’தம்மாத்தூண்டு ஆங்கர் தான்..’ 14 வயதில் உலக சாதனை படைத்த சூர்யவன்ஷி!
2025 யு19 ஆசியக்கோப்பையில் இந்திய அணியின் வைபவ் சூர்யவன்ஷி, யுஏஇ அணிக்கு எதிராக 95 பந்தில் 171 ரன்கள் குவித்தார். 14 சிக்சர்கள், 9 பவுண்டரிகள் அடித்த அவர் பல்வேறு சாதனைகளை முறியடித்தார்.
2025 யு19 ஆசியக்கோப்பை தொடர் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாள், மலேசியா, யுஏஇ, இலங்கை உள்ளிட்ட 8 அணிகளுக்கு இடையே இன்று டிசம்பர் 12 முதல் டிசம்பர் 21ஆம் தேதிவரை துபாயில் நடைபெறுகிறது.
இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு குரூப் ஏ-ல் இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, மலேசியா அணிகளும், குரூப் பி-ல் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, மலேசியா அணிகளும் இடம்பிடித்துள்ளன.
இந்நிலையில் நேற்று தொடங்கிய ஆசியக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி யுஏஇ அணியையும், பாகிஸ்தான் அணி மலேசியாவையும் எதிர்த்து விளையாடின. 433 ரன்கள் குவித்த இந்தியா யுஏஇ அணியை 234 ரன்கள் வித்தியாசத்திலும், 345 ரன்கள் குவித்த பாகிஸ்தான் மலேசியாவை 48 ரன்னில் சுருட்டி 297 ரன்கள் வித்தியாசத்திலும் அபார வெற்றியை பதிவுசெய்தன.
வைபவ் சூர்யவன்ஷி படைத்த உலகசாதனை..
2025 யு19 ஆசியக்கோப்பையின் முதல் போட்டியில் யுஏஇ அணிக்கு எதிராக அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி, 95 பந்தில் 171 ரன்களை குவித்து மிரட்டிவிட்டார். இதில் 14 சிக்சர்களும், 9 பவுண்டரிகளும் அடிக்கப்பட்டன. இரட்டை சதமடித்து வரலாறு படைப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 29 ரன்னில் வாய்ப்பை தவறவிட்டார்.
இந்தப்போட்டியில் 14 சிக்சர்கள் அடித்ததன் மூலம் யூத் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர்கள் அடித்த வீரராக உலகசாதனை படைத்தார். ஏற்கனவே 2008-ல் ஆஸ்திரேலியா வீரர் மைக்கேல் ஹில் அடித்த 12 சிக்சர்கள் சாதனையை முறியடித்தார்.
அதுமட்டுமில்லாமல் யு19 ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 50 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். 57 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
அதுபோக யு19 ஆசியக்கோப்பையில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர், ஒரு சீசனில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் முறியடித்து அசத்தியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு சையத் முஷ்டாக் அலியில் சதமடித்த இளம்வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார் சூர்யவன்ஷி.

