுத்து தங்கியிருக்கின்றனர்.
இதனையடுத்து, கொல்கத்தாவின் லேக் டவுனில் உள்ள ஸ்ரீ பூமி ஸ்போர்ட்டிங் கிளப்பில் நிறுவப்பட்டுள்ள மெஸ்ஸியின் 70 அடி உயர சிலையை திறந்துவைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், தன்னுடைய சிலையை திறந்துவைத்தார். தொடர்ந்து, சால்ட் லேக் மைதானத்தில் நிரம்பியிருந்த ரசிகர்களை பார்ப்பார் என சொல்லப்பட்ட நிலையில், மைதானத்தில் ரசிகர்கள் உற்சாகத்துடன் குழுமியிருந்தனர். ஆனால் அவர் பாதியிலேயே வெளியேறியதால் மைதானத்தில் இருந்த பொருட்களை எல்லாம் ரசிகர்கள் சூறையாடினர். இந்நிலையில், கொல்கத்தா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மெஸ்ஸி அடுத்ததாக ஹைதரபாத் செல்கிறார்,
முன்னதாக, 14 ஆண்டுகளுக்கு பின்பு இந்தியா வந்திருக்கும் மெஸ்ஸி, 3 நாள் சுற்றுப்பயணத்தில் கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை மற்றும் புது தில்லி ஆகிய நான்கு நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொல்கத்தாவில் அவரைக் காண அவரது ரசிகர்கள் குவிந்திருந்தனர்.

